தமிழ்நாட்டில் புதிதாக ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் உருவாக்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (செப் 3) 110 விதியின் கீழ் முதல்வர் விஜய் புதிய அறிவிப்புகளை அறிவித்தார்.
அப்போது அவர் பேசுகையில் தமிழ்நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ஒலிம்பிக் போட்டிமற்றும் பிற சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வெல்லும் வகையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னையில் உலகத்தரம் வாய்ந்த தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம் அமைக்கப்படும்.
இந்த ஒலிம்பிக் நகரம் ஒலிம்பிக் தரத்திலான ஒருங்கிணைந்த விளையாட்டு வளாகமாக உருவாக்கப்படும்.
இதில் உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள், அதிநவீன விளையாட்டு உபகரணங்கள், உயர்தர செயல் திறன் பயிற்சி மையம் (High Performance Training Center), விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்படும்.
இந்த வளாகம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கும், ஒலிம்பிக் பதக்கங்களை வெல்லக்கூடிய திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்குவதற்கும் உதவும் உலகத்தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த விளையாட்டு மையமாகத் திகழும்.” என்றார்.
மேலும், “இரு சக்கர, நான்கு சக்கர வாகன உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
பல்வேறு வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களது புதிய வாகன தொழிற்சாலைகளை நிறுவுவதற்கு தமிழ்நாட்டினை முதன்மை விருப்பமாக கருதுகின்றன.
இந்தியாவில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வாகன உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
இந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் உற்பத்தி பிரிவுகள் கோயம்புத்தூரில் இயங்கி வருகிறது.
மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்யூட் சென்னைக்கு அருகில் திருங்காட்டுக்கோட்டையிலும், கரி மோட்டார் ஸ்பீட்வே கோயம்புத்தூரிலும் மோட்டார் பந்தியத்திற்கான முக்கிய கட்டமைப்புகளாக உள்ளன.
இந்தப் பந்தய அரங்குகளில் தேசிய அளவில் F3, F4 கார் பந்தைய போட்டிகள் நடைபெறுகிறது.
தற்போது மோட்டார் வாகன பந்தையத்திலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது.
தமிழ்நாடு வலுவான ஆட்டோமொபைல் உற்பத்தி கட்டமைப்புகளை கொண்டுள்ளது.
தமிழ்நாட்டில் உலகளாவியிலான மோட்டார் வாகன கார் பந்தைய விளையாட்டு போட்டிகளுக்கான கார் உற்பத்தி ஆலைகளையும், அதற்கு தேவையான உப தொழிற்சாலைகளையும் அமைக்க தேவையான சூழல் உள்ளது.
உலகத்தரம் வாய்ந்த மோட்டார் வாகன கார் பந்தைய அரங்குகளை அமைப்பதன் மூலம் சுற்றுலா, சிறப்பு வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்பட வாய்ப்புகள் உள்ளது.
விளையாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும், தமிழ்நாட்டு இளைஞர்களிடையே மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீதான அதிகரித்து வரும் ஆர்வத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கி தமிழ்நாட்டை சர்வதேச அளவிலான மோட்டார் ஸ்போர்ட்ஸின் முக்கிய மையமாக உருவாக்கவும் தமிழ்நாட்டில் ஒரு புதிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) உருவாக்கப்படும்.
இந்த நகரத்தில் சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் பந்தைய தடம் மற்றும் அதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பயிற்சி வசதிகள் ஏற்படுத்தப்படும்.
பார்முலா 1, பார்முலா 2, பார்முலா 3, பார்முலா 4 போன்ற சர்வதேச தரத்திலான போட்டிகள் நடத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
இளைஞர்களின் மோட்டார் ஸ்போர்ட்ஸ் திறமைகளைக் கண்டறிந்து, பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கி தேசிய மற்றும் சர்வதேச அளவிலான வீரர்களை உருவாக்குவதுடன் விளையாட்டு சுற்றுலாவையும் மேம்படுத்தும் வகையில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் (Motor Sports City) அமையும்.” என்றார்.
