சீன அதிர்ச்சி 2.0: அறிவியல், தொழில்நுட்பம், கல்வி வேலைவாய்ப்பு… இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி- 1

Published On:

| By Minnambalam Desk

ஆயிஷா இரா நடராசன்

ஜந்தர் மந்தர் போராட்டங்கள் எதைக் காட்டுகின்றன? அங்கு கூடிய சுமார் 6,00,000 இளைஞர்களை பற்றி சில விவரங்கள் வெளியாகியுள்ளன. இந்த விவரங்களை எடுத்தவர்கள் ஒன்றிய அரசினுடைய காவல்துறையோ அல்லது கண்காணிப்பு அதிகாரிகளோ அல்ல.

ADVERTISEMENT

போராட்டம் நடந்த ஏறக்குறைய 42 நாட்களும் அங்கேயே இருந்து உலகிற்கு அவர்கள் யார் என்பதை சர்வதேச பத்திரிகையாளர்கள் தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். நம் நாட்டில் பத்திரிகை என்பது அரசுக்கு சாமரம் வீசும்… எலும்புத்துண்டு  வஸ்துவாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன என்பது ஒருபுறம் இருக்கட்டும்.

இந்த சர்வதேச ஆய்வாளர்கள் அந்த இளைஞர்களை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதை வாசித்தபொழுது மிகப் பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது.

ADVERTISEMENT

8.7 கோடி இளைஞர்கள் முடக்கம்

தி வயர் இதழைப் பொறுத்தவரையில் அந்த லட்சக்கணக்கான இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் வேலைவாய்ப்பு மறுக்கப்பட்ட இளைஞர்கள். இந்தியாவில் ஐந்து இளைஞர்களில் ஒருவருக்கு வேலை இல்லை. 100 இளைஞர்கள் உங்கள் ஊரில் இருந்தால் 72 பேர் வேலையில்லாமல் இருக்கிறார்கள் என்கிற PLFS தரவு உண்மையிலேயே அதிர்ச்சி அளிக்கிறது.

ADVERTISEMENT

உலக வங்கி புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி இந்த விஷயம் நகர்ப்புற இளைஞர்களின் வேலைவாய்ப்பற்ற நிலையில் இன்னும் சற்று கூடுதல் என்று சொல்லப்படுகிறது.. அப்படியே வேலையில் இருக்கும் மீதமுள்ள நான்கு பேர்.. அவர்களில் மூன்று பேருக்கு எப்போது வேண்டுமானாலும் வேலை போய்விடும் என்கிற நிலை இந்தியாவிற்கு கவலை தரும் ஒரு சூழலாகும். வேலை உத்தரவாதம் என்பதெல்லாம் எப்போதோ காற்றில் பறக்க விடப்பட்டுவிட்டது.

கடந்த வாரம் நிதி ஆயோக் இன்னொரு குண்டை தூக்கி போட்டிருக்கிறது. இந்தியாவில் 8.7 கோடி இளைஞர்கள் படிப்போ வேலையோ அல்லது எந்தவித தொழில் பயிற்சியோ இல்லாமல் முடங்கியுள்ளனர் என்கிற அதிர்ச்சித் தகவல்தான் அது .. இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏதாவது ஒரு நுழைவுத் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் காத்திருப்பு பட்டியலில் தொடர்ந்து இருக்க வைக்கப்பட்டுள்ள கொடுமை அதைவிட கொடூரமானது.

தேர்வு முகமைகளின் ஏமாற்று வேலை

இந்திய இளைஞர்களின் வேலைவாய்ப்பு சிக்கல் என்பது நம் நாட்டின் மிகப் பெரிய பொருளாதார சவால்களில் ஒன்றாக இருக்கிறது. இந்தியா தன்னுடைய இளைஞர்களுக்கு வேலை வழங்க விரும்பவில்லை என்பதற்கு சமீபத்திய ஒரு சான்றை என்னால் விளக்க முடியும். தேசிய தகுதித் தேர்வு(NET) மூன்று பாடங்களில் மறுதேர்வை அறிவித்தது. அதில் குறிப்பாக வணிகவியல் தேர்வைப் பொறுத்தவரையில், கேள்வித்தாளில் எழுத்துப் பிழை இருந்ததால் ரத்து செய்வதாக அறிவித்தது பெரிய கேலிக்கூத்து.

