விஜய்யால் புதிய தலைமை செயலகத்தை உருவாக்க முடியுமா? எதிர்கொள்ள போகும் சவால்- விரிவான அலசல்!

Published On:

| By Mathi

Vijay’s New Secretariat

Vijay’s New Secretariat: தமிழக சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்துக்காக ரூ.1,200 கோடியில் புதிய ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் விஜய் சட்டசபையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை பட்டினப்பாக்கத்தில் 25.55 ஏக்கரில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை இன்று (செப்டம்பர் 9) வெளியிடப்பட்டுள்ளது.

சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 15 தளங்கள் கொண்டதாக புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகத்தை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடம் வங்காள விரிகுடாவுக்கு மேற்கிலும், அடையாறு முகத்துவாரத்துக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.

ADVERTISEMENT

நிலம் அரசுக்குச் சொந்தமானதாக இருந்தாலும், கடற்கரையை ஒட்டிய பட்டினப்பாக்கத்தில் இவ்வளவு பெரிய கட்டுமானத்தை மேற்கொள்வதற்கு கடலோர ஒழுங்குமுறை மற்றும் சுற்றுச்சூழல் விதிகளின்படி தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும்.

இதில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் பங்கு என்ன? இந்தத் திட்டம் மத்திய அரசின் நேரடி ஒப்புதலுக்குச் செல்லுமா? மாநில அளவிலேயே அனுமதி பெற முடியுமா? மாநில அளவில் அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் மத்திய அரசு தலையிட முடியுமா? என்ற கேள்விகள் எழுகின்றன.

ADVERTISEMENT

CRZ வரைபடம் என்றால் என்ன?

விஜய் அரசு புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்குத் தேர்வு செய்துள்ள பட்டினப்பாக்கம், கடற்கரையை ஒட்டிய பகுதி. இத்தகைய கடலோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் பெரிய கட்டுமானத் திட்டங்களில் முக்கியமாகக் கவனிக்கப்படுவது CRZ வகைப்பாடு.

CRZ வரைபடம் (Coastal Regulation Zone Map) என்பது கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் எந்த நிலம் எந்த CRZ வகைப்பாட்டுக்குள் வருகிறது, அங்கு எந்த வகையான வளர்ச்சிப் பணிகளுக்கு என்ன கட்டுப்பாடுகள் அல்லது அனுமதி நிபந்தனைகள் பொருந்தும் என்பதை அறிய உதவும் அதிகாரப்பூர்வ வரைபடமாகும்.

ADVERTISEMENT

தமிழகத்தில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் கட்டிடங்கள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளை ஒழுங்குபடுத்துவதற்கு தற்போது 2011 கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அறிவிக்கையின் கீழான விதிகளே பின்பற்றப்படுகின்றன.

2019 CRZ அறிவிக்கை வெளியிடப்பட்டிருந்தாலும், அதற்கேற்ப தயாரிக்கப்படும் Coastal Zone Management Plan (CZMP) அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தமிழகத்தில் அது நடைமுறைக்கு வரும் என்று தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. அதுவரை 2011 CRZ அறிவிக்கையே பின்பற்றப்படுகிறது.

500 மீட்டர் விதி

2011 CRZ விதிகளின்படி, கடற்கரையில் கடல் அலை அதிகபட்சமாக வந்து சேரும் எல்லை HTL (High Tide Line) எனப்படுகிறது. அந்த HTL-லிருந்து நிலத்தை நோக்கி 500 மீட்டர் வரையிலான கடலோரப் பகுதி CRZ வரம்புக்குள் வருகிறது.

ஆறு, கழிமுகம், ஓடை போன்ற கடல் அலை ஏறி இறங்கும் நீர்நிலைகளுக்கு இதே 500 மீட்டர் விதி அப்படியே பொருந்தாது. அத்தகைய நீர்நிலைகளில் HTL-லிருந்து 100 மீட்டர் அல்லது அந்த நீர்நிலையின் அகலம்- இதில் எது குறைவோ அந்த அளவு CRZ வரம்பாகக் கணக்கிடப்படுகிறது.

இதனால் புதிய தலைமைச் செயலகத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டினப்பாக்கத்தின் நிலத்தின் சர்வே எண்கள், அங்கீகரிக்கப்பட்ட கடலோர மண்டல மேலாண்மைத் திட்ட (Coastal Zone Management Plan – CZMP) வரைபடத்தில் எந்த CRZ வகைப்பாட்டுக்குள் வருகின்றன என்பதைப் பார்க்க வேண்டியது முக்கியமாகிறது.

பட்டினப்பாக்கம் நிலத்தைப் பொறுத்தவரை கடல் மட்டுமல்ல; அருகில் அடையாறு முகத்துவாரமும் உள்ளது. எனவே கடற்கரையிலிருந்து இந்த நிலம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை மட்டுமல்லாமல், அடையாறு முகத்துவாரத்தின் அலைத் தாக்கத்துக்குட்பட்ட பகுதியிலிருந்து திட்ட நிலம் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதையும் CRZ விதிகளின்படி கணக்கிட வேண்டும்.

2011 CRZ அறிவிக்கையின் முழு விவரம்:

பட்டினப்பாக்கம் எந்த CRZ வகைப்பாட்டில்?

தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்தின் அங்கீகரிக்கப்பட்ட Coastal Zone Management Plan (CZMP) வரைபடங்களில் பட்டினப்பாக்கம்–Foreshore Estate பகுதியும் இடம்பெற்றுள்ளது.

இந்தப் பகுதிக்கான TN-109 வரைபடத்தில், கடற்கரையை ஒட்டிய நகர்ப்புறப் பகுதிகள் CRZ-II வகைப்பாட்டில் காட்டப்பட்டுள்ளன.

