700 ஈஷா யாத்ரீகர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை வரை நேபாளத்தை விட்டு வெளியேற சத்குரு மறுப்பு!

Published On:

| By Pandeeswari Gurusamy

Isha

நேபாள பெருவெள்ள பாதிப்புகளில் சிக்கிய 700 ஈஷா யாத்ரீகர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பும் வரை தான் நேபாளத்தை விட்டு வெளியேற முடியாது என ஈஷா நிறுவனர் சத்குரு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திபெத்திலிருந்து காத்மாண்டுக்கு சனிக்கிழமை வந்த பிறகு ஈஷா சேக்ரெட் வாக்ஸ் ஒருங்கிணைப்பாளர் மா கம்பீரி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், ” நேபாளத்தில் இருந்து சத்குரு உடனே விமானத்தில் புறப்பட வேண்டும் என்று இந்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் சத்குருவுக்கு முற்றிலும் வேறு எண்ணம் இருந்தது. நிகழ்வு நடந்த இடத்திற்குச் சென்று மீட்புப் பணிகளுக்கு உதவ விரும்பினார். திபெத்தில் 700-க்கும் மேற்பட்ட நம் உறுப்பினர்கள் இருப்பதால் அவர்கள் வெளியேற ஒரு பாதை தேவை. அதனால்தான் நிலவழிப் பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

ADVERTISEMENT

வெள்ளப் பேரழிவு நடந்த கியிராங்கிற்குச் செல்ல அதிகாரப்பூர்வ அனுமதி பெற முயன்றதால் குழு திபெத்தில் அதிக நாட்கள் தங்கியிருந்தது. ஆனால் சீன இராணுவமும் மீட்புக் குழுக்களும் அப்பகுதியை முற்றிலும் மூடியிருந்ததால் அனுமதி கிடைக்கவில்லை.“பல்வேறு அனுமதிகளுக்காக முயற்சி செய்து முடிந்தவரை நெருக்கமாகச் செல்ல முயன்றோம். அதனால்தான் அங்கே நீண்ட நேரம் தங்கினோம். துரதிர்ஷ்டவசமாக இராணுவம் மீட்பு பணியில் ஈடுபட்டிருந்ததால் அனுமதி கிடைக்கவில்லை. காணாமல் போன 77 உறுப்பினர்களின் நிலையை நேரடியாக அறிய முடியாததும், அந்த இடத்தை அணுக முடியாததும்தான் எங்களுக்கு மிகப்பெரிய கவலையாக இருந்தது” என்று கம்பீரி குறிப்பிட்டார்.

மேலும், “நாங்கள் இராணுவம் செய்வதைச் செய்ய முடியாது. ஆனால் 77 உறுப்பினர்கள் அங்கே சிக்கியிருந்ததால் அங்கே இருக்க வேண்டும் என்று விரும்பினோம். அவர்களின் நலன் குறித்து முடிந்தவரை தகவல் பெற முயன்றோம். எங்கள் உறுப்பினர்களுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியாததுதான் மிகப்பெரிய கவலை. அவர்களின் குடும்பங்களின் பரிதவிப்பையும் பதற்றத்தையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம்” என்றும் மா கம்பீரி தெரிவித்தார்.

ADVERTISEMENT

அத்துடன், “தற்போதுவரை குறிப்பிடத்தக்க வகையில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. சீன ஊடகங்களில் வரும் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அறிக்கைகளை மட்டுமே நம்பி இருக்கிறோம்.

அதேசமயம் பதற்றத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு உதவ ஈஷா அமைப்பு பல்வேறு நாடுகளிலும் தன்னார்வலர்களைத் திரட்டியுள்ளது. ஒவ்வொரு நாட்டிற்கும் ஹெல்ப்லைன்கள் அமைக்கப்பட்டுள்ளன. தன்னார்வலர்கள் குடும்பங்களை நேரிலும் சந்தித்து ஆதரவு அளித்து வருகின்றனர். இது குடும்பங்களுக்கு மிகவும் வேதனையான நேரம். நம் ஹாட்லைன் அழைப்புகள் தொடந்து வந்த வண்ணமே உள்ளது. பெரிய எண்ணிக்கையிலான தன்னார்வலர்கள் அழைப்புகளைக் கையாண்டு உதவி வழங்குகின்றனர்,” என்றார் கம்பீரி.

ADVERTISEMENT

காத்மாண்டில் ஒரு குழு தகவல்களைச் சேகரித்து குடும்பங்களுக்கு அனுப்புகிறது. கியிராங் அருகே திபெத் பக்கத்தில் மற்றொரு குழு நிறுத்தப்பட்டுள்ளது. என்றார்.

இதுகுறித்த ஈஷா அறக்கட்டளை வெளியிட்ட அறிவிப்பில், எக்ஸ் தள பதிவில்,”ஆகஸ்ட் 28 நண்பகல் கியிராங் துறைமுகத்தில் சீன அதிகாரிகளின் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் மீண்டும் தொடங்கியதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாம் நிலை வெள்ள அபாயம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன.

நேபாளம் மற்றும் திபெத் எல்லைகளின் இருபுறங்களிலும் நிறுத்தப்பட்ட தரைப்பகுதிக் குழுக்கள் மூலம் அந்த இடத்தின் அழிவு நிலை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. “குடிவரவு அலுவலகப் பகுதியில் உயிர் பிழைத்தவர்கள் குறித்து இதுவரை நம்பிக்கை தரும் எந்த தகவலும் இல்லை” என்று அறக்கட்டளை தெரிவித்துள்ளது. அதேநேரம் உலகளவில் குடும்பங்களுக்கு ஆதரவளிக்க 24 மணி நேர ஹெல்ப்லைன்கள் இயக்கப்பட்டு வருகின்றன. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share