நா.மணி
அரசு மாணவர் விடுதிகள் என்பது வெறுமனே மாணவர்கள் தங்கிப் படிக்கும் இடங்கள் அல்ல. வீட்டில் தங்கி கல்வி கற்க முடியாத ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் இல்லாதவர்கள், பெற்றோர் வெளியூரில் பணியாற்றுவதால் அவர்களின் பராமரிப்பில் தங்கி படிக்க முடியாதவர்கள் என சமூகத்தின் ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு கல்விக்கான வாய்ப்பை உருவாக்கும் மிக முக்கியமான சமூகநீதிக் களங்களாக அவை விளங்குகின்றன.
தற்போது அரசு மாணவர் விடுதிகளின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் உற்று நோக்கத்தக்கது. குறிப்பாக, மாணவர்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் கூட்டுறவு அங்காடிகளில் இருந்து நேரடியாக விடுதிகளுக்கு வழங்கப்படும் நடைமுறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொருட்கள் வாங்குவதில் முற்றாக முறைகேடுகள் நீக்கம்
மாணவர்களின் வருகைப் பதிவை அடிப்படையாகக் கொண்டு தேவையான பொருட்கள் அனுப்பப்படுவதால், பொருட்கள் வாங்குவதிலும் விநியோகிப்பதிலும் முறைகேடுகளுக்கு இடமில்லாத நிலை உருவாகியுள்ளது.
கடந்த காலங்களில் சில விடுதிகளில் மளிகைப் பொருட்களில் ஒரு குறிப்பிட்ட அளவு குறைப்பு செய்வது, பொருட்களை கொஞ்சம் இடையில் எடுத்து வைத்துக்கொள்வது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஆனால், பொருட்கள் நேரடியாக விடுதிகளுக்கே வந்து சேரும் புதிய நடைமுறை, இதுபோன்ற முறைகேடுகளுக்கு வாய்ப்பை முற்றாக குறைத்துள்ளது. காய்கறி, முட்டை, கோழிக்கறி போன்ற உணவுப் பொருட்களுக்குத் தனிக் கணக்கு பராமரிக்கப்பட்டு, அதற்கான தொகை இயக்குநரகத்திலிருந்தே நேரடியாகச் செலுத்தப்படும் நடைமுறையும் அறிமுகம் ஆகியுள்ளது.
உத்தரவாதப்படுத்தப்பட்ட சுகாதாரம்

விடுதிகளின் சுகாதாரத்திற்குத் தேவையான தூய்மைப் பொருட்களும் கூட்டுறவு பண்டகசாலைகளிலிருந்து நேரடியாக வழங்கப்படுகின்றன. ஒப்பந்த அடிப்படையில் துப்புரவுப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, கழிவறைகள், குளியலறைகள் உள்ளிட்ட பகுதிகள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பல விடுதிகளில் பழுதுபார்த்தல், பெயிண்ட் அடித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்கள் தங்குவதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டு வருகிறது.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் செயல்படும் மாணவர் விடுதிகளில் காப்பாளர்களின் பொறுப்பும் கண்காணிப்பும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் முறையாக உணவருந்துகிறார்களா என்பதை காப்பாளர்கள் கண்காணிக்க வேண்டும். அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தி , அதற்கான காணொளிப் பதிவுகளும் உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது.
தேவையறிந்து தரம் உயர்த்தப்படும் விடுதிகள்
அதேபோல், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வில் தோல்வியடைந்தால், அதற்கான காரணங்கள் குறித்து காப்பாளர்களிடம் விசாரணை நடத்தப்படும் நிலையும் கடந்த ஆட்சியிலேயே கொண்டு வரப்பட்டது. மாணவர்களின் வருகையைக் கண்காணிக்க பயோமெட்ரிக் வருகைப் பதிவு காலை மற்றும் மாலை என இரு நேரங்களிலும் மேற்கொள்ளப்படுகிறது. பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை குறைந்திருந்த சில விடுதிகள், கல்லூரி மாணவர்கள் தங்கும் வகையில் தரம் உயர்த்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. கோவையில் மட்டுமே எட்டு பள்ளி மாணவர்களுக்கான சில விடுதிகள் மூடப்பட்டு, கல்லூரி மாணவர்களுக்காக புதிய விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.
பணியாளர் பணியிடங்களை உறுதி செய்ய வேண்டும்

இந்த மாற்றங்கள் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை அதிகரித்திருப்பது வரவேற்கத்தக்கது. விடுதி நிர்வாகத்தில் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்த முறைகேடுகள் மற்றும் தனிப்பட்ட ஆதாயங்களுக்கான வாய்ப்புகள் குறைக்கப்பட்டுள்ளது. அரசு நிதி முழுமையாக மாணவர்களுக்குச் வந்து சேர்கிறது. இதனால் பணியாளர்களும் தங்களது பொறுப்புகளை நேர்மையாகவும் முறையாகவும் நிறைவேற்ற வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
ஆனால், நிர்வாகக் கட்டுப்பாடுகள் மட்டும் போதுமானவை அல்ல. விடுதியில் பணியாற்றும் பணியாளர்களுக்குத் தேவையான எண்ணிக்கையும் உறுதி செய்யப்பட வேண்டும். இரண்டு சமையல்காரர்கள் தேவைப்படும் விடுதியில் ஒருவர் மட்டுமே இருந்தால், அவர் மீது பணிச்சுமை விழும்.