CRZ-II என்பது ஏற்கெனவே கட்டிடங்கள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வளர்ச்சியடைந்த நகர்ப்புற கடலோரப் பகுதிகளைக் குறிக்கிறது. ஆனால் CRZ-II பகுதிக்குள் இருப்பதால் எந்தக் கட்டுமானத்தையும் தடையின்றி மேற்கொள்ளலாம் என்று பொருள் அல்ல. அந்தப் பகுதிக்குப் பொருந்தும் CRZ கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதி நிபந்தனைகளைப் பின்பற்ற வேண்டும்.

அதேநேரத்தில் TN-109 வரைபடத்தை மட்டும் வைத்து புதிய தலைமைச் செயலகத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ள ஒவ்வொரு சர்வே எண்ணும் முழுமையாக CRZ-II பகுதிக்குள்தான் வருகிறது என்று சொல்லிவிட முடியாது.

அதற்கு திட்ட நிலத்தின் சர்வே எல்லைகள், HTL–LTL கோடுகள் மற்றும் CRZ வகைப்பாடுகள் ஆகியவற்றை 1:4000 அளவிலான திட்டத்துக்கான CRZ வரைபடத்தில் பொருத்திப் பார்த்து உறுதி செய்ய வேண்டும். இந்த வரைபடமே புதிய தலைமைச் செயலக நிலத்தின் துல்லியமான CRZ நிலையைத் தீர்மானிப்பதில் முக்கிய ஆவணமாக இருக்கும்.

புதிய தலைமைச் செயலகத்துக்கான நிலம்

விஜய் அரசு கட்டும் புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகத்துக்காக சென்னை மயிலாப்பூர் டவுனில் (Mylapore Town) உள்ள நிலங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.

செப்டம்பர் 8-ஆம் தேதி வெளியிடப்பட்ட G.O.(Ms) No.564 அரசாணையில், புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகத்துக்காக அடையாளம் காணப்பட்ட நிலங்களின் முழு விவரங்களும் பட்டியலிடப்பட்டுள்ளன.

இதன்படி, T.S.No.4593/1, 4593/29, 4593/33 ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய நிலம் 21.37 ஏக்கர், T.S.No.4592-ல் 0.39 ஏக்கர், சென்னை மாநகராட்சிக்குச் சொந்தமான T.S.No.4593/2-ல் 0.93 ஏக்கர், வருவாய்த் துறைக்குச் சொந்தமான T.S.No.4592/1 முதல் 4592/85, 4593/2 வரையிலான நிலங்களில் 1.73 ஏக்கர், அரசு–தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் T.S.No.7588/2-ல் 1.13 ஏக்கர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி புதிய சட்டப்பேரவை–தலைமைச் செயலக வளாகத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ள நிலத்தின் மொத்தப் பரப்பளவு 25.55 ஏக்கர்.

இந்த நிலங்களில் சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டுமானப் பரப்பில், அனைத்து நவீன வசதிகளுடன் புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தைக் கொண்ட ஒருங்கிணைந்த வளாகத்தை அமைப்பதற்கான அடுத்தகட்ட பணிகளைத் தொடங்க அரசு கொள்கை அளவிலான ஒப்புதலை (In-Principle Approval) வழங்கியுள்ளது.

மேலும், திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் மதிப்பீடுகளை மூன்று மாதங்களுக்குள் சமர்ப்பிக்க பொதுப்பணித்துறைக்கு அரசாணையில் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலங்கள் சென்னை மாநகராட்சியின் ஆவணத்திலும் இடம்பெற்றுள்ளன.

இந்த நிலத்தில் தலைமைச் செயலகத்தைக் கட்ட முடியுமா?

புதிய தலைமைச் செயலகத்துக்காக அடையாளம் காணப்பட்டுள்ள நிலங்கள் CRZ வரம்புக்குள் வருகின்றனவா, வந்தால் எந்த CRZ வகைப்பாட்டுக்குள் வருகின்றன, அவற்றில் கட்டுமானம் அமையவுள்ள பகுதி எது என்பதன் அடிப்படையில்தான் புதிய தலைமைச் செயலகத்துக்குப் பொருந்தும் CRZ கட்டுப்பாடுகள் மற்றும் அனுமதி நடைமுறைகள் தீர்மானிக்கப்படும்.

CRZ வரம்புக்குள் ஒரு நிலம் இருப்பதாலேயே அங்கு கட்டுமானம் முற்றிலும் தடை செய்யப்படுவதில்லை. மத்திய அரசு வகுத்துள்ள CRZ விதிகளின்படி, அந்த நிலம் எந்த CRZ வகைப்பாட்டுக்குள் வருகிறது என்பதைப் பொறுத்து அங்கு என்ன கட்டலாம், எந்த நிபந்தனைகளுடன் கட்டலாம் என்பது தீர்மானிக்கப்படுகிறது.

அதாவது CRZ விதிகளை வகுப்பது மத்திய அரசு. தமிழகத்தில் அந்த விதிகளின் அடிப்படையில் திட்டத்தை ஆய்வு செய்து உரிய அனுமதி நடைமுறைக்கு எடுத்துச் செல்வதில் தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (TNSCZMA) முக்கியப் பங்கு வகிக்கிறது.

CRZ அனுமதி எப்படி பெறப்படுகிறது?

CRZ வரம்புக்குள் வரும் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கு, அந்தத் திட்டத்துக்குப் பொருந்தும் விதிகளின்படி முன்கூட்டியே CRZ அனுமதி பெற வேண்டும்.

CRZ அனுமதிக்கான விண்ணப்பத்துடன், அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் தயாரித்த 1:4000 அளவிலான HTL–LTL வரைபடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். அந்த வரைபடத்தில் திட்டத்தின் அமைவிடம், CRZ வகைப்பாடு உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற வேண்டும்.

