பேரிடரில் நேபாளம்.. உலக நாடுகளே.. ‘இதை மட்டும் செய்துவிடாதீர்கள்..’.. நடிகை மணீஷா கொய்ராலா உருக்கம்!

Published On:

| By Mathi

Nepal Disaster: Actress Manisha Koirala's Emotional Appeal to Global Communities

“நேபாளத்தின் திபெத் எல்லைப் பகுதியில் பேரழிவு ஏற்பட்டுள்ளது என்பதற்காக, நாட்டின் மற்ற பகுதிகளுக்குப் பயணம் செய்வதை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தவிர்த்துவிட வேண்டாம். சுற்றுலாதான் நேபாளத்தின் உயிர்மூச்சு” என்று நடிகை மணீஷா கொய்ராலா (Manisha Koirala ) உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் நேற்று (ஆகஸ்ட் 30), ஈஷா அறக்கட்டளை நடத்திய “நேபாள மக்களுடன் ஒருமைப்பாடு” நிகழ்வில் நடிகை மணீஷா கொய்ராலா பேசியதாவது: இன்று குருஜி என்னை அழைத்தபோது, எதையும் யோசிக்காமல் அப்படியே வந்துவிட்டேன்.

ADVERTISEMENT

நாம் உணரும் இந்த வலி மிகப் பெரியது; விவரிக்க முடியாதது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இன்று நான் வார்த்தைகளற்று நிற்கிறேன். எப்போதையும் விடக் குழப்பமாகவும் இருக்கிறேன்.

சற்று முன்பு குருஜியைச் சந்தித்தபோது அவரிடம், “குருஜி, என் மனதில் எந்த வார்த்தையும் தோன்றவில்லை. நான் என்ன பேசுவது, என்ன சொல்வது என்று தெரியவில்லை. நமது நாட்டில் ஏன் இதுபோன்ற இயற்கைப் பேரிடர்கள் மீண்டும் மீண்டும் ஏற்படுகின்றன? ஒருமுறை நிலநடுக்கம் ஏற்படுகிறது; மற்றொரு நேரத்தில் தர்பார் எரிகிறது; இப்போது இதுபோன்ற பயங்கரமான பெருவெள்ளம் ஏற்படுகிறது. இவற்றை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று கூறினேன்.

ADVERTISEMENT

ஆயிரக்கணக்கான மக்கள்; ஆயிரக்கணக்கான மனிதர்களின் வேதனை.. நிலநடுக்கம் ஏற்பட்டபோது நான் சிந்துபால்சோக் சென்று பார்த்தேன். மக்களின் வீடுகள் இடிந்து கிடந்ததையும், அவர்கள் கட்டியெழுப்பிய வாழ்க்கை சிதைந்துபோனதையும் நேரில் கண்டேன்.

இப்போது எனக்குக் கோபம்கூட வரவில்லை. நான் சென்று நிலைமையைப் பார்க்கிறேன். ஆனால் நாம் ஏன், எதனால் அடிக்கடி இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்கிறோம்? இதை இயற்கையின் செயல் என்று மட்டும் சொல்ல முடியுமா? அல்லது இதற்கு நாமும் காரணமா? நமக்கு ஏன் இவ்வளவு வேதனை?

ADVERTISEMENT

நேபாள மக்களாகிய நாம் மிகுந்த மனஉறுதி கொண்டவர்கள்; அறிவும் திறமையும் நிறைந்தவர்கள். ஆம், நிச்சயமாக நாம் அப்படித்தான்.

ஆனால் இந்த வலி சற்றேனும் குறையக் கூடாதா? இன்னும் குறைவான துயரத்தை நாம் சந்திக்க முடியாதா? இறைவனே, தயவுசெய்து எங்களுடைய வேதனையைக் குறைக்க முடியாதா?

கடந்த ஆண்டு ஏற்பட்ட அந்த வெள்ளத்தைப் பார்த்தபோது நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளானேன். இப்போது என்னுடைய உணர்வுகளை எப்படிப் புரிந்துகொள்வது, உங்களிடம் என்ன சொல்வது, எப்படி நடந்துகொள்வது, என்ன செய்வது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த வாழ்க்கை இன்னும் எத்தனை வேதனைகளை நமக்குக் காட்டப்போகிறது?

எனக்குத் தெரிந்தது ஒன்றே ஒன்றுதான்: ஒரு பிரச்சினையை எதிர்கொள்ளும்போது, அதை சமாளித்து மீண்டு வருவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. நம்மிடம் உள்ள அத்தனை வலிமையையும் ஒன்றுதிரட்டி, சிறு சிறு அடிகளாக முன்னே செல்ல வேண்டும். அதைத்தான் நமது நாடும் நமது மக்களும் செய்வார்கள்.

