தமிழகத்தில் பன்றிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்படுமா? என்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று (ஆகஸ்ட் 27) திமுக எம்.எல்.ஏ. லட்சுமணன் எழுப்பிய கேள்வி: தமிழகத்தில் விரைந்து பரவிவரும் H1N1 காய்ச்சலை கட்டுப்படுத்த, முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்காவது தடுப்பூசி போடும் திட்டம் அரசிடம் உள்ளதா என்பதை அறிய விரும்புகிறேன்.
அமைச்சர் அருண்ராஜ் அளித்த பதில்: H1N1 காய்ச்சல் தற்போது கட்டுப்பாட்டில்தான் உள்ளது, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.
கடந்த ஆண்டில் முதல் 4 மாதங்களில் காய்ச்சல் அதிகமாக இருந்தது (ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல்). இந்த ஆண்டு மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அது கட்டுக்குள்தான் உள்ளது; நாம் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள்தான் இந்த நோயால் அதிகமாக பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பதால், அது குறித்து ஆய்வு செய்து தேவைப்பட்டால் கண்டிப்பாகத் தடுப்பூசி போடுவதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும்.
