தமிழகத்தில் உள்ள 25க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் திருத்தியமைக்கப்பட்ட கட்டண விகிதங்களின்படி, இன்று அதிகாலை முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டு வசூலிக்கப்பட்டு வருகிறது. விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபேட்டை, சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய சுங்கச்சாவடிகளில் இந்தக் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகம் முழுவதும் மொத்தம் 77 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகின்றன. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு 5 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்படுவது வழக்கம். சுங்க கட்டண உயர்வு என்பது ஆண்டுதோறும் ஏப்ரல் 1 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் அமல்படுத்தப்படும். அந்தவகையில் செப்டம்பர் 1-ஆம் தேதியான இன்று முதல் சுங்கக் கட்டணம் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.
வாகனங்களின் வகையைப் பொறுத்து ஒரு வழிப் பயணம் மற்றும் மாதாந்திரக் கட்டணம் ரூ.5 முதல் ரூ.735 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி, செங்குறிச்சி, வாலாஜாபாத், சமயபுரம், திருச்சி, மதுரை உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் வாகன வகையைப் பொறுத்து ரூ.5 முதல் ரூ.20 வரை கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண உயர்வின்படி, லாரிகளுக்கு இதுவரை ரூ.380-ஆக இருந்த சுங்கக் கட்டணம் தற்போது ரூ.20 உயர்த்தப்பட்டு ரூ.400-ஆக வசூலிக்கப்படுகிறது. பேருந்துகளுக்கு ரூ.240-லிருந்து ரூ.250 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல், ஒருமுறை பயணிக்கும் லாரி, பேருந்து உள்ளிட்ட வாகனங்களுக்குக் கட்டணம் ரூ.10 வரையிலும், ஒரே நாளில் பலமுறை பயணிக்கும் அதே வாகனங்களுக்குக் கட்டணம் ரூ.15 வரையிலும் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது.
இந்த சுங்க கட்டண உயர்வு வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சுங்கக் கட்டணம் உயர்வால், லாரி வாடகை உயரும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக காய்கறிகள், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட சரக்குகளின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து, அதன் சுமை சாமானிய மக்களைச் சென்றடையும் என வர்த்தகர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