தீர்வு என்னவென்று தெரியாமலும், எல்லாக் கேள்விகளுக்கும் பதில்கள் இல்லாமலும் இருக்கலாம். இருந்தாலும் நிலைமை மேம்படும் என்ற நம்பிக்கையுடன் நாம் முன்னேறுவோம்.

இத்தகைய பேரிடர் மீண்டும் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு நாம் இன்னும் முழு வீச்சில் தயாராக இருப்போம் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. உண்மையிலேயே நாம் அப்படி தயாராக இருப்போமா? அது இப்போது ஒரு நம்பிக்கை மட்டுமே.

மனித மனம் படைப்பாற்றல் கொண்டது. மனிதர்களாகிய நாம் மிகுந்த மீள்திறனும் மனஉறுதியும் கொண்டவர்கள்.

உலக வெப்பமயமாதலின் தாக்கம்

உலக வெப்பமயமாதல் என்பது நம்மிடமிருந்து வெகுதொலைவில் நடைபெறும் ஏதோ ஒரு நிகழ்வு அல்ல. அதன் கடுமையான தாக்கத்தை நாம் இப்போது நேரடியாக எதிர்கொண்டிருக்கிறோம்.

நமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்க வேண்டும்?

மனிதர்களாகிய நாம் – சீனா, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளின் மக்கள் – எப்படியாவது கைகோர்த்து, கூட்டாகச் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாம் அனைவரும் ஒருவரோடு ஒருவர் மிகவும் ஆழமாகப் பிணைக்கப்பட்டிருக்கிறோம்.

இத்தகைய பேரழிவு மீண்டும் ஏற்படுவதைத் தவிர்க்க நாம் ஒன்றிணைந்து முயற்சி செய்ய வேண்டும்.

இந்தத் துயரமான தருணத்தை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், இந்த அனுபவம் நம்மைச் சிறந்த மனிதர்களாக மாற்ற வேண்டும் என்று நம்புகிறேன்; பிரார்த்திக்கிறேன். நமக்குச் சொந்தமானவர்களுக்கு உதவுவதைப் போலவே பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் நாம் உதவ வேண்டும்.

சர்வதேச சமூகத்துக்கான வேண்டுகோள்

இதற்கு அப்பால், சர்வதேச சமூகத்தினரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைக்க விரும்புகிறேன்.

நேபாளத்தின் மீது நீங்கள் மீண்டும் மீண்டும் மிகுந்த அன்பையும் பரிவையும் காட்டியிருக்கிறீர்கள். உங்களுடைய அன்பும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்.

ஒரு நாடாகிய எங்களுக்கு, உலக மக்கள் நேபாளத்திற்கு வருவது அவசியம். “இந்த நாடு முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளது; இங்கு செல்ல வேண்டாம்” என்று நினைத்து நேபாளத்தை ஒதுக்கிவிடக் கூடாது.

நீங்கள் அனைவரும் தொடர்ந்து எங்கள் நாட்டிற்குப் பயணம் செய்ய வேண்டும்.

ஆம், திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஒரு பெரும் பேரழிவு நிகழ்ந்துள்ளது. ஆனால் சுற்றுலா என்பது நேபாளத்தின் உயிர்மூச்சு.

இதை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். நாட்டின் மற்ற பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து வருவது மிகவும் அவசியம்.

தொடர்ந்து பிரச்சினைகளைச் சந்திக்கும் நாடாக நேபாளம் அறியப்படுவதை நாம் விரும்பவில்லை. நேபாளம் உண்மையில் எதற்காக அறியப்பட வேண்டுமோ, அதற்காகவே அறியப்பட வேண்டும்: அழகான காலநிலை, வலிமையான இமயமலை, அற்புதமான இயற்கை, சிறந்த மக்கள், வளமான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம்.

என்னைப் பொறுத்தவரை, நேபாள மக்கள் உலகில் முதலிடத்திற்குரியவர்கள்.

சர்வதேச சமூகத்தினர் மீண்டும் நேபாளத்திற்குப் பயணம் செய்ய வேண்டும் என்று நம்பிக்கையுடன் கேட்டுக்கொள்கிறேன்; ஊக்குவிக்கிறேன்.

குருஜி, இந்தச் சோதனையான காலகட்டத்தில் நேபாளத்துக்கும் எங்களுக்கும் உங்களுடைய ஆசிகளை வழங்கியதற்காக மிக்க நன்றி. இவ்வாறு நடிகை மணீஷா கொய்ராலா உருக்கமாக பேசினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share