இதனுடன் திட்டத்துக்குப் பொருந்தும் வகையில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை, பேரிடர் மேலாண்மை அறிக்கை, அபாய மதிப்பீட்டு அறிக்கை மற்றும் மேலாண்மைத் திட்டம் உள்ளிட்ட ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

முதலில்

  • மாவட்ட கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் (DCZMA) திட்டத்தைப் பரிசீலித்து பரிந்துரை செய்யும்
  • அதன் பிறகு TNSCZMA திட்ட நிலத்தின் CRZ வகைப்பாடு, HTL–LTL வரைபடம், கட்டுமான அமைவிடம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யும்.

TNSCZMA தனது பரிந்துரையை வழங்கிய பின்னர், திட்டத்தின் தன்மை மற்றும் அதற்குப் பொருந்தும் விதிகளைப் பொறுத்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC), மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் (SEIAA) அல்லது CMDA/DTCP போன்ற சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அனுமதி நடைமுறைக்கு திட்டம் செல்லும்.

இந்த அனுமதி நடைமுறை தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்:

20 லட்சம் சதுர அடி கட்டுமானம்

இங்கே திட்டத்தின் கட்டுமானப் பரப்பளவு முக்கியத்துவம் பெறுகிறது. புதிய தலைமைச் செயலகத்தின் அறிவிக்கப்பட்ட கட்டுமானப் பரப்பளவு 20 லட்சம் சதுர அடி. இது சுமார் 1.86 லட்சம் சதுர மீட்டர்.

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளின் தற்போதைய அட்டவணையில், 20 ஆயிரம் சதுர மீட்டர் முதல் 1.50 லட்சம் சதுர மீட்டருக்குக் குறைவான Building and Construction Projects ஒரு பிரிவாகவும், 1.50 லட்சம் சதுர மீட்டர் அல்லது அதற்கு அதிகமான built-up area கொண்ட Township and Area Development Projects மற்றொரு பிரிவாகவும் இடம்பெறுகின்றன.

பட்டினப்பாக்கம் திட்டத்தின் அறிவிக்கப்பட்ட 20 லட்சம் சதுர அடி என்பது சுமார் 1.86 லட்சம் சதுர மீட்டர். அதாவது 1.50 லட்சம் சதுர மீட்டர் என்ற வரம்பைவிட சுமார் 36 ஆயிரம் சதுர மீட்டர் அதிகம்.

அறிவிக்கப்பட்ட இந்த built-up area இறுதித் திட்டத்திலும் தொடர்ந்தால், தற்போதைய EIA அட்டவணையின் Entry 8(b) – Township and Area Development Projects வரம்புக்குள் இந்தத் திட்டம் வரும். தற்போதைய விதிகளின்படி Entry 8(b) திட்டங்கள் Category B1 ஆக மதிப்பீடு செய்யப்படுகின்றன.

1.86 லட்சம் சதுர மீட்டர் கட்டுமானம் என்பதாலேயே இந்தத் திட்டம் கட்டாயமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்தான் இறுதி சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டும் என்று கூற முடியாது. Category B திட்டங்களுக்கு மாநில அளவிலான SEIAA அனுமதி நடைமுறை பொருந்தும்.

அதேநேரத்தில் பட்டினப்பாக்கம் திட்ட நிலம் CRZ-II வரம்புக்குள் வருவது உறுதியானால், 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமானம் CRZ Notification, 2011-ன் கீழ் EIA Notification, 2006 நடைமுறையுடன் இணைக்கப்படுகிறது.

ஆக, திட்ட நிலம் CRZ வரம்புக்குள் வருவது உறுதியானால், மத்திய அரசு வகுத்த CRZ மற்றும் EIA விதிகளின்படி தேவையான முன் அனுமதிகளைப் பெறாமல் தமிழக அரசு இந்தக் கட்டுமானத்தை மேற்கொள்ள முடியாது.

இங்குதான் 2003-ல் ஜெயலலிதா எதிர்கொண்ட புதிய தலைமைச் செயலக சர்ச்சை முக்கியத்துவம் பெறுகிறது.

அன்று ஜெயலலிதா.. போராட்டத்தில் இறங்கிய ஸ்டாலின்

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் விஜய் அரசுக்கு இப்போது எழுந்துள்ள சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான கேள்விகளை 2003-ல் முந்தைய ஜெயலலிதா அரசும் எதிர்கொண்டதுதான்.

2003-ல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா சென்னையில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முயன்றபோதும் சுற்றுச்சூழல் விதிகள், மத்திய அரசின் அதிகாரம், மாநில அரசின் கட்டுமான அதிகாரம் ஆகியவை பெரும் அரசியல் மற்றும் சட்டப் பிரச்சினையாக வெடித்தன.

முதலில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ராணி மேரி கல்லூரி வளாகத்தில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க ஜெயலலிதா அரசு முடிவு செய்தது.

இதற்கு கல்லூரி மாணவிகள், ஆசிரியர்கள், முன்னாள் மாணவிகள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர்.

இந்தப் போராட்டத்துக்கு அப்போது திமுக இளைஞரணிச் செயலாளராகவும் முன்னாள் சென்னை மேயராகவும் இருந்த மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆதரவு தெரிவித்தார். 2003 ஏப்ரல் 8-ஆம் தேதி ராணி மேரி கல்லூரிக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மாணவிகளைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் 2003 ஏப்ரல் 9-ஆம் தேதி இரவு கைது செய்யப்பட்டனர். ஸ்டாலின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலுக்கும் அனுப்பப்பட்டார்.

