சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டரின் விலை இன்று (செப்.1)ரூ. 10.50 வரை உயர்ந்துள்ளது.
இந்துஸ்தான், பாரத், இந்தியன் ஆயில் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் 14.20 கிலோ எடையில் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரையும், 19 கிலோ எடையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டரையும் விநியோகம் செய்து வருகின்றன.
சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை நிலவரம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவற்றின் விலைகளை நிர்ணயித்து வருகின்றன.
இதில் சிலிண்டர்களின் விலைகளை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது வழக்கம். அந்த வகையில் இன்று (செப்டம்பர் 1) சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.
இன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.10.50 உயர்ந்து ரூ.2916.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இல்லாமல் ரூ.957.50 காசுகள் என்ற நிலையில் நீடிக்கிறது.
அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள நிலையில் தற்போதைய சிலண்டர் விலை உயர்வு காரணமாக ஓட்டல்களில் உணவுகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
