தமிழகத்தில் முதல் கட்டமாக வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் நிறைவு!

Published On:

| By Mathi

Census of India 2027

Census of India 2027: தமிழ்நாட்டில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமான, வீட்டுப் பட்டியல், வீட்டு வசதிக் கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்துள்ளன.

இந்த கணக்கெடுப்புக்கான களப்பணிகள் ஆகஸ்ட் 1 அன்று தொடங்கியது. வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு நடத்துவதற்கு முன்னதாக, ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை சுய கணக்கெடுப்புக்கான தளம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம், குடியிருப்பாளர்கள் தங்களது குடும்ப விவரங்களை அதிகாரப்பூர்வ மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இணையதளம் வழியாக ஆன்லைனில் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டது.

ADVERTISEMENT

நகர்ப்புற, கிராமப்புறங்களில் முழுமையான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்காக, இந்தப் பணியில் சுமார் 1.2 லட்சம் வீட்டுப் பட்டியல் பகுதிகளில் 1.15 லட்சத்திற்கும் அதிகமான கணக்கெடுப்பாளர்களும் 19,000 மேற்பார்வையாளர்களும் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்தக் கட்டத்தில், கணக்கெடுப்பாளர்கள் 33 முக்கியக் கேள்விகளுக்கு பதில்களை சேகரித்தனர். இவை வீட்டுச் சொத்துக்கள், குடிநீர், மின்சாரம், சுகாதாரம், சமையலறை வசதிகள், டிஜிட்டல் இணைப்பு போன்ற அத்தியாவசிய குடிமை வசதிகளுக்கான அணுகல் ஆகியவற்றை மதிப்பிடுகின்றன.

ADVERTISEMENT

வீட்டுப் பட்டியல், வீட்டுவசதிக் கணக்கெடுப்புக் கட்டத்தை எவ்விதத் தடங்கலுமின்றி நிறைவு செய்வதை உறுதிசெய்த அனைத்துக் கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், நிர்வாகப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, முயற்சிகளுக்கு தமிழ்நாடு மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரகம் தனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறது.

2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்கான இந்த முக்கியத் தரவு சேகரிப்புப் பணிக்காக அளிக்கப்பட்ட விலைமதிப்பற்ற ஆதரவிற்கும், ஒத்துழைப்பிற்கும் மக்கள், மாநில அரசு, முதன்மை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலர்கள், மாவட்ட அலுவலர்கள், மாநகராட்சிகள், பொறுப்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அலுவலர்கள், ஊடகத்தினருக்கும் இயக்குநரகம் தனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

ADVERTISEMENT

1948-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, இந்த செயல்பாட்டின் போது சேகரிக்கப்படும் அனைத்துத் தனிநபர் பதில்களும் ரகசியமாக வைக்கப்படுகின்றன. 2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டமான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, 2027 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share