மறுதேர்வு எழுத இருக்கும் மாணவர்களுக்கு அதன் அறிக்கை முக்கியமான ஒரு தகவலை கொடுத்தது. இந்தியா முழுவதும் இருந்து இந்த தேர்வை துணைப் பேராசிரியர் ஆவதற்காக எழுதப் போகும் ஒட்டுமொத்த இளைஞர்களில் 6% பேரை தகுதி பெற வைப்போம்.. மறு தேர்வு அல்லது ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட தேர்வு இந்த இரண்டில் தேர்வு எழுதியவர் எண்ணிக்கை எதில் அதிகமோ அதைக் கொண்டு அதைத் தீர்மானிப்போம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறது தேசிய தேர்வு முகமை. பல்வேறு சந்தேகங்களை இந்த ஒரு வரி நமக்கு ஏற்படுத்துகிறது. நுழைவுத்தேர்வா நுழையாமல் பார்த்துக் கொள்ளும் தேர்வா? இதுதான் நீட் உட்பட எல்லாத் தேர்வுகளுக்கும் பின்னால் இருக்கும் ஒன்றிய அரசின் அணுகுமுறை அரசியல் இதுதான். தேர்தலிலும் மோசடி. தேர்வுகளிலும் மோசடி.

ஏற்கனவே +2 முடித்த மாணவர்கள் உடனடியாக மருத்துவ கல்லூரிகளுக்கு இப்போது செல்வதில்லை. இரண்டாண்டுகள் நீட் தேர்வுக்கான தயாரிப்பு என்கிற பெயரில் பயிற்சி வகுப்புகளில் அவர்கள் வறுத்தெடுக்கப்படுகிறார்கள்.. பொறியியல் கல்விக்கு என்று தனியாக நடக்கின்ற நுழைவுத்தேர்வில் பல லட்சம் இளைஞர்கள் தேர்வு பெறுவதில்லை.

வேலைவாய்ப்புக்கு தகுதியற்றவர் என்பது இந்திய இளைஞர்களில் ஏறக்குறைய 69% என்று உலக வங்கி அறிவித்துள்ளது. நம்முடைய கல்வி தேர்வுகளையும் மதிப்பெண்களையும் துரத்தியபடி ஆழ்ந்த உறக்கத்தில் குறட்டை விட்டுக் கொண்டிருப்பது இப்போதும்கூட யாருக்கும் உறுத்தவில்லை. இந்திய இளைஞர்கள் 80% பேர் பெரும்பாலும் ஏதாவது ஒரு காத்திருப்பு பட்டியலில் இருந்து கொண்டே இருக்க வேண்டிய அவலத்தில் வாழ்கிறார்கள். அவர்களைத்தான்  கரப்பாம்பூச்சிகள் என்றும் சிந்திக்கும் நக்சலைட்டுகள் என்றும் முத்திரை குத்திவிட்டோம். இந்த இளைஞர்களில் ஒவ்வொரு ஆண்டும் 8% பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பது நம்முடைய பிரதமர் நிதி போல கேட்டும் கேட்கப்படாத தரவாக எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

 ஏன் இந்த நிலை சீனா போன்ற ஒரு நாட்டில் இல்லை

 இந்த கட்டுரையின் நோக்கம் சீனாவை புகழ்ந்து தள்ளுவதல்ல. அந்த நாட்டை புகழ்வதன் மூலம் நமக்கு யாரும் எந்த பதக்கமும் தரப்போவது கிடையாது. ஆனால் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் ஏராளமாக உள்ளன. நமக்கு இணையான அல்லது நம்மை விட அதிகமான மக்கள் தொகை கொண்ட நாடு சீனா.

