ஈஷா சார்பில் சென்றவர்களில் 80 பேர் நேபாளம் வெள்ளத்தில் சிக்கி காணமால் போய்விட்டதாகவும், அவர்களின் நிலை குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை என்றும் ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
ஈஷா அறக்கட்டளை சார்பில் பல்வேறு குழுவினர் நேபாளில் உள்ள கைலாயத்துக்கு யாத்திரை சென்றிருந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கினர். இவர்களில் 80 பேரின் நிலை தற்போது வரை என்னவென்று தெரியவில்லை. சத்குரு அங்கேயே இருந்து நிலைமையை கண்காணித்து மீட்பு பணிக்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
இதுதொடர்பாக இன்று (ஆகஸ்ட் 27) அவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அதில், ”திபெத் மற்றும் நேபாள எல்லைக்கு இடையே ஒரு கொடூரமான திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை மிகுந்த வலியோடும் வருத்தத்தோடும் உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
இந்தியச் செய்தி அறிக்கைகளின்படி, சுமார் 484 பேரைக் காணவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இங்கிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. இன்று காலை நான் அங்கு நேரில் செல்லப் புறப்பட்டேன். ஆனால் தொலைபேசிகள் அனைத்தும் இயங்கவில்லை, அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன, சாலைகள் முடக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவைச் சேர்ந்த 22 பேர், கனடா 12, ஆஸ்திரேலியா 11, பிரிட்டன் 9, ஜெர்மனி 4, பிரான்ஸ் 3, நேபாளம் 3, நெதர்லாந்து 3, நியூசிலாந்து 2, ஸ்பெயின் 2, பின்லாந்து, ரஷியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என மொத்தம் 80 பேரைக் காணவில்லை. இவர்களில் 34 பேர் ஆண்கள், 46 பேர் பெண்கள் ஆவர்.
மேலும் அருகிலுள்ள ஹோட்டல்களில்3 தன்னார்வலர்களும் ஒரு மருத்துவரும் முகாமிட்டிருந்தனர். இந்த மருத்துவர், நேற்று முன்தினம் ஆசிரமத்திலிருந்து புதிதாக வந்த மாற்று மருத்துவர் ஆவார்.
தற்போது வரை நம்மிடம் எந்தவிதமான உறுதிபடுத்தப்பட்ட தகவலும் இல்லை. பேரழிவின் அளவைப் பார்க்கும்போது, நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவே தோன்றுகிறது.
நாங்கள் சரியாக ஒரு வாரத்திற்கு முன்பு குடிவரவுச் சோதனைகளுக்காக இருந்த அதே கட்டிடம் முழுமையாக அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நகரத்தின் ஒரு பகுதியும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. மற்றவர்களின் எண்ணிக்கையைப் பற்றி நமக்கு இன்னும் எதுவும் தெரியவில்லை. அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால், தொடர்பு கொள்ள வேறு வழியேதும் இல்லை.
இந்தியா மற்றும் நேபாளத்தில் உள்ள இந்த நாடுகளின் தூதரகங்கள் அனைத்திற்கும் நாங்கள் தகவல் தெரிவித்துவிட்டோம். நாங்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். ஆனால் இங்கு நிலைமை மோசமாக இருப்பதால் எதுவும் செய்ய முடியவில்லை.
காலை 9:05 மணிக்கு, எங்களுடன் இருக்கும் குழுத் தலைவர் இஷாங்கா பிரவீனிடமிருந்து ஒரு செய்தி வந்தது. அவர்கள் குடியேற்றப் பிரிவை அடைந்துவிட்டதாக அவர் ஒரு செய்தி அனுப்பினார்.
அதன்பிறகு காலை 9:14 மணியளவில் இப்படி நடந்துள்ளது. அந்தக் குழுவை வழிநடத்திச் சென்ற பிரவீன் 20 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுடன் இருந்தவர். அவருடைய நேபாள போன் செயல்பாட்டுக்கு வரவில்லை. அவர் எல்லையைக் கடந்திருந்தால், அவரது நேபாள போன் எண் செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும்; ஆனால் அது வரவில்லை. எனவே, ஒட்டுமொத்தக் குழுவும் அந்தச் சமயத்தில் அந்த கட்டிடத்திற்குள்ளேயே இருந்திருக்கிறார்கள்.
இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு கொடூரமான மற்றும் அசாதாரணமான நிகழ்வாகும். ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1500ஆக இருக்கலாம்.
எங்களோடு இருந்த பல நேபாள வழிகாட்டிகளின் குடும்பத்தினரும் அங்குதான் இருந்தார்கள். அவர்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றி நமக்கு இன்னும் தெரியவில்லை. 484 பேர் என்று சொல்கிறார்கள். ஆனால் அந்த நகரத்தில், கிட்டத்தட்ட பாதி நகரம் பள்ளத்தாக்கோடு சேர்ந்து அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.
ஏதோ ஒரு ஏரியோ, ஆறோ உடைந்ததாக தெரியவில்லை. நேபாளத்தைச் சேர்ந்த சிலர் 4.9 ரிக்டர் அளவில் நிலநடக்கம் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். மற்றவர்கள் அதை மறுக்கிறார்கள்; நமக்கு எதுவும் சரியாகத் தெரியவில்லை. எந்த ஒரு தெளிவான அதிகாரப்பூர்வத் தகவலும் இல்லை.
எங்களால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறோம். பாதிக்கப்பட்ட இடத்துக்கு செல்வதற்கான முயற்சியை எடுத்து வருகிறோம். இந்தியத் தூதரகம் மற்றும் இந்தியாவில் உள்ள சீனத் தூதரகம் ஆகியவற்றின் மூலம் அனுமதி கோரி வருகிறோம்.
மேலும் அமெரிக்கத் தூதரகமும் இதில் செயல்பட்டு வருகிறது. நானும், ஒரு குழுவினரும் அங்கு செல்ல அனுமதி கிடைக்குமா என எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
இது நடந்து 12 மணி நேரம் ஆகிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் அனுப்பியிருக்கிறோம்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
