சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழி: முதல்வர் விஜய் கொண்டுவந்த தனித் தீர்மானம் என்ன?

Published On:

| By Pandeeswari Gurusamy

Vijay

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மற்றும் அலுவல் மொழியாக அங்கீகரிக்க வேண்டும் என்ற வகையில் அரசினர் தனித் தீர்மானத்தை இன்று (செப்டம்பர் 3) பேரவையில் முதல்வர் ஜோசப் விஜய் முன்மொழிந்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பல்லாயிரம் ஆண்டுகளுக்கு மேலான இலக்கண, இலக்கிய வளங்களுடன் இன்றளவும் உயிருடன் பேசப்பட்டு வரும் உலகின் தொன்மையான மொழி என்றால், அது தமிழ் மட்டுமே. உலகம் முழுவதும் சுமார் 9 கோடி மக்களாலும், இந்திய அளவில் சுமார் 8 கோடி மக்களாலும் பேசப்படும் தமிழ் மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருப்பது நமக்குக் கிடைத்த பெருமை.

ADVERTISEMENT

தமிழை நாம் வெறும் மொழியாக மட்டும் கருதுவதில்லை; அது நமது உணர்வோடு, உயிரோடு ஒன்றிணைந்த அடையாளமாகக் கருதுகிறோம். ‘தமிழ்’ என்று வந்துவிட்டால் நமக்குள் ஒரு வேகம் பிறக்கிறது. “இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர் விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன்”என்ற பாடலின் மூலம் தான் தமிழ் மொழியாலேயே வாழ்ந்து வருவதாகவும் சாகாவரம் கிடைக்கும் விருந்தாகிய அமுதைக் காட்டிலும் தமிழ்மொழி மேலானது என்றும் கவிஞர் கூறுகிறார். இதை நினைத்துப் பார்க்கும்போது தமிழர்களாகிய நம்மிடையே ஒற்றுமையும், தீராத உணர்ச்சியும் உருவாகிறது. சாதி, மதம், கட்சி வேறுபாடுகள் அனைத்தும் மறந்து தமிழர் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கி இருக்கிறது.

அத்தகைய சிறப்புமிக்க தமிழ் நமது அலுவலக பயன்பாட்டில் மட்டுமின்றி, ஆட்சி, கல்வி, தொழில்நுட்பம், அறிவியல், மாவட்ட நீதிமன்றங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றிய அரசு தமிழை ‘கிளாசிக்கல் லாங்குவேஜ்’ (செம்மொழி) என்ற சிறப்பு தகுதியை வழங்கி பெருமை சேர்த்தது. தமிழை வளர்ப்பதும் பாதுகாப்பதும் நமது கடமை மட்டுமல்ல, வருங்கால தலைமுறைகளுக்கும் தமிழின் வளத்தையும் பெருமையையும் அழியாமல் கொண்டு சேர்ப்பதும் நமது பொறுப்பாகும்.

ADVERTISEMENT

தமிழ்நாடு ஆட்சிமொழி சட்டம் 1956-ன் பிரிவு இரண்டானது, “The official language of the State of Tamil Nadu shall be Tamil” என்று தெளிவாக அறிவிக்கிறது. மேற்சொன்ன சட்டத்தில் பிரிவு 4 ஆனது குறிப்பிட்ட ஆட்சிப் பணிக்குத் தமிழைப் பயன்படுத்த அரசு அறிவிக்கை மூலம் உத்தரவிடலாம் என்ற அதிகாரம் வழங்குகிறது.

அதில் குறிப்பாக, மேற்படி சட்டத்திற்கு 1976-ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தங்களின் மூலம் உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்கள், வாடகை நீதிமன்றங்கள் மற்றும் வருவாய் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் அனைத்து வழக்குகளிலும் சாட்சியங்களைப் பதிவு செய்வதற்கு தீர்ப்புரை, தீப்பாணை மற்றும் உத்தரவுகளைத் தமிழிலேயே எழுதுவதற்கும் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் ஏற்கனவே சட்டரீதியான நீதிமன்ற மொழியாக உள்ள நிலையில், அந்த நீதித்துறை அமைப்பின் மாநிலத்தின் உச்சநிலையில் உள்ள மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலும் தமிழை முதன்மை மொழியாக அங்கீகரிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

ADVERTISEMENT

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆர்டிகிள் 348 (1) அதன்படி, தற்போது இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் அனைத்து உயர்நீதிமன்றங்களில் நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஆங்கிலம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதே ஆர்டிகிள் 348-ன் உட்பிரிவு இரண்டானது, ஒரு மாநில ஆளுநர் குடியரசுத் தலைவரின் முன் ஒப்புதலுடன் அந்த மாநிலத்தின் ஆட்சி மொழியை அம்மாநில உயர்நீதிமன்ற நடவடிக்கைகளின் (அதாவது Proceedings) பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க முடியும் என்று தெரிவிக்கிறது. மேலும், ஆட்சி மொழிகள் சட்டம் 1963-ன் பிரிவு 7-ல் மாநிலத்தின் ஆளுநர் குடியரசுத் தலைவர் முன் ஒப்புதலுடன் அம்மாநில ஆட்சி மொழியை ஆங்கிலத்துடன் கூடுதலாக உயர்நீதிமன்றத் தீர்ப்புரைகள், தீர்ப்பாணைகள் மற்றும் உத்தரவுகள் ஆகியவற்றில் பயன்படுத்துவதற்கு அதிகாரம் வழங்க வழிவகை செய்கிறது. அந்த மொழியில் வழங்கப்படும் தீர்ப்புடன் ஆங்கில மொழிபெயர்ப்பும் இணைக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது.