வரலாற்றில் நூறாண்டு… நாம் காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்தப்பட்டிருந்தோம் என்றால் சீனா ஜப்பானுடனான நூறாண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு போரில் தன்னை இழந்து கொண்டிருந்தது என்கிறது வரலாறு. ஆனால் அந்த தேசம் மாவோ என்கிற மாமனிதரின் வழிகாட்டுதலின் பேரில் சோசலிச நாடாக மலர்ந்தது.

தற்போது ஐரோப்பா உட்பட உலகமே விவாதித்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம் சீன அதிர்ச்சி 2.0 என்பது. இது சீனா தன்னுடைய மிக மிக விலை மலிவான அதிநவீன தொழில்நுட்ப பொருட்களை உலக சந்தையில் மிக அதிக அளவில் குவித்து மற்ற நாடுகளின் உள்நாட்டு உற்பத்தியை முற்றிலும் தகர்த்தெறியும் பொருளாதாரப் போக்கை குறித்ததாகும். என்று பொதுவாக நம்பப்படுகிறது. முதலில் நாம் சீன அதிர்ச்சி 1.0 என்றால் என்னவென்று பார்க்க வேண்டும். அப்புறம்தான் நாம் 2.0வுக்கு வர முடியும்.

சீன அதிர்ச்சி 1.0

சீன அதிர்ச்சி 1.0 இரண்டாயிரமாம் ஆண்டு சீனா  உலக வர்த்தக அமைப்பில் WTO இணைந்தபொழுது காலணிகள், ஆடைகள், பிளாஸ்டிக் பொருட்கள், சிறுசிறு எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் போன்றவற்றை உலகச் சந்தையில் மலிவான விலையில் விற்றபொழுது தொடங்கியது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மட்டுமல்ல இந்தியா உட்பட பல நாடுகளில் பாரம்பரிய தொழிற்சாலைகள் பல இதனால் மூடப்பட்டன ஒரு நாட்டில் விற்கப்படும் மின்னணு பொருளுக்கு அறைவிலைக்கும் குறைவாக சீனப் பொருட்கள் மிக மலிவாக விற்பனை செய்யப்பட்ட காலத்தில் பல லட்சம் பேர் உலக அளவில் வேலைவாய்ப்பை இழந்தனர். இதன் மூலம் சீன பொருளாதாரம் குறித்து உலகம் திரும்பிப் பார்க்கத் தொடங்கியது.

சீன அதிர்ச்சி 2.0

தற்போது சீன அதிர்ச்சி 2.0 தொடங்கி உள்ளது. இது பொம்மைகள் மின்சாதனங்கள் பற்றியது அல்ல.. சீனா தற்போது உயர் தொழில்நுட்ப பொருட்களை உலக நாடுகளை விட மிக மிக குறைந்த விலையில் ஏற்றுமதி செய்ய தொடங்கிவிட்டது. குறிப்பாக எலெக்ட்ரிக் வாகனங்கள் BYD கார்கள் லித்தியம் பேட்டரி சோலார் பேனல் செமிகண்டக்டர் என்று இந்த பட்டியல் நீள்கிறது. உலகெங்கிலும் இன்று பயன்படுத்தப்படும் மனித இயந்திர ரோபோட்டுகளில் 76% மேட் இன் சைனா!

