சென்னையில் ரூ. 1200 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் – விஜய் அறிவிப்பு

Published On:

| By Pandeeswari Gurusamy

தமிழகத்திற்கான ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் ரூ. 1200 கோடி செலவில் அமைக்கப்படும். புனித ஜார்ஜ் கோட்டை வரலாற்று புராதன சின்னமாக பாதுகாக்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று (செப்டம்பர் 3) 110 விதியின் கீழ் புதிய தலைமைச் செயலகம் குறித்து முதலமைச்சர் விஜய் முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.

ADVERTISEMENT

அதில், “புனித ஜார்ஜ் கோட்டையானது 1640ம் ஆண்டு சென்னையில் வணிக செயல்பாட்டு மையத்திற்கான வாங்கப்பட்ட நிலத்தில் கட்ட ஆரம்பிக்கப்பட்டது. 1644-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

1652-ல் பிரசிடென்சி நிலைக்கு உயர்த்தப்பட்ட பிறகு பிரிட்டிஷ் ஆட்சியின் அதிகாரப்பூர்வ தலைமை இடமாகத் திகழ்ந்தது.

ADVERTISEMENT

சுதந்திரத்திற்குப் பிறகு இது தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகமாகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஏறத்தாழ 400 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாகவும், மாநிலத்தின் ஆட்சிப் பாரம்பரியத்தின் அடையாளமாகவும் விளங்கி வருகிறது.

ADVERTISEMENT

சுமார் 107 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்வளாகத்தில் தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் தலைமைச் செயலகத்தின் பயன்பாட்டிற்காக சுமார் 4 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே உள்ளது.

மீதமுள்ள நிலப்பரப்பு இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இந்திய தொல்லியல் துறையின் (ASI) கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதால், இவ்வளாகத்தை விரிவுபடுத்தவோ மேம்படுத்தவோ முடியவில்லை.

தற்போது தலைமைச் செயலகம் இரண்டு கட்டடங்களில் செயல்பட்டு வருகிறது.

தலைமைச் செயலகப் பிரதான கட்டடமாக அறியப்படும் புனித ஜார்ஜ் கோட்டை ஆளுநரின் இருப்பிடமாக கட்டப்பட்ட இக்கட்டடம் தற்போது சட்டமன்றம், மாண்புமிகு முதலமைச்சர், அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர் அறைகள், நிதித்துறை மற்றும் பிற முக்கிய துறைகள் அங்கு செயல்பட்டு வருகின்றன.

இவ்வளாகம் 2,07,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது.

மாநில அரசின் விரிவடைந்து வரும் நிர்வாக தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், நமது கவிஞர் மாளிகை 1978-ஆம் ஆண்டு 3,75,000 சதுர அடி பரப்பளவில் தரை தளம் மற்றும் 10 தளங்களுடன் கட்டப்பட்டு இக்கட்டடங்களில் 30-க்கும் மேற்பட்ட அரசு துறைகளின் அரசு செயலாளர்கள், அலுவலர்கள் மற்றும் 6000-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இடப்பற்றாக்குறையின் காரணமாக நிர்வாக நலனை கருதி ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டபட்டது.

பின்னர் அக்கட்டிடமானது பல்நோக்கு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டதால் தலைமைச் செயலகம் தொடர்ந்து கோட்டை வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது.

கடந்த 40 ஆண்டு காலங்களில் தலைமைச் செயலகத்தின் அனைத்து அரசு துறைகளின் பணியாளர்களின் எண்ணிக்கையும், நிர்வாக பொறுப்புகளும் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்துள்ளன.

இருப்பினும் தற்போதைய கட்டமைப்புகள் பெரும்பாலும் மாற்றப்படாமல் இருப்பதால் தேக்கநிலையை அடைந்துள்ளது.

மேலும் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள மீதமுள்ள இடங்கள் டிஃபென்ஸ் மற்றும் ASI நிலமாக இருப்பதினால் கூடுதல் கட்டடங்களுக்கு மேம்பாட்டு பணிகளும் மேற்கொள்ள முடியவில்லை.

புனித ஜார்ஜ் கோட்டை தமிழ்நாடு அரசின் நிர்வாக வரலாற்றின் பெருமைமிக்க அடையாளமாக விளங்கி வந்தாலும், தமிழ்நாட்டின் எதிர்கால நிர்வாக வளர்ச்சிக்கும், திறன்மிக்க நிர்வாகத்திற்கும் உலகத்திலான பொது நிர்வாக உட்கட்டமைப்பை உருவாக்கும் நோக்கிலும், ஒருங்கிணைந்த புதிய தலைமைச் செயலகம் அமைப்பது இன்றியமையாதது.

புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தில் அனைத்து அரசு துறைகளையும் ஒரே நிர்வாக வளாகத்தில் கொண்டு வந்து ஒருங்கிணைக்கப்படும்.

தீயணைப்பு வசதிகள், மாற்றுத்திறனாளிகள் சென்றுவர வசதிகள் மற்றும் பசுமை கட்டட தரநிலைகளுக்கு உட்பட்டு நவீன நிர்வாக வளாகம் உருவாக்கப்படும்.

போதுமான வாகன நிறுத்துமிடங்கள், மாநாட்டு அரங்குகள், பொதுமக்கள் சேவை மையங்கள் மற்றும் அலுவலர்களுக்கான நவீன வசதிகளும் ஏற்படுத்தப்படும்.

புனித ஜார்ஜ் கோட்டையின் பாரம்பரியக் கட்டடங்களை வரலாற்று மரபுச்சின்னங்களாக பாதுகாத்து அவற்றின் பாரம்பரிய மதிப்பை வருங்கால தலைமுறைகளுக்கும் அறியும் வகையில் உருவாக்கப்படும்.

இவற்றை கருத்தில் கொண்டு அடுத்த நூற்றாண்டுகளில் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூபாய் 1200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்.” என்றார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share