நா.மணி
கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று, தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன. சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை என்பது வெறும் நிர்வாகக் கூட்டமல்ல. அது, ஜனநாயகத்தின் மிக அடித்தளத்தில் மக்கள் நேரடியாக கிராம சபை என்னும் அரசைச் சந்திக்கும் அரிய வாய்ப்பு.
‘கிராம சபை’ என்றால் கிராமத்தில் வாழும் எல்லா மக்களுக்குமான சபை. சமூக, பொருளாதார, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, அந்த ஊரின் ஒவ்வொரு குடிமகனுக்கும் குரல் கொடுக்கும் பொதுச் சபை.
கிராமப் பஞ்சாயத்து எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து கொள்ள வாய்ப்புள்ள சபை. உள்ளாட்சிக்கும்,
சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் வாக்களித்து பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் மக்கள், தங்கள் கிராமத்தின் நிர்வாகத்தைப் பற்றி நேரடியாகப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் தீர்மானங்களை முன்வைப்பதற்குமான ஜனநாயக மேடை கிராம சபை. ஆனால் இந்தக் கருத்துக்கும் நடைமுறைக்கும் இடையில் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது?
தமிழ்நாட்டின் 12000க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் எத்தனை கூட்டங்கள் உண்மையான மக்கள் சபைகளாக இருந்தன? எத்தனை கிராம சபைகள் அந்தக் கிராமத்தின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவாதக் களமாக மாறின? எத்தனை இடங்களில் அரசு முன்வைத்த வழக்கமான தீர்மானங்களைத் தாண்டி மக்கள் தங்களுடைய சொந்தக் கோரிக்கைகளுக்காக தீர்மானங்களை நிறைவேற்றினர்?
இதற்கான விடைகளைத் தேட வேண்டிய நேரம் இது.

கிராம சபை ஒரு சடங்காக மாறிவிடக் கூடாது. கிராம சபை நடைபெறுகிறது. அதிகாரிகள் வருகிறார்கள். தலைவர் தலைமை வகிக்கிறார். தீர்மானங்கள் வாசிக்கப்படுகின்றன. வரவு–செலவு கணக்குகள் வாசிக்கப்படுகின்றன. சில அறிவிப்புகள் செய்யப்படுகின்றன. பின்னர் கூட்டம் முடிந்து விடுகிறது.
இது கிராம சபையா? அல்லது கிராம சபை என்ற பெயரில் நடைபெறும் நிர்வாகச் சடங்கா?
கிராம சபையின் பொது செயல்பாடுகள்:
ஒரு கிராமத்தில் என்ன பணிகள் நடைபெற்றன? அதற்கு எவ்வளவு பணம் செலவிடப்பட்டது? எந்தத் திட்டத்திற்கு எவ்வளவு நிதி வந்தது? எந்தப் பணிகள் நிறைவேறவில்லை? ஏன் நிறைவேறவில்லை? அடுத்த ஆறு மாதங்களில் என்ன செய்ய வேண்டும்? இத்தகைய கேள்விகளுக்கு மக்கள் விளக்கம் கேட்க வேண்டும். கணக்குகள் வாசிக்கப்படும்போது அவற்றைக் கவனமாகக் கேட்க வேண்டும். சந்தேகங்கள் எழுப்ப வேண்டும்.
ஊராட்சி மன்றத் தலைவர்களிடம்,
அதிகாரிகளிடம் பதில் பெற வேண்டும். மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் தீர்மானங்களாக மாற வேண்டும். அந்தத் தீர்மானங்கள் செயல்படுத்தப்பட்டனவா என்பதை அடுத்த கிராம சபை கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் கிராம சபை உயிருள்ள ஜனநாயக நிறுவனமாக மாறும்.
ஒரு கிராம சபையில் கண்ட காட்சி:
ஒவ்வொரு முறையும் கிராம சபை நடைபெறும் போது, அது நடைமுறையில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பார்ப்பதை கடந்த ஓராண்டாக பழக்கமாகக் கொண்டிருக்கிறேன்.