எனவே, நாம் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை முதன்மை மொழியாகவும் ஆங்கிலத்திற்குச் சமமான நடைமுறை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம். இந்த கோரிக்கையை முன்னிறுத்தி 2006-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்றம் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தமிழைப் பயன்படுத்த வேண்டும் என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது. அந்தத் தீர்மானம் அரசியலமைப்புச் சட்ட நடைமுறையின் அடிப்படையில் ஒன்றிய அரசின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. அன்றைய சட்டமன்ற விவாதங்களிலும் தமிழ் பயன்பாடு ஆங்கிலத்தை அகற்றும் நடவடிக்கை அல்ல மாறாக ஆங்கிலத்துடன் கூடுதலாகத் தமிழைப் பயன்படுத்தும் நடவடிக்கை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டது. ஆனால், பின்னர் 2012-ஆம் ஆண்டு இந்திய உச்சநீதிமன்றத்தின் முழு அமர்வு இந்த முன்மொழிவை ஏற்கவில்லை என்றும், அதன் காரணமாக ஒன்றிய அரசு மேல் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் 2018-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் ஒன்றிய சட்ட அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கோரிக்கை ஒரு கட்டத்தில் நிராகரிக்கப்பட்டது என்பதால் அது என்றென்றும் முடிவற்று விட்டது என்று பொருள் கொள்ள முடியாது. காலம் மாறுகிறது, தொழில்நுட்பம் மாறுகிறது, நீதித்துறையின் மொழிபெயர்ப்பு வசதிகள் வளர்ந்துள்ளன. தமிழில் சட்டக்கல்வி, சட்ட நூல்கள், சட்ட அகராதிகள், தீர்ப்புகளின் மொழிபெயர்ப்புகள் ஆகியவை பெருமளவில் வளர்ந்துள்ளன. எனவே, 2006-ஆம் ஆண்டு இருந்த சூழ்நிலையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, இன்றைய சூழ்நிலையை மதிப்பிடாமல் தற்போதைய வளர்ந்து வரும் ஆர்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகத் திறன்களைக் கருத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும்.

ஒரு சாதாரண குடிமகள் குடிமகன் தனது வாழ்க்கை, நிலம், குடும்பம், சொத்து, வேலை, உரிமை ஆகியவை தொடர்புடைய வழக்கு நீதிமன்றத்தில் நடக்கும் பொழுது என்ன நடக்கிறது என்பதைத் தனது தாய்மொழியில் புரிந்து கொள்ள முடிந்தால் நீதி பெறுவதும் வழங்குவதும் வலுப்பெறும். நீதி பரிபாலனத்தில் மக்களும் தம் தாய்மொழியில் பங்கெடுப்பதால் நீதி தேவதையின் கரம் வலுப்பெறும். எனவே, நீதியின் மொழி மக்களுக்கு உரிய மொழியாக இருப்பது ஜனநாயகத்தின் அடிப்படை நோக்கம். தமிழ்நாட்டில் மாவட்ட நீதிமன்றங்களில் தமிழ் பயன்படுத்துகின்ற நிலையில், அதனை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்திலும் விரிவுபடுத்துவது ஒரு இயல்பான அடுத்த கட்டமாகும். எனவே, தமிழ் மொழியை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதன்மையான மொழியாக அங்கீகரிக்க வேண்டும், தமிழில் மனுக்கள், ஆவணங்கள் மற்றும் வாதங்களைச் சமர்ப்பிப்பதற்கு உரிய நடைமுறையை உருவாக்க வேண்டும், தீர்ப்புரைகள், தீப்பாணைகள் மற்றும் உத்தரவுகள் அதிகாரப்பூர்வமாகத் தமிழில் வழங்கும் அமைப்பை உருவாக்க வேண்டும், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றப் பணியாளர்களுக்கான சட்டத் தமிழ் மற்றும் மொழிபெயர்ப்பு பயிற்சியை ஏற்படுத்த வேண்டும். அரசியலமைப்புச் சட்ட ஆர்டிகிள் 348 பிரிவு 2 மற்றும் Official Languages Act 1963 பிரிவு 7 ஆகியவற்றின் கீழ் மாநில ஆளுநர் அவர்களால் அனுப்பப்படும் முன்மொழிவுகளின் மீது தேவையான அனைத்து சட்ட நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பேரவை மூலம் வலியுறுத்த விரும்புகிறது நமது அரசு.

இது எந்த மொழிக்கும் எதிரான கோரிக்கை அல்ல. இது இந்தியாவின் பன்மொழி தன்மையை மதிக்கும் கோரிக்கை. இது ஆங்கிலத்தை அகற்றும் கோரிக்கை அல்ல. இது தமிழுக்கு உரிய அரசியல் அமைப்பு சட்ட வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை இது ஒரு மொழியின் பெருமைக்கான கோரிக்கை மட்டும் அல்ல. இது ஒரு குடிமகள் குடிமகன் தனது மொழியில் நீதியை புரிந்து கொள்ளவும், அணுகவும், அனுபவிக்கவும் உரிமை பெற வேண்டும் என்ற ஜனநாயக கோரிக்கை. தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு மனதாக இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றி மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் தமிழை முதன்மை மொழியாக பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசும் குடியரசுத் தலைவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான தீர்மானத்தை முன்மொழிகிறேன்”என்றார்

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share