கூடுவாஞ்சேரியில் பிரியாணி டபராவில் பெண் உடல் மீட்கப்பட்ட விவகாரத்தில் கொலையில் ஈடுபட்ட நபரை மணிப்பூரில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி சென்னையில் இருந்து ஆக்ரா சென்ற பயணிகள் ரயிலில் (ரயில் நம்பர் 12621) துர்நாற்றம் வீசியது. முன்பதிவு செய்யப்படாத கம்பார்ட்மெண்டில் ஒரு சிவப்பு நிற சூட்கேஷும் கிடந்தது.
இது தொடர்பாக பயணிகள் கொடுத்த தகவலின் பேரில் ரயில்வே போலீசார் அந்த சூட்கேசை திறந்து பார்த்தபோது தலை துண்டிக்கப்பட்டு உடல் சிதைக்கப்பட்ட நிலையில் ஒரு பெண்ணின் உடல் இருந்தது தெரியவந்தது.
அந்த சூட்கேஸில் சென்னை துணிக்கடை ஒன்றின் கட்டப்பை இருந்ததாகவும் தகவல்கள் வருகின்றன.
இதையடுத்து ஆக்ரா ரயில்வே போலீசார் சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி ரயில்வே சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது சூட்கேசை ஒரு ஆணும் பெண்ணும் தள்ளி சென்றது தெரியவந்தது.
தொடர்ந்து இருவரும் ஒரு ஆட்டோவில் ஏறி சென்றதும் சிசிடிவியில் பதிவாகி இருந்தது.
அந்த ஆட்டோ ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அந்த ஆட்டோ ஓட்டுநர் இந்த ஜோடியை இறக்கிவிட்ட வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள அந்த வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கே ரத்தக் கரைகள் இருந்ததுடன் ஒரு பிரியாணி டபராவில் வேகவைத்த பெண்ணின் உடல் பாகங்களும் இருந்தன.
இது தொடர்பாக வீட்டின் உரிமையாளரிடம் விசாரித்த போது, அங்கு ஒடிசாவைச் சேர்ந்த மாணிக் உத்தின் லஸ்கர் என்பவரும் அவரது மனைவி பகமதி மாஜி மற்றும் ஹைத்துன் நிஷா என்ற பெண்ணும் தங்கி இருந்தது தெரிய வந்தது.
தொடர்ந்து இந்த சம்பவம் நடந்த சமயத்தில் மாணிக் உத்தின் லஸ்கர், பகமதி மாஜி இருவரும் வீட்டை பூட்டிவிட்டு கிளம்பிய போது, வீட்டின் உரிமையாளர் ஹைத்துன் நிஷா எங்கே என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு அவர்கள், “அப்பா இறந்துவிட்டார்… அதனால் ஹைத்துன் நிஷா முதலில் சென்றுவிட்டார். நாங்கள் இப்போது கிளம்புகிறோம். ஊரில் இருந்து வந்ததும் வாடகை தருகிறோம்” என்று கூறிவிட்டு சென்று இருக்கின்றனர்.
இதையும் வீட்டின் உரிமையாளர் போலீசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில்தான் கொலை செய்யப்பட்டது ஹைத்துன் நிஷா என்பதும் மாணிக் உத்தின் லஸ்கர், பகமதி மாஜி தப்பி சென்றதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது..
இந்த நிலையில் குற்றம் செய்தவர்களை தேடி போலீசார் வடமாநிலத்திற்கு விரைந்தனர்.
அப்போது மாணிக் மணிப்பூரில் தலைமறைவாக இருப்பதை அறிந்த போலீசார் அங்கு சென்று கைது செய்தனர்.
இன்று அவரை மணிப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை அழைத்து வருவதற்கான வாரண்டை பெறுவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாணிக் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது மனைவி பகமதி மாஜியும் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன.