இம்முறையும் ஈரோடு நகரை ஒட்டியுள்ள ஒரு கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. அது பெயரளவில் கிராமமாக இருந்தாலும், நகரத்தின் விரிவாக்கத்தால் வேகமாக மாறிவரும் பகுதி. பல்வேறு பகுதிகளில் இருந்து வேலை தேடி வந்து குடியேறிய தொழிலாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் என மக்கள் தொகை பெருகி வருகிறது.
ஆனால் கிராம சபையில் பங்கேற்ற பொதுமக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. உள்ளூர் மக்களில் சில பெண்கள் மட்டுமே தொடர்ந்து கூட்டத்தில் இருந்தனர். அரசு ஊழியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள் போன்றவர்களின் இருப்பு கணிசமாக இருந்தது. குறிப்பாக ஆண்களின் பங்கேற்பு மிகவும் குறைவாக இருந்தது.
அடித்தட்டு மக்களின் குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வந்த சுமார் பத்து, பதினைந்து பெண்கள் இறுதிவரை கூட்டத்தில் இருந்தனர். சில இளைஞர்களும் தொடர்ந்து பங்கேற்றனர்
மக்களுக்காக உருவாக்கப்பட்ட கிராம சபையில் மக்கள் ஏன் இவ்வளவு குறைவாக இருக்கிறார்கள்?
அதிகாரத்தின் கீழ் உள்ள சபையா? மக்களின் சபையா?
கிராம சபை என்பது உள்ளாட்சி நிர்வாகத்தின் அடிப்படை ஜனநாயக அலகு. அது மாநில அரசின் கீழ்நிலை அலுவலகமாக மட்டும் செயல்பட வேண்டியதில்லை. மக்கள் தங்கள் வாழ்க்கை தொடர்பான முடிவுகளில் நேரடியாகப் பங்கேற்கும் அதிகாரப் பரவலின் அடித்தளமாக இருக்க வேண்டும். ஆனால் நடைமுறையில், பல இடங்களில் கிராம சபை என்பது நிர்வாகம் முன்வைக்கும் விஷயங்களை மக்கள் கேட்கும் இடமாக மட்டுமே சுருங்கிவிடுகிறது.
மக்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் நிர்வாகத்தின் மையப் பிரச்சினைகளாக மாறுவதில்லை. கிராம சபைத் தீர்மானங்கள் நிர்வாக நடவடிக்கையின் தொடக்கப் புள்ளியாக மாறுவதில்லை. இதுவே கிராம சுயராஜ்யத்தின் மிகப்பெரிய சவால்.
கணக்கு வாசிக்கப்படுவதைக் கேட்டால் மட்டும் போதுமா?
வழக்கமான தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. வரவு–செலவு கணக்குகளும் வாசிக்கப்பட்டன.
ஆனால் அவற்றைக் காது கொடுத்து கேட்டவர்கள் மிகக் குறைவு. உண்மையில் கிராம சபையின் மிக முக்கியமான பகுதி இதுதான். பணம் எங்கிருந்து வந்தது? எவ்வளவு வந்தது? எதற்காக செலவிடப்பட்டது? பணியின் தரம் என்ன? யார் பயனடைந்தனர்? இன்னும் என்ன செய்யப்பட வேண்டும்? இந்தக் கேள்விகள் எழாமல் கிராம சபை முழுமையடையாது.
கணக்கைப் படிப்பது நிர்வாகத்தின் கடமை. கணக்கைக் கேள்வி கேட்பது மக்களின் ஜனநாயக உரிமை. ஆனால் மக்கள் மௌனமாக இருக்கவில்லை!
கணக்குகள் வாசிக்கப்பட்டபோது அமைதியாக இருந்த மக்கள், தங்களுடைய வாழ்க்கைப் பிரச்சினைகள் பேசப்பட்டபோது வெடித்துக் கிளம்பினர்.

“எங்களுக்கு ஆறு மாதமாகக் குடிநீர் வரவில்லை!”. ஒரு பகுதியில் இருந்து வந்த பெண்களின் குரல் இது.
மற்றொரு பகுதியைச் சேர்ந்த பெண்கள், “எங்கள் பகுதியில் வடிகால் சுத்தம் செய்யப்படவில்லை” என்று முறையிட்டனர்.