இந்தக் கைது விவகாரம் தமிழக அரசியலில் பெரும் சர்ச்சையாகியது. ஜெயலலிதா அரசின் புதிய தலைமைச் செயலகத் திட்டத்துக்கு எதிரான ராணி மேரி கல்லூரி மாணவிகளின் போராட்டம், திமுகவின் அரசியல் போராட்டமாகவும் விரிவடைந்தது.

மத்திய சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு

ராணி மேரி கல்லூரியில் புதிய தலைமைச் செயலகம் கட்ட ஜெயலலிதா அரசு முயன்ற அந்தக் காலகட்டத்தில், மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சராக இருந்தவர் திமுகவைச் சேர்ந்த டி.ஆர்.பாலு.

2003 ஏப்ரல் 22-ஆம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் CRZ விதிகளில் ஒரு திருத்த அறிவிக்கையை வெளியிட்டது.

கடலோரப் பகுதிகளில் பெரிய திட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதி அதிகாரம் தொடர்பான அந்த மாற்றம், ராணி மேரி கல்லூரியில் ஜெயலலிதா அரசு மேற்கொள்ள நினைத்த புதிய தலைமைச் செயலகத் திட்டத்துடன் நேரடியாக அரசியல் சர்ச்சைக்குள்ளானது.

இதைத்தான் ஜெயலலிதா சட்டப்பேரவைக்கு எடுத்துச் சென்றார். சட்டப்பேரவை ஆவணங்களில் “புதிய தலைமைச் செயலகத்தை இராணி மேரிக் கல்லூரி வளாகத்தில் கட்டத் தடைவிதிக்கும் மத்திய அரசு சுற்றுச்சூழல் துறையின் அறிவிக்கை குறித்த மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிக்கை” என்றே இடம் பெற்றுள்ளது (05.05.2003).

ஜெயலலிதா சட்டசபையில் 110-வது விதியின் கீழ் தாக்கல் செய்த அறிக்கை:


இந்த அறிக்கையில்தான் டி.ஆர்.பாலு, CRZ விதி மாற்றம், மாநில அரசின் அதிகாரம், மத்திய அரசின் அதிகாரம், கூட்டாட்சி அமைப்பு ஆகியவற்றை இணைத்து ஜெயலலிதா விரிவான வாதத்தை முன்வைத்தார்.

1991 CRZ அறிவிக்கையில் என்ன இருந்தது?

ஜெயலலிதா தனது அறிக்கையில் முதலில் கடலோர ஒழுங்குமுறை சட்டப் பின்னணியை விவரித்தார். அதாவது Environment (Protection) Act, 1986-ன் கீழ் மத்திய அரசு 19 பிப்ரவரி 1991 அன்று கடலோர ஒழுங்குமுறை அறிவிக்கையை வெளியிட்டதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அறிவிக்கையின் கீழ் ₹5 கோடிக்கு மேற்பட்ட கட்டுமானப் பணிகளுக்கு மத்திய அரசின் முன் அனுமதி தேவைப்பட்டதாக விளக்கினார். இதற்கு மாநில அரசுகள் ஆட்சேபனை தெரிவித்ததைத் தொடர்ந்து நிலைமை மாற்றப்பட்டதாகவும் கூறினார்.

1997-ல் மாநில அரசுகளுக்குக் கிடைத்த விதிவிலக்கு

ஜெயலலிதாவின் சட்டப்பேரவை விளக்கத்தின்படி, 1997-ம் ஆண்டு செப்டம்பர் 9-ந் தேதி அன்று செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் மாநில அரசுகள் மேற்கொள்ளும் கட்டுமானப் பணிகளுக்கு, அவற்றின் மதிப்பு ₹5 கோடிக்கு மேல் இருந்தாலும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டிய நிலை நீக்கப்பட்டது. ஆனால் 2003 ஏப்ரல் 22 அன்று இந்த நிலை மீண்டும் மாற்றப்பட்டதாக ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

அவரது அறிக்கையில், 1997-ல் மாநில அரசுகளுக்கு இருந்த நிலையை மாற்றி, மாநில அரசின் கட்டுமானப் பணிகள்கூட ₹5 கோடிக்கு மேல் இருந்தால் மத்திய சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் பெற வேண்டும் என்ற திருத்தத்தை டி.ஆர்.பாலு வெளியிட்டதாகக் கூறினார்.

அதுமட்டுமின்றி, மத்திய சுற்றுச்சூழல் துறையை ஒரு “Super Plan Sanctioning Authority” ஆக மாற்றி மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிப்பதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

ராணி மேரிக் கல்லூரியும் டிஆர் பாலுவின் சபதமும்

இந்த விதி மாற்றத்தை ஒரு பொதுவான சுற்றுச்சூழல் கொள்கை மாற்றமாக மட்டும் ஜெயலலிதா பார்க்கவில்லை. அதற்கு நேரடியாக அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

2003 ஏப்ரல் 19-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் டி.ஆர்.பாலு ராணி மேரி கல்லூரி தொடர்பாக சவால் விடுத்துப் பேசியதாக தனது அறிக்கையில் ஜெயலலிதா குறிப்பிட்டார்.

அவரது அறிக்கையில் டி.ஆர்.பாலுவின் பேச்சை மேற்கோள் காட்டி, “இராணி மேரிக் கல்லூரியை நான் இடிக்க விடமாட்டேன்” என்று அவர் பேசியதாகப் பதிவு செய்தார்.

அதன்பிறகு கல்லூரியை இடித்தால் ராஜினாமா செய்வேன்; முடிந்தால் இடித்துப் பாருங்கள் என்ற வகையிலும் டி.ஆர்.பாலு சவால் விடுத்ததாக ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறினார். அந்தப் பேச்சுக்குப் பின்னரே 2003-ம் ஆண்டு ஏப்ரல் 22-ல் இப்படியான திருத்த அறிவிக்கை வெளியிடப்பட்டதாக குற்றம் சாட்டினார் ஜெயலலிதா.

