அறநிலையத் துறை அரசியல் செய்துள்ளது : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வழக்கில் நீதிபதி கருத்து!

Published On:

| By Kavi

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. 

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. 

ADVERTISEMENT

இந்த நிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில் மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழ்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. கோயில் விழாக்களில் அறங்காவலர் குழு முக்கிய பங்காற்றும் நிலையில் , மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர் பெயர்கள் சேர்க்கப்படவில்லை. 

ADVERTISEMENT

இதற்கு முன்பு நடைபெற்ற விழாக்களின் போது அறங்காவலர் குழு பெயர்கள் அச்சிடப்பட்டுள்ளன. அரசியல் காரணங்களுக்காக அறங்காவலர்களின் பெயர்கள் அச்சிடாமல் விடப்பட்டுள்ளது. 

அறங்காவலர்களின் சட்டப்பூர்வ பணிகளில் கோயில் அதிகாரிகள் தலையிடவோ இடையூறு செய்யவோ தடுக்கவோ கட்டுப்பாடு விதிக்கவோ கூடாது. 

ADVERTISEMENT

அறங்காவலர்களின் செயல்பாட்டுக்கு அனைத்து ஒத்துழைப்பும் வழங்க அறநிலையத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக சேர்த்து உத்தரவிட்டார். 

தொடர்ந்து வழக்கு விசாரணையை இன்று செப்டம்பர் 2ம் தேதிக்கு ஒத்தி வைத்திருந்தார். 

அதன்படி வழக்கு இன்று நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்த போது அறங்காவலர் குழு சார்பில் வழக்கறிஞர் திலக்குமார் ஆஜராகி, “அறநிலையத் துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன் நடைபெற்ற அனைத்து கோயில் குடமுழுக்கிலும் அறங்காவலர் குழு பெயர் உள்ளது. அந்த முறையையே பின்பற்ற உத்தரவிட வேண்டும்” என்று வாதங்களை முன் வைத்தார். 

இதைக் கேட்ட நீதிபதி சரவணன், ”அறநிலையத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். கோயில் செயல் அலுவலர் தான் சுயமாக இந்த முடிவை எடுத்து அறங்காவலர்கள் பெயரை நீக்கி உள்ளார். இணை ஆணையர் செல்லதுரை தனது பெயரை பத்திரிக்கையில் பதிவு செய்துள்ளார். மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் அறங்காவலர்கள் குழு பெயர் விடுபட்டது தவறு” என்று கூறினார். 

அப்போது தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், ”3000 பத்திரிகைகள் அடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு விட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும் மீண்டும் பத்திரிகை கொடுக்க முடியாத சூழலில் இருக்கிறோம்” என்று தெரிவித்தார். 

இதைத்தொடர்ந்து நீதிபதி, ” அறங்காவலர்கள் பெயர் விடுபட்டது தவறு.  குடமுழுக்கு முடிந்த பின் கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் கண்டிப்பாக அறங்காவலர் குழு பெயர் இடம்பெற வேண்டும். மக்கள் அமைதியை தேடி வரக்கூடிய இடம்தான் கோயில்கள். இந்த இடத்தில் அறநிலையத்துறை அரசியல் செய்வது வருந்ததக்க செயல். 

இது ஏற்கத்தக்கது அல்ல. வரும் காலங்களில் மத வழிபாட்டு தலங்களில் எந்த விதமான அரசியல் நிகழ்வுகளும் இருக்கக் கூடாது. கோயில் நிகழ்ச்சிகள் விதிப்படி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share