வேறு சிலர், “எங்கள் பகுதியில் பணியாற்றிய தூய்மைப் பணியாளர் ஓய்வு பெற்றுவிட்டார். அதற்குப் பிறகு புதியவர் நியமிக்கப்படவில்லை. எங்கள் நிலை என்ன?” என்று கேள்வி எழுப்பினர்.
இன்னும் அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளிவந்தது. சில வீடுகளுக்கு மின்சாரம் இல்லை. சில தெருக்களுக்கே தெருவிளக்கு வசதி இல்லை.
காரணம் கேட்டபோது, “அந்த வீடுகளுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை” என்ற பதில் முன்வைக்கப்பட்டது.
பட்டா கிடைக்காததால் ஒரு குடும்பம் பல ஆண்டுகள் இருளில் வாழ வேண்டுமா? ஒரு குடியிருப்புப் பகுதியில் மக்கள் வாழ்கிறார்கள் என்றால் குடிநீர், மின்சாரம், தெருவிளக்கு, சுகாதாரம், பாதுகாப்பான வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்க வேண்டாமா?
சுமார் 800 வீடுகள் குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளுக்காகக் காத்திருக்கின்றன என்ற செய்தி வெளிப்பட்டது. திறந்த சாக்கடை குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து. வடிகால் சுத்தம் செய்யப்படவில்லை என்பது ஒரு பிரச்சினை. ஆனால் சில இடங்களில் சாக்கடைகளுக்கு பாதுகாப்பான மூடிகளே இல்லை என்பது இன்னும் கவலைக்குரியது.
தெருவில் விளையாடும் குழந்தை தவறி விழலாம். சைக்கிளில் செல்லும் குழந்தை விழலாம். இரவில் நடந்து செல்லும் ஒருவர் விழலாம். சுத்தமான இந்தியா பற்றி பேசுகிறோம். குடிநீருக்காக ஜல் ஜீவன் மிஷன் பற்றி பேசுகிறோம். ஆனால் ஒரு கிராமத்தின் ஒரு பகுதியில் மக்கள் திறந்த சாக்கடைகளுக்கும் குடிநீர் பற்றாக்குறைக்கும் மின்சாரமின்மைக்கும் மத்தியில் வாழ்கிறார்கள் என்றால், நமது திட்டங்களின் பயன் எங்கே சென்றடைந்திருக்கிறது.
கிராம சபையில் கேட்க வேண்டிய கேள்வி இது மட்டுமல்ல“இந்தப் பிரச்சினையை கிராம சபை கூட்டம் வரை ஏன் வர வேண்டும்?” என்பதும் ஓர் முக்கிய கேள்வி. அடிப்படை குடிநீர், மின்சாரம், சுகாதாரம் போன்ற அவசரமான பிரச்சினைகள் இருந்தால் அவற்றைத் தீர்ப்பதற்கான நிர்வாக இயந்திரம் தானாகவே இயங்க வேண்டாமா?
மக்கள் கிராம சபைக்கு வந்து கண்ணீர் மல்கச் சொல்லிய பிறகுதான் நிர்வாகத்தின் கவனம் அந்தப் பிரச்சினைகளின் மீது திரும்ப வேண்டுமா?
கிராம சபை என்பது பிரச்சினைகளைத் தெரிவிக்கும் புகார் மையமாக மட்டும் இருக்கக் கூடாது. பிரச்சினைகளை அடையாளம் காண்பதும், தீர்வைத் திட்டமிடுவதும், நிதியை ஒதுக்குவதும், செயல்படுத்துவதைக் கண்காணிப்பதும் நடைபெறும் ஜனநாயக நிறுவனமாக அது வளர வேண்டும்.
அவசர அடிப்படை வசதி நிதியின் தேவை:
இத்தகைய சூழல்களுக்காக உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒரு சிறப்பு அவசர நிதி இருக்க வேண்டியதன் அவசியம் இந்தக் கூட்டத்தில் தெளிவாகத் தெரிந்தது.