அதாவது, ராணி மேரி கல்லூரியில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதைத் தடுப்பதற்காகவே டி.ஆர்.பாலு CRZ விதியை மாற்றினார் என்பது ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு.

ஜெயலலிதாவின் எதிர்ப்பு ராணி மேரி கல்லூரியுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு மத்திய அமைச்சர், ஒரு குறிப்பிட்ட திட்டத்தை மனதில் வைத்துக்கொண்டு நாடு முழுவதும் உள்ள கடலோர மாநிலங்களுக்குப் பொருந்தக்கூடிய விதியை மாற்ற முடியுமா என்ற கேள்வியாக அவர் இதை முன்வைத்தார்.

1997 அறிவிக்கையில் மாநில அரசுகளுக்கு இருந்த அதிகாரத்தை டிஆர் பாலுவின் பதவிக் காலமான 2003ம் ஆண்டு ஏப்ரல் 22 அறிவிக்கை பறித்துவிட்டதாகவும், மாநில அரசின் ₹5 கோடிக்கு மேற்பட்ட கட்டுமானங்களையும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்குக் கொண்டுசென்றதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

Federal Structure-ன் அடித்தளத்தைத் தகர்க்கும் வகையில்..

இதில்தான் ஜெயலலிதாவின் விதி 110 அறிக்கை ஒரு CRZ அனுமதி விவகாரத்திலிருந்து மத்திய–மாநில அதிகார மோதலாக மாறுகிறது.

S.R. Bommai Vs. Union of India வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கூட்டாட்சித் தத்துவம் தொடர்பான தீர்ப்பை எடுத்துக்காட்டிய ஜெயலலிதா, மத்திய அரசின் அறிவிக்கை “Federal Structure-ன் அடித்தளத்தைத் தகர்க்கும் வகையில்” இருப்பதாக விமர்சித்தார்.

1997 அறிவிக்கையில் இருந்த மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் புதிய அறிவிக்கை வெளியிடப்பட்டதாகவும், டி.ஆர்.பாலு தன்னை ஒரு “Plan Sanctioning” அதிகாரியாக நியமித்துக் கொண்டதைப் போல செயல்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

கடலோர மாநிலங்கள் அனைத்தையும் பாதிக்கும்- ஜெயலலிதா

இந்த இடத்தில்தான் ஜெயலலிதாவின் பேச்சு இன்றைய பட்டினப்பாக்கம் திட்டத்துடன் முக்கியமான தொடர்பைப் பெறுகிறது.

2003-ம் ஆண்டு ஏப்ரல் 22-ந் தேதியிட்ட மத்திய அரசின் அறிவிக்கையின் தாக்கம் தமிழ்நாட்டோடு நின்றுவிடாது; கடலோர மாநிலங்களின் செயல்பாட்டையே பாதிக்கும் என்று அவர் வாதிட்டார்.

கடல் சார்ந்த இடங்கள், முகத்துவாரங்கள், கடல் அலைகளின் தாக்கம் உள்ள பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய கரையோரங்களில் கட்டுமானங்களை மேற்கொள்ளும்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி தேவை என்கிற நிலை உருவாகிறதாக கடுமையாக ஜெயலலிதா எதிர்த்தார்.

அதன் தொடர்ச்சியாக, “கடலோர மாநிலங்களுடைய செயல்பாட்டினை முடக்கக்கூடிய வகையில்” அறிவிக்கை வெளியிடுவதற்கு டி.ஆர்.பாலுவுக்கு அதிகாரமில்லை என்று ஜெயலலிதா கூறினார். மேலும், “அவர் ஒன்றும் இந்த நாட்டின் சர்வாதிகாரி இல்லை” என்றும் மிகக் கடுமையாகத் தாக்கினார்.

மாநிலங்களைக் கலந்தாலோசிக்கவில்லை- ஜெயலலிதா

2003-ம் ஆண்டு ஏப்ரல் 22 அறிவிக்கையை வெளியிடுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை டி.ஆர்.பாலு கலந்தாலோசிக்கவில்லை என்றும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும் இது விவாதிக்கப்படவில்லை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப்படவில்லை என்றும் அந்த அறிவிக்கையை மாநில அரசுகளுக்கே அனுப்பாமல் பத்திரிகைகளுக்கு வெளியிட்டதாகவும் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

இந்த விவகாரத்தை குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்போவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த அறிவிக்கையை எதிர்த்து தமிழக அரசு தனக்குக் கிடைக்கும் அனைத்து வழிகளையும் பயன்படுத்தும் என்றும், பாதிக்கப்படும் மற்ற கடலோர மாநிலங்களின் முதலமைச்சர்களையும் தொடர்புகொள்ளும் என்றும் அறிவித்தார்.

இதனால் 2003 புதிய தலைமைச் செயலக விவகாரம் வெறும் “ஜெயலலிதா அரசு எதிர் ராணி மேரி கல்லூரி மாணவிகள்” என்ற அளவில் மட்டும் இருக்கவில்லை.

தமிழகத்தில் ஜெயலலிதா அரசு; ராணி மேரி கல்லூரித் திட்டத்தை எதிர்த்து களத்தில் மு.க.ஸ்டாலின்; மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக திமுகவின் டி.ஆர்.பாலு; அதற்கு எதிராக சட்டப்பேரவையில் கூட்டாட்சி உரிமையை முன்வைத்து ஜெயலலிதா என்ற பெரிய அரசியல் மோதலாகவும் மாறியது. இதன் பின்னர் ராணி மேரி கல்லூரி திட்டத்தை ஜெயலலிதா கைவிட்டார்.