 உள்நாட்டில் விற்காத உபரி பொருட்களை சீனா உலக சந்தையில் விற்கிறது என்கிற ஒரு பொய்த் தகவலைப் பரப்புகிறார்கள். உலக சந்தைகளை வெள்ளம்போல் திடீரென்று அடித்துச் செல்லும் சீனப் பொருட்களைப் பற்றி இப்படி சும்மா சொல்லிவிட முடியாது என்பதே உண்மை. அமெரிக்கா ஐரோப்பா மற்றும் இந்தியா உள்பட நூற்றுக்கணக்கான நாடுகளில் உள்நாட்டு நிறுவனங்களால் சீனாவின் இந்த அதீத மலிவு விலையோடு போட்டி போட முடியவில்லை. உள்நாட்டு நிறுவனங்கள் நஷ்டமடைந்து மூடப்பட்டால் மிகப்பெரிய அளவில் வேலைவாய்ப்புப் பற்றாக்குறை ஏற்படும்.

வேலை உள்ளது, ஆட்கள் இல்லை

செயற்கை நுண்ணறிவு மற்றும் பசுமை ஆற்றல் விஷயத்தில் எதிர்கால தொழில்நுட்பங்களுக்கு உலக நாடுகள் அனைத்தும் சீனாவை மட்டுமே நம்பி வாழ வேண்டிய ஒரு சூழல் தற்போது உருவாகிவிட்டது. சீனாவில் ஒப்பீட்டளவில் பார்த்தால் ஒரு ஊரில் 100 இளைஞர்கள் இருந்தால் 102 வேலைகள் காலியாக உள்ளன.. எனவே வேலை உள்ளது ஆள் இல்லை.. என்கிற நிலை. இந்தியாவில் வேலைவாய்ப்பே இல்லையா. ஏன் இப்படி ஆனது?

சீனா இந்த இடத்தை எப்படி அடைந்தது என்பது ஒரு வெற்றிக் கதை ஆகும். ஒரு கம்யூனிஸ்ட் நாடு என்று சொல்லி அதை நாம் புறம்தள்வதற்கு இல்லை. நாம் சீனாவிடமிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது.. வேலைவாய்ப்பு பிரச்சனையை சீனா தீர்த்துவிட்டது என்று சொல்ல முடியாது. 2023 சீனNBS கணக்கெடுப்பின்படி 16 முதல் 24 வயதினருக்கான வேலையின்மை 7.3% என்று அறியப்படுகிறது. சூரிய ஆற்றல் வில்லைகளின் உற்பத்தி சார்ந்து 2024 ஆம் ஆண்டு 87,000 பேருக்கு வேலை போனது.ஆனால் இப்படி நடக்கும் பொழுது தொடர்ந்து அதிலிருந்து மிக விரைவில் சீன தேசம் மீண்டு வருவது எப்படி?. அதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

இந்திய வீடுகளில் சீன ஆதிக்கம்

தொழில்நுட்பம் வேலைகளை உருவாக்கும் அதே சமயம் தொழில்நுட்பம் வேலைகளை அழிக்கவும் செய்யும் என்பதை உணர்ந்த ஒரு பொருளாதாரமாக அது இருக்கிறது. இந்த இடத்தில் இருந்து நாம் தொடங்க வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களை சுற்றிப் பாருங்கள்… மேக் இன் இந்தியா என்கிற திட்டத்தின் கீழ் பல உதிரி பாகங்களை ஒன்றாக இணைத்து செய்யப்பட்ட ஒரு திறன்பேசி உங்களிடம் உள்ளது. ஆனால் அந்த திறன்பேசிக்குள் இருக்கும் பொருட்களை நாம் சீனாவிடம் இருந்துதான் வரவழைத்தோம். தட்டையான தொலைக்காட்சி.. வாஷிங் மெஷின் என்று உங்கள் வீட்டில் இருக்கும் இயந்திரங்களை பக்கத்தில் போய் உற்று பார்த்தீர்களானால் சீன பொருளாதாரம் அதற்குள்ளே இருந்து உங்களைப் பார்த்து கை குலுக்கும். நீங்கள் ஓட்டும் வாகனத்தில் ஏறக்குறைய 60 சதவீத உதிரி பாகங்கள் அங்கிருந்து வந்தவை. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.