குறிப்பாக மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் இரண்டு சமையல்காரர்கள் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல் தேவையான அளவு காப்பாளர் மற்றும் பிற பணியாளர்களும் இருக்க வேண்டும். பணியாளர் பற்றாக்குறையால் பணியில் இருப்பவர்கள் சிரமப்படுவது நிர்வாகத் திறனைப் பாதிக்கும்.
தாய் போல் காத்து நிற்கும் தன்மை பெற வேண்டும் காப்பாளர்கள்
காப்பாளரின் பணியை வெறும் உணவு, வருகைப் பதிவு, விடுதி ஒழுங்கு ஆகியவற்றைக் கண்காணிப்பதாக மட்டும் சுருக்கிவிடக் கூடாது. உண்மையில் காப்பாளர் ஒரு மாணவரின் கல்வி மற்றும் வாழ்க்கை முன்னேற்றத்தில் மிக முக்கியமான ஆதரவாளராக இருக்க வேண்டும்.
காலையில் மாணவர்கள் உரிய நேரத்தில் எழுந்திருக்கிறார்களா? எழுந்து படிக்கிறார்களா? மாலை பள்ளி அல்லது கல்லூரியிலிருந்து திரும்பிய பிறகு அவர்களது நிலை என்ன? அவர்கள் முறையாகப் படிக்கிறார்களா? யாரேனும் சோர்வாகவோ மனவருத்தத்திலோ இருக்கிறார்களா? யாருக்கேனும் குடும்பம், கல்வி அல்லது நண்பர்கள் தொடர்பான பிரச்சினைகள் உள்ளனவா? என்பவற்றைக் காப்பாளர் கவனிக்க வேண்டும்.
சோர்வாக இருக்கும் ஒரு மாணவனின் அருகில் அமர்ந்து, “என்ன பிரச்சினை?” என்று கேட்டு அவன் மனம் திறந்து பேசும் சூழலை உருவாக்குவது காப்பாளரின் மிக முக்கியமான பணிகளில் ஒன்றாக இருக்க வேண்டும். ஒரு தாயிடம் பேசுவது போல மாணவர்கள் தங்களது பிரச்சினைகளைத் தயக்கமின்றிப் பகிர்ந்து கொள்ளும் பாதுகாப்பான சூழலை விடுதி உருவாக்க வேண்டும்.
மாணவர்களின் தேவையறிந்து உதவும் உள்ளம் வேண்டும்
ஒவ்வொரு மாணவரும் ஒரே மாதிரியான தேவைகளைக் கொண்டவர்கள் அல்ல. ஒருவருக்கு கூடுதல் கல்வி உதவி தேவைப்படலாம். இன்னொருவருக்கு வாசிப்புப் பழக்கம் தேவைப்படலாம். ஒருவருக்கு மொழித்திறன் வளர்ப்பு தேவைப்படலாம். மற்றொருவருக்கு தன்னம்பிக்கை வளர்க்கும் வாய்ப்பு தேவைப்படலாம். காப்பாளர் ஒவ்வொரு மாணவரையும் தனித்தனியாகக் கவனித்து, அவர்களின் கல்வித் திறனையும் வாழ்க்கைத் திறன்களையும் மேம்படுத்துவதற்கான வழிகளை அடையாளம் காண வேண்டும்.
இதன் மூலம் அரசு மாணவர் விடுதி என்பது தங்கும் இடம் என்ற நிலையிலிருந்து மாணவர்களை உருவாக்கும் கல்விச் சூழல் என்ற நிலைக்கு உயர முடியும்.
நீடிக்கும் தேவைகள்
விடுதிகளின் உள்கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் தேவைப்படுகின்றன. புதிய விடுதிகள் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வருகின்றன. ஏற்கனவே கட்டப்பட்டுள்ள சில புதிய விடுதிகளும் தற்போது சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு விடுதியிலும் சுத்தமான குடிநீர் கிடைப்பதற்காக RO அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது.
மாணவர்களுக்கு தரமான துணியில் சீருடைகள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில் துணியை தைத்து கொடுப்பதால் அளவுகளில் சிக்கல் இருக்கிறது. அதற்கு பதிலாக, மாணவர்களின் அளவுக்கு ஏற்ப அதைத் தைக்க ஏற்பாடு செய்யப்பட்டால் அது இன்னும் சிறப்பானதாக இருக்கும். சிறியதாகத் தோன்றும் இத்தகைய நடவடிக்கைகள்தான் மாணவர்களின் கண்ணியத்தையும் நம்பிக்கையையும் உயர்த்துகின்றன.