ராணி மேரி கல்லூரியிலிருந்து கோட்டூர்புரத்துக்கு

ராணி மேரி கல்லூரித் திட்டம் சட்ட மற்றும் அரசியல் எதிர்ப்புகளுக்கு மத்தியில் கைவிடப்பட்டது. இதையடுத்து ஜெயலலிதா அரசு புதிய தலைமைச் செயலகத்துக்கான இடமாக கோட்டூர்புரத்தைத் தேர்வு செய்தது.

கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் அரசுக்குச் சொந்தமான நிலங்களை உள்ளடக்கிய சுமார் 43.20 ஏக்கர் பரப்பில் புதிய தலைமைச் செயலக வளாகத்தை அமைக்க அரசு முடிவு செய்தது.

இதற்காக 2003 செப்டம்பர் 1-ஆம் தேதி G.O.Ms.No.1080 பிறப்பிக்கப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவை வளாகத்தை அமைப்பதற்கான பணிகளை CMDA மேற்கொள்ளும் வகையில் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன.

இந்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதான் பெரிய கட்டுமானங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதி தொடர்பான மற்றொரு முக்கியமான மாற்றம் மத்திய அரசு தரப்பில் வந்தது.

மத்திய அரசின் புதிய 2003 வரைவு அறிவிக்கை

2003-ம் ஆண்டு அக்டோபர் 27-ஆம் தேதி, அப்போது நடைமுறையில் இருந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகளைத் திருத்துவதற்கான S.O.1236(E) வரைவு அறிவிக்கையை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் வெளியிட்டது. அப்போதும் அமைச்சராக இருந்தவர் திமுகவின் டி.ஆர். பாலுதான்.

பெரிய அளவிலான கட்டுமானத் திட்டங்களை சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைக்குள் கொண்டுவருவது அந்த வரைவு அறிவிக்கையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருந்தது.

அந்த அறிவிக்கை வெளியான மூன்றே நாட்களில், 2003 அக்டோபர் 30-ஆம் தேதி கோட்டூர்புரத்தில் புதிய தலைமைச் செயலகத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவை ஜெயலலிதா அரசு நடத்தியது.

இதையடுத்து புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை சுற்றுச்சூழல் அனுமதி பெறாமல் செயல்படுத்த முடியுமா? மத்திய அரசின் அக்டோபர் 27 அறிவிக்கை இந்தத் திட்டத்துக்குப் பொருந்துமா? என்ற கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றத்துக்கும் சென்றது.

ஜெயலலிதா அரசுக்கு சாதகமான Draft Notification

2004-ம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், 2003 அக்டோபர் 27-ல் மத்திய அரசு வெளியிட்டது இறுதி அறிவிக்கை அல்ல; அது ஒரு Draft Notification மட்டுமே என்று சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே நடைமுறைக்கு வராத அந்த வரைவு அறிவிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஜெயலலிதா அரசின் கோட்டூர்புரம் தலைமைச் செயலகத் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் அனுமதி கட்டாயம் என்று அப்போது கூற முடியாது என்ற நிலை ஏற்பட்டது.

இந்த வழக்கில் இன்னொரு முக்கியமான சட்டக் கேள்வியும் எழுப்பப்பட்டது.

மாநில அரசின் கட்டுமான அதிகாரத்தில் மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டத்தின் மூலம் எந்த அளவுக்குத் தலையிட முடியும்?

ஜெயலலிதா அரசு தரப்பில் கட்டுமானம் என்பது மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டது என்ற வாதம் முன்வைக்கப்பட்டது. மத்திய அரசு தரப்பிலோ Environment (Protection) Act, 1986 மற்றும் அதன் கீழ் வெளியிடப்படும் சுற்றுச்சூழல் விதிகள் தொழிற்சாலைகளுக்கு மட்டும் அல்லாமல் அவற்றின் வரம்புக்குள் வரும் திட்டங்களுக்கும் பொருந்தும் என்ற நிலைப்பாடு முன்வைக்கப்பட்டது.

இறுதியில் ஜெயலலிதா அரசுக்கு அப்போது சாதகமாக அமைந்த முக்கியமான அம்சம், மத்திய அரசுக்கு சுற்றுச்சூழல் சட்ட அதிகாரமே இல்லை என்பதல்ல; 2003 அக்டோபர் 27 அறிவிக்கை இன்னும் Draft நிலையில்தான் இருந்தது என்பதாகும். ஆனால் அதன் பின்னர் நிலைமை மாறியது. இந்த கோட்டூர்புரம் தலைமை செயலக திட்டத்தின் சில கட்டுமானப் பணிகளை மேற்கொண்ட நிலையில் இந்த திட்டத்தையும் ஜெயலலிதா கைவிட்டார்.

2006-ல் இறுதி வடிவம் பெற்ற EIA Notification

2005 செப்டம்பர் 15-ஆம் தேதி புதிய EIA விதிகளுக்கான வரைவு அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டு பொதுமக்களிடமிருந்து கருத்துகள் மற்றும் ஆட்சேபனைகளைப் பெற்றது.

அந்த நடைமுறைகளுக்குப் பிறகு 2006 செப்டம்பர் 14-ஆம் தேதி S.O.1533(E) மூலம் EIA Notification, 2006 இறுதியாக வெளியிடப்பட்டது.

இதன் மூலம் அறிவிக்கையின் அட்டவணையில் இடம்பெற்ற புதிய திட்டங்கள் மற்றும் விரிவாக்கத் திட்டங்களுக்கு அவற்றின் வகைப்பாட்டுக்கு ஏற்ப மத்திய அரசு அல்லது மாநில அளவிலான SEIAA-விடம் முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான நடைமுறை வகுக்கப்பட்டது. இதில் கட்டிட மற்றும் கட்டுமானத் திட்டங்களும், Township மற்றும் Area Development திட்டங்களும் சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைக்குள் கொண்டுவரப்பட்டன.

