புதிய தலைமை செயலகம்.. ’ஆதவ் அர்ஜூனா சொல்வது பொய்’.. திமுக கண்டனம்

Published On:

| By Mathi

aadhav arjuna-DMK

புதிய தலைமை செயலகம் தொடர்பாக பொதுப் பணித்துறை அமைச்சர் ஆதவர் அஜூனா தெரிவித்த கருத்துகளுக்கு திமுக கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆதவ் அர்ஜூனா பேசியது என்ன?

மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, “புதிய தலைமைச் செயலகம் தொடர்பாகவும் பேசுகிறார்கள். ஒரு திட்டம் என்றால் முதலில் DPR – Detailed Project Report தயாரிக்கப்படும். அதன் பிறகுதான் அதைச் செய்யலாமா, வேண்டாமா என்று முதலமைச்சர் முடிவு செய்வார். மீனவ சகோதரர்கள் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள். அவர்களுடைய கருத்தையும் கேட்க வேண்டும். மக்களைப் பாதிக்கும் வகையில் எதையும் செய்யக்கூடாது என்பதுதான் எங்கள் நிலைப்பாடு” என கூறியிருந்தார்.

ADVERTISEMENT

திமுக கண்டனம்

இதற்கு திமுகவின் சட்டத்துறை இணை செயலாளரும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளருமான இ.பரந்தாமன் வெளியிட்ட அறிக்கை: வாயை திறந்தாலே பொய் என்பதற்கு உதாரணமாக வாழும் அமைச்சரின் லேட்டஸ்ட் பொய். பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டும் முடிவை முதலமைச்சர் விஜய் இன்னும் எடுக்கவில்லையாம்.

ஏமாற்றி பழகிவிட்டோம் என்பதற்காக, எதை சொன்னாலும் நம்பி ஏமாந்து விடுவார்கள் என்று மக்களை ஏளனமாக நினைப்பதா ?

ADVERTISEMENT

எந்த இடத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்டுவது என ஆராய ஒரு குழுவை அமைத்து, இந்த இந்த இடங்களை ஆராய்ந்து சொல்லுங்கள் என இடம் தேர்வு செய்வதற்கான அரசாணை வெளியிடப்பட்டிருந்தால், முதலமைச்சர் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று சொல்வதில் ஒரு நியாயம் இருக்கிறது.

ஆனால், இடத்தை முடிவு செய்து, இத்தனை லட்சம் சதுர அடியில் கட்டடம் கட்டுகிறோம் அதில், வருவாய்த்துறைக்கு சொந்தமான இடம் எவ்வளவு, வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான அரசு நிலம் எவ்வளவு என்பது வரைக்கும் விரிவாக 25.55 ஏக்கர் நிலத்தில், பட்டினப்பாக்கத்தில், ஃபோர்ஷோர் எஸ்டேட்டில், 1,200 கோடியில் தலைமைச் செயலகம் கட்டப்படும் என்று ‘in-principle approval’ கொடுத்த ஓர் அரசாணை வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

இப்படி ஓர் ஆணை முதலமைச்சருக்கு தெரியாமல் எப்படி வர முடியும்? அல்லது முதலமைச்சரை டம்மியாக வைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தைக் கட்டும் பணிகளை மேற்கொள்ளும் சக்தி எது?

எல்லா தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி மீனவர்கள் வாழ்வாதாரத்தை அழித்து, அவர்கள் வயிற்றில் அடித்து தலைமைச் செயலகம் கட்ட முதல்வருக்கு கூட தெரியாம அறிவிக்கும் அதிகாரம் உள்ள “Super CMs”யார்?

பொய் சொல்லி, மடை மாற்றி மக்களை ஏமாற்றும் போக்கை தவெக நிறுத்திக்கொள்ள வேண்டும். நேர்மையாக மக்களை எதிர்கொண்டு பதில் சொல்ல வேண்டும்.

மீனவர்கள் நலனும், வாழ்வாதாரமும் பாதிக்கும் எனில் கழகம் அவர்களுக்கு எந்த எல்லைக்கும் சென்று துணை நிற்கும். இவ்வாறு இ.பரந்தாமன் தெரிவித்துள்ளார்.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம்

சென்னையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் சதுர அடியில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என்று முதல்வர் விஜய் செப்டம்பர் 3-ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவித்தார். பின்னர் பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த்துறைக்குச் சொந்தமான 25.55 ஏக்கர் நிலத்தைத் தேர்வு செய்து செப்டம்பர் 9-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.

இதற்கு பட்டினப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புதிய வளாகத்தால் கடலுக்குச் சென்று வருவதில் கட்டுப்பாடுகள் ஏற்படலாம், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம், Loop Road பகுதியில் தொழில் செய்யும் மீனவ வியாபாரிகள் பாதிக்கப்படலாம் என்பது அவர்களின் முக்கிய அச்சமாக உள்ளது. இதுதொடர்பாக மீனவர்கள் கருப்புக்கொடி போராட்டத்திலும் ஈடுபட்டனர். ஆளும் தவெக அரசுக்கு ஆதரவு தரும் இடதுசாரி கட்சிகள் உட்பட பெரும்பாலான அரசியல் கட்சிகள், விஜய் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share