திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே வாகனம் மீது 4 பிஞ்சு குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்துக்கு ஆழ்ந்த வேதனை, இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் விஜய் அவர்களது குடும்பத்துக்கு நிதி உதவியை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் விஜய் இன்று (ஆகஸ்ட்30) வெளியிட்ட அறிவிப்பு: திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வட்டம், கொல்லப்பட்டி கிராமத்தில் இன்று (30.08.2026) சாலையின் ஓரத்தில் அமர்ந்திருந்த புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த
- அஞ்சலையம்மாள் (வயது 60) க/பெ. பழனிசாமி
அய்யலூர் கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் - யோகவர்ஷினி (வயது 11) த/பெ. நாகராஜ்
- அனன்யா (வயது 6) த/பெ. நாகராஜ்
- தனுஸ்ரீ (வயது 7) த/பெ. ஜெகதீஷ்
- போஸ்கிரண் (வயது 6) த/பெ. சின்னதம்பி ஆகியோர் மகேந்திரா தோஸ்ட் வாகனம் எதிர்பாராத விதமாக மோதிய விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இவர்களில் 4 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் திருமதி. அஞ்சலையம்மாள் அவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்விபத்தில் உயிரிழந்த நான்கு குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு,
- உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும்
- படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும்
முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
வேன் ஓட்டுநர் சரண்
இதனிடையே 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தி, வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுநர் சரவணன், போலீசில் சரணடைந்துள்ளார்.