இது இந்தியாவுக்கு மட்டுமல்ல உலகத்தின் எந்த நாட்டிற்கு சென்றாலும் தவிர்க்க முடியாத அளவிற்கு சீனாவின் பொருட்கள் எங்கெங்கும் நிறைந்து கிடக்கின்றன.. தற்போது சீன அதிர்ச்சி 2.0 கொண்டு வந்திருக்கும் வினோதமான சந்தை நம்மை சிந்திக்க வைக்கிறது.

  1. மின்சார வாகனங்கள்(ELECTRI VEHICLES): சீனா மின்சார வாகனங்களின் மிகப்பெரிய ஏற்றுமதி மற்றும் விற்பனை சூழலை ஒரு அமைப்பாக உருவாக்கி வைத்துள்ளது. வாகனம் மட்டுமல்ல அதன் மோட்டார். ஆற்றலை வழங்கும் பவர் எலக்ட்ரானிக்ஸ். பேட்டரி சார்ஜிங் அமைப்புகள் மென்பொருள் உட்பட அனைத்தையும் ஒருங்கிணைக்கிறது என்பதால் நீங்கள் மின் வாகனம் வாங்கும் பொழுது உதிரி பாகங்களுக்கும் சீனாவைத்தான் நம்பி இருக்க வேண்டி இருக்கும். இன்றைக்கு உலகத்தின் நம்பர் ஒன் மின் வாகன உற்பத்தியாளர் சீனா.
  2. சூரிய ஒளி மின்னழுத்த தொழில்நுட்பம்(SOLAR PHOTOVOLTAICS ): பாலி சிலிக்கான்🡪வேஃபர்🡪சோலார் செல்🡪மாட்யூல் என்ற முழு உற்பத்தி சங்கிலி தொடர் சீனா மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துவதால் உங்கள் வீட்டு மொட்டை மாடியில் நீங்கள் இந்திய அரசினுடைய உதவித் தொகை பெற்று சோலார் மின்சாரம் தயாரிப்பதாக இருந்தால் அந்த பொருட்கள் அனைத்தும் சீனாவிலிருந்து வந்தவை.
  3. மின்கலன்கள்(BATTERIES): லித்தியம் அயனிகள் மற்றும் குறிப்பாக மின் வாகனங்களின் பேட்டரி சப்ளை சங்கிலி தொடர் சீனாவின் வலிமையை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது. பேட்டரி செல் மட்டுமல்லாமல் கேத்தோடு அன்னோடு எலக்ட்ரோலைட் பேட்ரி மேலாண்மை அமைப்புகள் போன்றவற்றில் உலகளாவிய சந்தையை அது கைப்பற்றிவிட்டது.. நீங்கள் பயன்படுத்துகின்ற இருசக்கர அல்லது நான்கு சக்கர வாகனங்களின் பேட்டரிகளை ஒருமுறை உற்று பார்த்தீர்களேயானால் சீனாவின் ஆதிக்கம் என்ன என்பது உங்களுக்கு புரியும்.
  4. செமிகண்டக்டர்(LEGACY-MODE SEMICONDUCTOR): இதை பழைய தொழில்நுட்பம் என்று புரிந்து கொள்ள வேண்டாம் 28nm,40nm, 65nm போன்ற முதிர்ச்சி அடைந்த லெகசி நோட் என்று அழைக்கப்படுகின்ற அரைகடத்திகள் நம்முடைய ஆட்டோமொபைல் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்கள் வீட்டு உபயோக பொருட்கள் பவர் எலக்ட்ரான் சாதனங்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற துறைகளில் மிக முக்கியமானவை. நம்முடைய திறன்பேசியிலிருந்து நம் வீட்டிற்கு வரும் வைஃபை இணைப்பு வரையில் சீனாவில் தயாரிக்கப்படும் அரைகடத்திகளைத்தான் தொடர்ந்து நாம் பயன்படுத்தி வருகின்றோம்.. அந்த அளவிற்கு இந்த பத்தாண்டுகளில் சீனாவின் ஆதிக்கம் இந்த துறையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டது.
  5. ரோபோடிக்ஸ்(ROBOTICS): சீனா உலகின் மிகப்பெரிய இண்டஸ்ட்ரியல் ரோபோட் அதாவது தொழில்துறை மனித இயந்திரங்களின் சந்தையாக உள்ளது. அதன் முக்கியத்துவம் ரோபோட்களின் எண்ணிக்கையில் மட்டுமல்ல ரோபாட் தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு தொழிற்சாலைகளின் தானியங்கி இயந்திரங்கள் உட்பட அனைத்து துறைகளிலும் சீனாவை நம்பி இருக்கும் நிலைக்கு உலகத்தை தள்ளிவிட்டது என்பதே இன்றைய யதார்த்தம்.
  6. செயற்கை நுண்ணறிவு(ARTIFICIAL INTELLIGENCE): AI ஆய்வுகள் செயற்கை நுண்ணறிவு குறித்த உரிமங்கள் கணினிமய கட்டமைப்புகள் எல் எல் எம் என்று அழைக்கப்படும் லார்ஜ் லாங்குவேஜ் மாட்யூல்.. தானியங்கி அமைப்புகள் போன்ற துறைகளில் சீனா மிக வேகமாக முன்னேறுகிறது.. உலக செயற்கை நுண்ணறிவின் தொழில்நுட்ப மையம் சீனாவில் இருக்கிறது என்று உலக மாநாடுகளையே அமெரிக்கா சீனாவில் நடத்துகிறது என்கிற அளவிற்கு நிலைமை சென்று கொண்டிருக்கிறது.
  7. மருந்துகள் மற்றும் உயிரி மருத்துவ தொழில்நுட்பம்(PHARMA & BIOTECHNOLOGY): இந்த விஷயத்தில் சீனாவின் வளர்ச்சி வெறும் ஜெனரிக் டிரக் என்று அழைக்கப்படுகின்ற மருந்துகளைப் தாண்டி நானோ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உற்பத்தி ஆகும் இன்னோவேட்டிவ் ட்ரக், உயிரி மருந்தியல், மருத்துவ ஆராய்ச்சி, உலக அளவில் ALP என்று அழைக்கப்படுகின்ற மருந்துகளின் இடுபொருட்கள், மற்றும் உயிரிதொழில்நுட்பம் குறித்த அடிப்படை உடலியல் ஆய்வுகள் ஆகியவற்றில் உலகின் முன்னணி சந்தையாக இன்று மாறி இருக்கிறது.