இதுதான் 2003 ஜெயலலிதா திட்டத்துக்கும் தற்போதைய விஜய் திட்டத்துக்கும் இடையிலான மிக முக்கியமான சட்ட வேறுபாடு.

ஜெயலலிதா அரசின் கோட்டூர்புரம் திட்டம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டபோது பெரிய கட்டுமானங்களுக்கான புதிய சுற்றுச்சூழல் கட்டுப்பாடு விதித்த மத்திய அரசின் அறிவிக்கை Draft நிலையில் இருந்தது. ஆனால் விஜய் அரசின் பட்டினப்பாக்கம் திட்டம் வரும்போது EIA Notification, 2006 நடைமுறையில் உள்ள இறுதி அறிவிக்கை.

எனவே 2004-ல் ஜெயலலிதா அரசுக்கு உதவிய, “இது Draft Notification மட்டுமே; இன்னும் இறுதி சட்டமாகவில்லை” என்ற வாதத்தை விஜய் அரசு இப்போது முன்வைக்க முடியாது.

விஜய் அரசின் புதிய தலைமைச் செயலகம் சுமார் 20 லட்சம் சதுர அடியில் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் விதிகளின்படி இதன் பரப்பளவுதான் முக்கியமானது.

20 லட்சம் சதுர அடி என்பது சுமார் 1.86 லட்சம் சதுர மீட்டர். தற்போதைய EIA விதிகளில் 1.50 லட்சம் சதுர மீட்டர் அல்லது அதற்கு அதிகமான கட்டுமானப் பரப்பளவு கொண்ட திட்டங்கள் Entry 8(b) – Township and Area Development Projects பிரிவுக்குள் வருகின்றன.

அதாவது விஜய் அரசின் புதிய தலைமைச் செயலகத்தின் அறிவிக்கப்பட்ட கட்டுமானப் பரப்பளவு, இந்த வரம்பைவிட சுமார் 36 ஆயிரம் சதுர மீட்டர் அதிகம். எனவே 20 லட்சம் சதுர அடி என்ற அளவு இறுதித் திட்டத்திலும் தொடர்ந்தால், இந்தத் திட்டத்துக்கு EIA விதிகளின்படி முன்கூட்டியே சுற்றுச்சூழல் அனுமதி பெற வேண்டியிருக்கும்.

எனவே அறிவிக்கப்பட்ட அளவு இறுதித் திட்டத்திலும் தொடர்ந்தால் Entry 8(b), Category B1 சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறையை விஜய் அரசு எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

இதோடு பிரச்சினை முடிவதில்லை.

கோட்டூர்புரம் திட்டத்துக்கு எழுந்தது EIA கேள்வி. விஜய் தேர்வு செய்திருப்பதோ பட்டினப்பாக்கம் கடற்கரையோர நிலம்.

எனவே EIA Notification, 2006 உடன் CRZ Notification, 2011-ம் இந்தத் திட்டத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.

அன்று ஜெயலலிதா.. இன்று விஜய்

2003-ல் ஜெயலலிதாவின் புதிய தலைமைச் செயலக முயற்சியில் இரண்டு வெவ்வேறு சுற்றுச்சூழல் சட்ட விவகாரங்கள் உருவானதை கவனிக்க வேண்டும்.

முதலாவது, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் அமைக்கும் முயற்சியின்போது CRZ விதிகள் தொடர்பாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலுவுக்கும் ஜெயலலிதா அரசுக்கும் ஏற்பட்ட மோதல்.

இரண்டாவது, ராணி மேரி திட்டம் கைவிடப்பட்டு கோட்டூர்புரம் தேர்வு செய்யப்பட்ட பிறகு, பெரிய கட்டுமானங்களை சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைக்குள் கொண்டுவருவதற்கான 2003 Draft EIA Notification தொடர்பாக எழுந்த வழக்கு.

அன்று ஜெயலலிதாவுக்கு இரண்டு வெவ்வேறு இடங்களில் இரண்டு கட்டங்களாக வந்த சுற்றுச்சூழல் சிக்கல்கள், விஜய் தேர்வு செய்துள்ள பட்டினப்பாக்கம் திட்டத்தில் ஒரே இடத்தில் குவிகின்றன.

இங்குதான் ஜெயலலிதா காலத்துக்கும் விஜய் காலத்துக்கும் முக்கியமான வேறுபாடு இருக்கிறது.

ஜெயலலிதாவின் கோட்டூர்புரம் புதிய தலைமைச் செயலகத் திட்டம் தொடர்பான வழக்கு 2004-ல் விசாரிக்கப்பட்டபோது, பெரிய கட்டுமானங்களை சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைக்குள் கொண்டுவருவதற்கான மத்திய அரசின் அறிவிக்கை Draft Notification ஆக மட்டுமே இருந்தது. அதுவே அப்போது ஜெயலலிதா அரசுக்குச் சாதகமாக அமைந்தது.

ஆனால் விஜய் அரசுக்கு அந்த வாய்ப்பு இல்லை. 2006 செப்டம்பர் 14 முதல் EIA Notification இறுதி அறிவிக்கையாக நடைமுறையில் உள்ளது.

அதாவது, கடற்கரையோர நிலம் என்பதால் CRZ; 20 லட்சம் சதுர அடி பெரிய கட்டுமானம் என்பதால் EIA – இந்த இரண்டு சுற்றுச்சூழல் அனுமதி நடைமுறைகளையும் விஜய்யின் புதிய தலைமைச் செயலகத் திட்டம் கடக்க வேண்டியிருக்கும். இதுதான் விஜய்யின் பட்டினப்பாக்கம் திட்டம் எதிர்கொள்ளும் முக்கியமான சட்ட சோதனை.

