தமிழக வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்திருக்கும் நிலையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை 25 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பல குறைந்த மற்றும் உயர் மதிப்புடைய கட்டமைப்பு பணிகளுக்காக 1000க்கும் மேற்பட்ட டெண்டர்களை வெளியிட்டுள்ளது.
இந்த டெண்டர்களில் நிலவும் கடும் போட்டி காரணமாக அரசுக்கு திட்ட செலவில் 30 சதவிகிதம் வரை நிதி சேமிக்கப்படுவதாக தகவல்கள் வருகின்றன.
மதுரை, சேலம், திருச்சி, கரூர், வேலூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் 10 டெண்டர்களை ஆய்வு செய்ததில், சாலை அமைத்தல், பயோ மைனிங், குடிநீர் திட்டங்கள் மற்றும் கிணறு தோண்டுதல் போன்ற 50 லட்சம் முதல் 100 கோடி ரூபாய் வரையிலான பணிகளுக்கு 10 ஒப்பந்ததாரர்கள் வரை பங்கேற்று அரசு குறிப்பிட்ட தொகையை விட குறைத்து கேட்கின்றனர்.
இந்த சேமிப்பு மற்றும் ஆரோக்கியமான போட்டியை தவிர ஒப்பந்ததாரர்கள் கூட்டாக சேர்ந்து விலையை உயர்த்தும் சிண்டிகேட் முறைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருப்பதையும் இந்த டெண்டர்கள் காட்டுவதாக டைம்ஸ் ஆப் இந்தியா ஊடகம் தெரிவித்துள்ளது.
| மாநகராட்சிகள் | பணிகள் | திட்ட மதிப்பீடு | ஒப்பந்ததாரர் கோரிய தொகை | % சேமிப்பு | சேபிப்பு ரூபாயில் |
| கரூர் | கூட்டுப் குடிநீர்த் திட்டம் (டெண்டர் 1) | ரூ.103.8 கோடி | ரூ.94.5 கோடி | 9.02% | ரூ.9.37 கோடி |
| கரூர் | கூட்டுப் குடிநீர்த் திட்டம் (டெண்டர் 2) | ரூ.114.4கோடி | ரூ.104.1 கோடி | 9.01% | ரூ.10.31 கோடி |
| நாகர்கோயில் | குப்பை மேலாண்மை | ரூ.4.04கோடி | ரூ.2.89 கோடி | 28.35% | ரூ.1.14 கோடி |
| மதுரை | கான்கிரீட் சாலை அமைத்தல் | ரூ.92.4 லட்சம் | ரூ.67.5 லட்சம் | 26.90% | ரூ.24.9 லட்சம் |
| குளித்தலை | காவிரியில் உறிஞ்சு கிணறு மற்றும் மோட்டார் | ரூ.1.45கோடி | ரூ.1.13 கோடி | 22% | ரூ.31.9 லட்சம் |
| மேட்டுப்பாளையம் | பயோ-மைனிங் | ரூ.2.59 கோடி | ரூ.2.13 கோடி | 17.7% | ரூ.46 லட்சம் |
- கடும் போட்டி: ஒரு பணிக்கு 10 முதல் 12 ஒப்பந்ததாரர்கள் வரை போட்டி.
- சேமிப்பு: திட்டச் செலவில் 25% முதல் 30% வரை மிச்சம்.
திட்டங்களின் செலவுத்தொகை அதிகரித்தால் அதற்கு உயர் அதிகாரிகளிடமிருந்து கட்டாயம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும். திட்டத்தின் செலவுகள் அதிகரிக்காமல் இருக்க அரசு நிர்ணயத்தை விகிதப் பட்டியலின்படி சரியான மதிப்பீடுகளை தயாரிப்பதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி சமீபத்தில் ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில் டெண்டர் செயல்பாட்டின் போது ஒரு திட்டத்தின் செலவு 2 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்தால் அதற்கு உயர் அதிகாரிகளிடமிருந்து கட்டாயம் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் கூறுகையில், “100 ரூபாய் மதிப்புள்ள ஒரு திட்டத்துக்கு ஒப்பந்ததாரர் 28 ரூபாய் குறைத்து கேட்கிறார் என்றால் திட்டத்தின் உண்மையான மதிப்பீடு 65 ரூபாயாகதான் இருந்திருக்க வேண்டும். இதில் ஒப்பந்ததாரருக்கு 7 ரூபாய் வரை லாபமும் அடங்கும்.
தனக்கு நஷ்டம் ஏற்படும் என்றால் எந்த ஒரு ஒப்பந்ததாரரும் குறைந்த விலைக்கு கேட்க மாட்டார். புதிய ஒப்பந்ததாரர்கள் கூட குறைந்தபட்சம் 2 சதவீத லாபத்தை எதிர்பார்த்தே டெண்டர் கேட்பார்கள். இந்த நெகட்டிவ் பிட்டிங் ஒரு நல்ல தொடக்கம்தான். அரசு அதிகாரிகள் இதுவரை திட்ட மதிப்பீடுகளை மிகைப்படுத்தி தயாரித்து வந்துள்ளனர் என்பதையும் இனி அவர்கள் துல்லியமான மதிப்பீடுகளை தயாரிக்க வேண்டும் என்பதையும் இது காட்டுகிறது” என்று கூறியுள்ளார்.
திமுக ஆட்சியிலும் முதல் இரண்டு ஆண்டுகளில் கூட டெண்டர்களில் போட்டி நிலவியது என்று கூறும் அவர், ஆண்டுதோறும் அரசு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர்களை வெளியிடுகிறது என்றும் இதில் 20% சேமிக்கப்பட்டால் கூட 60 ஆயிரம் கோடி நிதி மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