நம்முடைய வீட்டில் நாம் பயன்படுத்தும் அனைத்து வகையான மின்னணு சாதனங்கள் நம்முடைய சமையலறையில் உள்ள பீங்கான் மற்றும் இதர கரண்டி வகை தட்டு என்பதில் தொடங்கி கழிவறையில் நாம் பயன்படுத்துகின்ற பிளாஸ்டிக் வாளி குவளை என்று இருந்துகொண்டிருந்த சீன பொருள் நாட்கள் போய் அறிவியல் தொழில்நுட்பத்தின் அனைத்து வகையான சந்தைப் பொருட்களையும் கொண்டு வந்து இறக்கும் ஒரு நாடாக எப்படி அது மாறியது.

கட்டுரையாளர் – ஆயிஷா இரா நடராசன்

மின்னஞ்சல் : eranatarasan@yahoo.com

(அடுத்த பகுதியில், விண்வெளி மையக் கட்டுமானம் மற்றும் எதிர்கால ஆற்றல் வளங்களைக் கைப்பற்றும் சீனாவின் இந்த ஆச்சரியமூட்டும் அடுத்தகட்டப் பாய்ச்சலையும், அதன் பின்னணியில் இயங்கும் தலைசிறந்த அறிவியலாளர்களையும் விரிவாகப் பார்ப்போம்)

பகுதி 2 – நாளை – ஆகஸ்ட், 28

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share