நேபாள பேரழிவு: பலி எண்ணிக்கை 750 ஆக உயர்வு; 3,000 பேர் கதி?

Published On:

| By Mathi

Nepal Disaster: Death Toll Rises to 750; Fate of 3,000 People Unknown

நேபாள பேரழிவு பெருவெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 750 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இப்பெருவெள்ளத்தில் சிக்கிய 3,000 பேர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.

நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட மிகப் பெரிய பனிப்பாறை சரிவு (Glacial Avalanche) காரணமாக லெண்டே மற்றும் போத்கோஷி ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்தத் திடீர் வெள்ளப் பெருக்கால் நேபாளத்தின் ரசுவா, நுவாகோட் உள்ளிட்ட பல மாவட்டங்கள் மூழ்கின. ஆற்றங்கரையோரம் இருந்த ஒட்டுமொத்த கிராமங்களையும், பாலங்கள் மற்றும் நீர்மின் நிலையங்களையும் அடித்துச் சென்றது இப்பெருவெள்ளம். இதுவரையில் 750 பேர் பலியாகி உள்ளனர்.

ADVERTISEMENT

2015-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பிறகு நேபாளம் சந்திக்கும் மிகப் பயங்கரமான பேரிடர் இது.

நேபாள ராணுவம் மற்றும் மீட்புப் படையினர் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், சேறும் சகதியுமாக மாறியுள்ள பகுதிகளில் 5-வது நாளாக மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர். இதுவரை ஆயிரக்கணக்கானோர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்த பேரழிவு பெரு வெள்ளத்தால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் கைலாய யாத்திரைக்கு சென்ற வெளிநாட்டினர் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இந்தியர்களும் அடங்குவர். காணாமல் போனவர்களைத் தேடும் பணியில் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளதுடன், அவசர உதவிகளுக்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் 3,000-க்கும் அதிகமானோர் நிலைமை என்ன என்பது தெரியவில்லை.

நேபாள ஆற்றுப் பகுதிகளில் இன்னும் சில இடங்களில் செயற்கையான பனிப் பாறை அடைப்புகள் நீடிப்பதால், மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என்று நேபாள மற்றும் சீன அரசுகள் எச்சரித்துள்ளன. இதனால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

உள்கட்டமைப்புகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளதால், மீட்புப் பணிகளுக்கு ஹெலிகாப்டர்களின் உதவி மட்டுமே பெரிதும் உதவுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தேவையான அவசர உதவிகளை வழங்குவதற்காக நேபாள அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share