52 கோயில்களில் செல்போனுக்கு தடை – ஆனால்… அமைச்சர் ரமேஷ் முக்கிய தகவல்!

Published On:

| By Kavi

இன்று (செப்டம்பர் 1) முதல் தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 52 பெரிய கோயில்களில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கோயிலுக்கு வெளியே செல்போன்களை வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. லாக்கர் அறையில் வைக்கப்படும் செல்போன்களுக்கு டோக்கன் கொடுக்கப்படுகிறது. தொடர்ந்து பக்தர்கள் சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். 

ADVERTISEMENT

அதேசமயம் கேமரா இல்லாத செல்போன்களை எடுத்துச் செல்லலாம் என்று அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் கூறியுள்ளார். 

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிவிப்பில்,  ” ஏற்கனவே உள்ள நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையிலும், திருக்கோயில்களில் பக்தர்கள் அமைதியான சூழலில் இறைவனை தரிசனம் செய்வதற்காகவும், தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள 52 முதுநிலைத் திருக்கோயில்களில் மட்டும் மொபைல் போன்களை எடுத்துச் செல்வதற்கான தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஏற்கனவே பழனி, திருச்செந்தூர், மதுரை மற்றும் இராமேஸ்வரம் ஆகிய திருக்கோயில்களில் மொபைல் போன்களுக்கு தடை நடைமுறையில் உள்ளது. 

பல்வேறு திருக்கோயில்களில் இறைவனின் திருவுருவச் சிலைகளைப் புகைப்படம் எடுப்பது, வீடியோக்களைப் பதிவு செய்வது உள்ளிட்ட நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுவதால், இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பொதுமக்கள் தங்களது கேமரா வசதியுடன் கூடிய கைப்பேசிகளை முடிந்தவரை தங்களது வாகனங்களிலோ அல்லது தங்கியிருக்கும் அறைகளிலோ வைத்துவிட்டு வருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், கைப்பேசிகளை திருக்கோயில்களில் பாதுகாப்பாக வைப்பதற்கான லாக்கர் வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

அவசரகாலத் தேவைகளின்போது பக்தர்களுக்கு உதவுவதற்காக திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மூலம் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புகைப்படம் எடுக்கும் வசதி இல்லாத சாதாரண கைப்பேசிகளுக்கு இந்தக் கட்டுப்பாடு பொருந்தாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நமது திருக்கோயில்களில் ஆரோக்கியமான, அமைதியான மற்றும் ஆன்மிகமான வழிபாட்டுச் சூழலை உருவாக்க பக்தர்கள் அனைவரின் ஒத்துழைப்பும் இன்றியமையாதது.

அனைவரும் ஒன்றிணைந்து, நமது திருக்கோயில்களில் சிறப்பான வழிபாட்டுச் சூழலை உருவாக்கிடுவோம்” என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share