குடிநீர் இல்லை. உடனடி ஏற்பாடு தேவை. தெருவிளக்கு இல்லை. உடனடியாக அமைக்க வேண்டும். வடிகால் மூடப்படாமல் ஆபத்தாக இருக்கிறது. உடனடியாகப் பாதுகாப்பு ஏற்பாடு செய்ய வேண்டும். தூய்மைப் பணியாளர் இல்லை. மாற்று ஏற்பாடு தேவை.
இவை அனைத்திற்கும் பல மாதங்கள் கோப்புகள் நகர வேண்டிய நிலை இருக்கக் கூடாது.
ஒவ்வொரு உள்ளாட்சியிலும் அவசர அடிப்படை வசதிகளுக்கான நிதி ஏற்பாடு இருந்தால், கிராம சபையில் அடையாளம் காணப்படும் உயிருக்கும் வாழ்வாதாரத்திற்கும் நேரடியான ஆபத்தான பிரச்சினைகளை உடனடியாகத் தீர்க்க முடியும்.
அரசியல் கட்சிகளின் பங்கேற்பு:
இந்தக் கூட்டத்தில் இன்னொரு விஷயமும் கவனிக்கத்தக்கதாக இருந்தது. முக்கிய அரசியல் கட்சிகளின் உள்ளூர் திமுக அதிமுக பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. தவெக பாஜக பிரதிநிதிகள் மட்டுமே கலந்து கொண்டனர். ஆனால் தவெக இளைஞர்கள் அரசியல் ஆர்வத்துடன் கலந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை கவனித்தனர்.
குறிப்பாக பாதிக்கப்பட்ட பெண்களின் பிரச்சினையை அவர்கள் தீவிரமாக எடுத்துக்கொண்டனர். நிர்வாகத்திடம் பேசியதுடன், “விரைவில் இதற்குத் தீர்வு காண முயற்சி செய்கிறோம்” என்று மக்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.
அந்தப் பெண்களின் முகங்களில் அப்போது ஒரு சிறிய நம்பிக்கை தெரிந்தது. ஒரு வாரம் அல்லது பத்து நாட்களுக்குள் குடிநீர் கிடைக்குமா? தெருவிளக்கு எரியுமா? வடிகால் சுத்தம் செய்யப்படுமா? அந்தக் கேள்விகளுக்கான பதிலுக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.
அந்த இளைஞர்களின் முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் இதுவே நமது ஜனநாயக அமைப்பின் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியாது.

ஒரு அரசியல் கட்சியின் இளைஞர்கள் வந்து ஒரு பிரச்சினையைத் தீர்த்துக் கொடுப்பது நல்லது. ஆனால் அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அமைப்பு ஏற்கெனவே மக்களிடம் இருக்க வேண்டும். அந்த அமைப்புதான் கிராம சபை.
சுதந்திரத்தின் 80வது ஆண்டில் இந்தக் கேள்வி அவசியம்.
நாடு 80வது சுதந்திர தினத்தை கொண்டாடும் காலகட்டத்தில், ஒரு கிராமத்தில் 800 குடும்பங்கள் குடிநீருக்காகக் காத்திருக்கின்றன
என்ற செய்தி நம்மை உலுக்குகிறது.
ஒரு குழந்தை பாதுகாப்பற்ற சாக்கடையில் விழும் அபாயத்தில் வாழ்கிறது என்றால் அது சுதந்திரத்தின் முழுமையான அர்த்தத்தைப் பற்றி நம்மை சிந்திக்க வைக்க வேண்டும்.
ஒரு குடும்பம் பட்டா இல்லாததால் தெருவிளக்கின்றி வாழ வேண்டிய நிலை இருந்தால், அரசின் வளர்ச்சி என்ற சொல்லை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
சுதந்திரம் என்பது அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக்கொண்ட வரலாற்றுச் சம்பவம் மட்டும் அல்ல.
மக்களின் அன்றாட வாழ்க்கையில் கண்ணியத்தையும் பாதுகாப்பையும் அடிப்படை வசதிகளையும் உறுதி செய்வதே சுதந்திரத்தின் சமூகப் பொருள்.
கிராம சபை கிராம சுயராஜ்யத்தின் விதை:
கிராம சபை என்பது ஒரு விதை.