மத்திய அரசு எந்தெந்த வழிகளில் தலையிட முடியும்?

CRZ விதிகளை அமல்படுத்துவதில் தலையிடலாம்

கடலோரப் பகுதிகளுக்கான CRZ விதிகளை மத்திய அரசுதான் Environment (Protection) Act, 1986-ன் கீழ் வகுத்துள்ளது. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு மட்டுமல்லாமல் மாநில அரசு மற்றும் கடலோர மண்டல மேலாண்மை ஆணையங்களுக்கும் அதிகாரம் உள்ளது. எனவே பட்டினப்பாக்கம் திட்டத்தில் CRZ விதிகள் அல்லது அனுமதி நிபந்தனைகள் மீறப்பட்டதாக சட்டரீதியான பிரச்சினை எழுந்தால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் தலையிட்டு நடவடிக்கை எடுக்க முடியும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உத்தரவிடலாம்

ஒரு திட்டத்துக்கு மாநில அளவிலான SEIAA சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டாலே எல்லாம் முடிந்துவிடாது.

Environment (Protection) Act, 1986-ன் Section 5 கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக ஒரு திட்டத்தின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தவோ அல்லது தடை செய்யவோ மத்திய அரசுக்கு உத்தரவிடும் அதிகாரம் உள்ளது.

எனவே பட்டினப்பாக்கம் புதிய தலைமைச் செயலகத் திட்டத்துக்கு SEIAA அனுமதி கிடைத்தாலும், பின்னர் சுற்றுச்சூழல் விதிமீறல் போன்ற சட்டரீதியான காரணங்கள் ஏற்பட்டால் மத்திய அரசு Section 5 அதிகாரத்தைப் பயன்படுத்தி தலையிட முடியும்.

இது “SEIAA அனுமதியை மத்திய அரசு விரும்பியபடி ரத்து செய்யலாம்” என்று பொருள் அல்ல. சட்டரீதியான காரணம் இருக்க வேண்டும்.

அனுமதி நிபந்தனைகள் மீறப்பட்டால் நடவடிக்கை

CRZ அல்லது சுற்றுச்சூழல் அனுமதி கிடைத்துவிட்டது என்பதுடன் சட்ட நடைமுறை முடிந்துவிடுவதில்லை.

CRZ அனுமதி வழங்கப்பட்ட பின்னரும் அதில் விதிக்கப்பட்ட நிபந்தனைகள் பின்பற்றப்படுகிறதா என்பது கண்காணிக்கப்படும். அனுமதி பெற்ற பிறகு விதிகள் அல்லது அனுமதி நிபந்தனைகளை மீறி கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டால், பொருந்தும் சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் நடவடிக்கைக்கான வாய்ப்பு உள்ளது.

மத்திய அரசால் தடுக்க முடியுமா?

சட்டரீதியான காரணங்கள் இருந்தால் அதற்கான வாய்ப்பு உள்ளது. ஆனால் மத்திய அரசு விரும்பியபோதெல்லாம் மாநில அளவில் வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்துவிடலாம் என்று இதற்குப் பொருள் அல்ல.

அதேபோல ரூ.1,200 கோடி திட்டம் அல்லது 20 லட்சம் சதுர அடி கட்டுமானம் என்பதால் மட்டுமே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்தான் இறுதி அனுமதி பெற வேண்டும் என்றும் கூற முடியாது.

ஆனால் CRZ விதிமீறல் அல்லது சுற்றுச்சூழல் அனுமதி நிபந்தனைகள் மீறப்பட்டதாக சட்டரீதியான பிரச்சினை ஏற்பட்டால், மத்திய அரசு தலையிடுவதற்கான அதிகாரம் உள்ளது.

ராணி மேரி கல்லூரியை விட்டுவிட்டு கோட்டூர்புரத்துக்கு திட்டத்தை மாற்றியபோதும் சுற்றுச்சூழல் அனுமதி விவகாரம் அவரைத் தொடர்ந்தது. அப்போது ஜெயலலிதா அரசுக்குச் சாதகமாக அமைந்த முக்கியமான விஷயம், பெரிய கட்டுமானங்களுக்கான மத்திய அரசின் புதிய சுற்றுச்சூழல் அறிவிக்கை Draft நிலையிலேயே இருந்ததுதான்.

இந்தச் சூழலில்தான் முதல்வர் விஜய் புதிய சட்டப்பேரவை-தலைமைச் செயலகத்துக்காக பட்டினப்பாக்கம் கடற்கரையோரத்தை தேர்வு செய்திருக்கிறார். அதுவும் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவிலான மிகப்பெரிய அரசு வளாகம்.

எனவே ரூ.1,200 கோடி புதிய தலைமைச் செயலகத்தின் வடிவம் எப்படி இருக்கும், எப்போது கட்டி முடிக்கப்படும் என்பதைக் காட்டிலும், கடலோர மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்களின் கீழ் இந்தத் திட்டத்துக்குத் தேவையான அனுமதிகள் கிடைக்குமா என்பதே அடுத்த முக்கியமான கேள்வி.

23 ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதாவின் புதிய தலைமைச் செயலக முயற்சியில் மத்திய–மாநில அதிகார மோதலாக வெடித்த சுற்றுச்சூழல் விவகாரம், இப்போது விஜய் அரசின் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகத் திட்டத்திலும் புதிய வடிவத்தில் எதிரொலிக்குமா? என்பது ‘கடற்கரையில் கால் வைக்கும் போது’ தெரிந்துவிடும்.

Photo of author
Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share