ஒரு காலத்தில் அரசு விடுதிகளில் மாணவர்களின் அடிப்படைத் தேவைகள் கூட முறையாக நிறைவேற்றப்படவில்லை என்ற குற்றச்சாட்டுகள் இருந்தன. ஆனால், இன்று பொருட்கள் நேரடியாகச் சென்றடைவது, பயோமெட்ரிக் வருகைப் பதிவு, உணவைக் கண்காணித்தல், சுகாதாரப் பராமரிப்பு, புதிய கட்டிடங்கள், குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஒரு முக்கியமான மாற்றத்தைக் காட்டுகிறது.
அதே நேரத்தில், கடந்த காலத்தில் விடுதி நிர்வாகத்தில் நிலவியதாகக் கூறப்பட்ட கூடுதல் வருமானம் போன்ற எதிர்பார்ப்புகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு, பணியாளர்கள் தங்களது பணியைப் பொறுப்புடனும் நேர்மையுடனும் செய்வதற்கான நிர்வாகச் சூழல் உருவாக வேண்டும். எந்தத் தவறுக்கும் இடமில்லாத வெளிப்படையான நிர்வாகம் உருவாகும்போது, விடுதிகளின் உண்மையான நோக்கம் நிறைவேறும்.
சமூக நீதிக்கான நிறுவனம் என்பதை ஒவ்வொரு செயலும் உணர்த்த வேண்டும்:
அரசு மாணவர் விடுதிகள் சமூகநீதியின் மிக முக்கியமான நிறுவனங்கள். ஏனெனில் இங்கு வந்து தங்கிப் படிப்பவர்கள் பெரும்பாலும் வீட்டிலேயே தேவையான கல்விச் சூழலைப் பெற முடியாத மாணவர்கள். பொருளாதார வசதி இல்லாததால் தனியார் விடுதிகளில் பணம் செலுத்தித் தங்கிப் படிக்க முடியாதவர்கள். சமூக மற்றும் குடும்பச் சூழல்களால் பல்வேறு தடைகளை எதிர்கொள்பவர்கள். இவர்களுக்கு அரசு விடுதி என்பது ஒரு கட்டிடம் மட்டுமல்ல. அது கல்விக்கான ஒரு வாய்ப்பு, பாதுகாப்புக்கான ஒரு இடம், எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு தளம்.
எனவே, அரசு மாணவர் விடுதிகளை நிர்வகிப்பதில் உணவு, கட்டிடம், தூய்மை, வருகைப் பதிவு ஆகியவற்றுடன் நிறுத்திக் கொள்ளாமல், ஒவ்வொரு மாணவரின் கல்வி முன்னேற்றத்தையும் வாழ்க்கை முன்னேற்றத்தையும் மையமாகக் கொள்ள வேண்டும். காப்பாளர்கள் இதன் மையப் புள்ளியாக இருக்க வேண்டும்.
திறன் வளர்ப்பில் தீவிர கவனம் தேவை

மாணவர்களை எழுப்புவது முதல் அவர்களின் படிப்பைக் கண்காணிப்பது வரை, அவர்களின் மனநிலையைப் புரிந்துகொள்வது முதல் திறன்களை வளர்ப்பது வரை காப்பாளர்களின் பங்கு விரிவடைய வேண்டும்.இதனைச் சிறப்பாகச் செய்தால், இதுவரை சமூகநீதி மறுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் வாழ்க்கையில் அரசு விடுதிகள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
அரசு வழங்கும் வசதிகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு, கல்வியில் முன்னேறுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு திறன்களையும் கற்றுக்கொண்டு, தங்களது வாழ்க்கையைப் பாய்ச்சல் வேகத்தில் முன்னேற்றிக் கொள்ளும் சிறந்த களமாக அரசு மாணவர் விடுதிகள் மாற வேண்டும்.
அரசு விடுதிகள், சமூக நீதியுடன் கூடிய அடுத்த தலைமுறையை உருவாக்கும் கல்விக் கூடமாக மலர வேண்டும்.
சமூக நீதித்துறை அமைச்சர் செல்லும் இடமெல்லாம் விடுதிகளை பார்வையிடுவது மாணவர்களோடு சேர்ந்து உணவு உண்பது. விடுதிகள் அதன் உணவு அதன் தரம் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
அரசு மாணவர் விடுதிகளை சிரத்தை எடுத்து சரி செய்யும் பணிகள் கடந்த திமுக ஆட்சியிலேயே தொடங்கியது. அதனை வன்னியரசு ஆத்ம சுத்தியோடு முன்னெடுத்து வருகிறார் என்றே புரிந்து கொள்ள முடிகிறது.