அந்த விதைக்குள் ஜனநாயகம் இருக்கிறது. அதிகாரப் பரவல் இருக்கிறது. சமூக நீதி இருக்கிறது. வெளிப்படைத்தன்மை இருக்கிறது. பொறுப்புணர்வு இருக்கிறது. மக்கள் பங்கேற்பு இருக்கிறது. ஆனால் விதை முளைக்க வேண்டும். மக்கள் தொடர்ந்து பங்கேற்க வேண்டும்.
பெண்கள் பேச வேண்டும். இளைஞர்கள் கேள்வி கேட்க வேண்டும். தொழிலாளர்கள் தங்கள் பிரச்சினைகளை முன்வைக்க வேண்டும். பட்டியல் சமூக மக்கள் பழங்குடி மக்கள் மற்றும் பிற சமூகப் பிரிவுகளின் குரல்கள் கேட்கப்பட வேண்டும்.
அதிகாரிகள் பதில் சொல்ல வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் பொறுப்பேற்க வேண்டும். நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடுத்த கூட்டத்தில் மீண்டும் பரிசீலிக்கப்பட வேண்டும்.
அப்போதுதான் கிராம சபை ஒரு கூட்டமாக இல்லாமல் தொடர்ச்சியான மக்கள் ஆட்சியின் நிறுவனமாக மாறும்.
அந்த நாள் எந்தநாளோ
ஒரு கிராமத்தில் கிராம சபை கூடப் போகிறது என்றால், மக்கள் கோயில் திருவிழாவுக்காகக் காத்திருப்பதைப் போலக் காத்திருக்க வேண்டும்.
“என்ன பேச வேண்டும்?” என்று முன்கூட்டியே மக்கள் ஆலோசிக்க வேண்டும். “என்ன தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்?” என்று முடிவு செய்ய வேண்டும்.
“கடந்த முறை நிறைவேற்றிய தீர்மானம் என்ன ஆனது?” என்று கேட்க வேண்டும்.“பணம் எவ்வளவு வந்தது? எங்கே செலவானது?” என்று கணக்கு கேட்க வேண்டும்.
“நமது குழந்தைகளுக்கு என்ன வசதி வேண்டும்?” “நமது பெண்களின் பாதுகாப்புக்கு என்ன தேவை?” “நமது தொழிலாளர்களின் வாழ்வாதாரம் எப்படி மேம்பட வேண்டும்?” “குடிநீர், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, சாலை, மின்சாரம் ஆகியவற்றில் அடுத்த முன்னுரிமை என்ன?” என்று விவாதிக்க வேண்டும்.
அந்த விவாதங்களிலிருந்து தீர்மானங்கள் உருவாக வேண்டும். அந்தத் தீர்மானங்களிலிருந்து அரசின் செயல்பாடுகள் தொடங்க வேண்டும். அடுத்த கிராம சபையில் அதன் செயல்பாடு குறித்து மக்கள் கணக்கு கேட்க வேண்டும்.
இதுதான் கிராம சுயராஜ்யம்.
தமிழ்நாட்டின் ஆயிரக்கணக்கான கிராம சபைகள் இப்படிப்பட்ட உயிருள்ள மக்கள் சபைகளாக மாறும் நாள் எப்போது?
கிராம சபை நாளன்று மட்டும் மக்கள் கூடாமல், கிராம சபை முடிவெடுத்த நாளிலிருந்து அடுத்த கிராம சபை வரை மக்கள் ஜனநாயகத்தை வாழும் நாள் எப்போது? அந்த நாள் வரும்வரை கிராம சபை ஒரு சட்டப்பூர்வ அமைப்பாக இருக்கலாம், ஆனால் அது மக்கள் ஆட்சியாக மாறாது. அதனால் அந்த நாளுக்காகக் காத்திருப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.“கிராம சபை உயிர்பெறும் நாள் எப்போது?

கிராம சுயராஜ்யம் மலரும் நாள் எப்போது?” என்ற கேள்வியோடு அந்த நாள் வரும் வரை நாம் காத்திருக்க வேண்டுமா?
அந்த நாளை நாமே உருவாக்க வேண்டும். அந்த நாள் எந்தநாளோ? அதற்கு என்ன செய்யலாம் என்பதே நம் முன் உள்ள சவால்.

