சீன அதிர்ச்சி 2.0: அறிவியல், தொழில்நுட்பம், கல்வி வேலைவாய்ப்பு… இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 3

Published On:

| By Minnambalam Desk

ஆயிஷா இரா நடராசன்

முதல் பகுதி

ADVERTISEMENT

இரண்டாம் பகுதி

விவசாயத் துறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது

ADVERTISEMENT

தொழில்நுட்பத்தை கையில் எடுத்த சீனா விவசாயத்தை கைவிடவில்லை. இந்தியத் தரவுகளோடு ஒப்பிட்டால் நம்மைவிட ஏழு மடங்கு அதிகமான உற்பத்தியைக் கொண்டிருக்கிறது. 2025 ஆம் ஆண்டு மட்டும் 714.88 மில்லியன் டன் தானியங்களை அது உற்பத்தி செய்தது என்று நேஷனல் பீரோ ஆஃப் ஸ்டாட்டிஸ்டிக்ஸ் சீனாவிலிருந்து அறிவிக்கிறது. இது பாரம்பரிய விவசாய முறையில் இல்லை.

விவசாயத்தை அறிவியல் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தொழிலாக மாற்றியதன் மூலம் இளைஞர்களை விவசாயத்தை நோக்கி ஈர்த்திருக்கிறது சீனா. இங்குதான் இந்தியா கற்றுக்கொள்வதற்கான மிக முக்கியமான பாடம் இருக்கிறது. பயிர் விதைப்பு முதல் அறுவடை வரை முழுமையான இயந்திரமயமாக்கல் விகிதம் 76.7%. வேளாண் அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் பங்களிப்பு 64% இக்கும் மேல். வேளாண்மைக்கான ட்ரோன்களை நாடு முழுவதும் ஏறக்குறைய 4 லட்சத்திற்கும் மேல் கொண்டிருக்கும் நாடு சீனா.. இந்த ட்ரோன்களை பயன்படுத்தி விவசாய பரப்பு 30.7 மில்லியன் ஹெக்டேராக அதிகப்படுத்தப்பட்டிருக்கிறது என்பது இன்னொரு சாதனை. 

ADVERTISEMENT

மனித உழைப்பை குறைத்து ட்ரோன்கள், சென்சார், செயற்கை நுண்ணறிவு, ரோபோட், உயிரி தொழில்நுட்பம், இயந்திரவியல் மற்றும் தரவு அறிவியல் உள்ளே புகுந்திருக்கிறது. பயிர்க் கண்காணிப்பு, நோய் கண்டறிதல், உர மேலாண்மை, உற்பத்தி மேப்பிங் போன்ற புதிய பாடங்கள் பள்ளிக் கல்வியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. விவசாயத் துறையில் மொத்த இயந்திரமயமாகல் 75.64 சதவீதமாக உள்ளது.. இதில் கோதுமைக்கு முழுக்க முழுக்க ஏறத்தாழ 98% இயந்திரமயமாகி விட்டது. அரிசி உற்பத்தியில் 90 சதவீதமும் சோளம் போன்ற தானிய உற்பத்தியில் 92 சதவீதமும் இயந்திரமயம் நுழைந்திருக்கிறது. விவசாயத்தை இயந்திரமய மாக்குவது என்பதில் இருந்து விவசாய இயந்திரங்களை அறிவுக்கூர்மைப்படுத்துவது என்கிற கட்டத்திற்கு இப்போது சீனா சென்றிருக்கிறது.. உலகத்தின் முன்னணி விவசாய சந்தைகளை சீனா கைப்பற்றியது இப்படித்தான்.

இவ்வளவு இருந்தும் சீனா ஒரு பிரச்சனையை எதிர்கொள்கிறது. சீனாவில் நகரங்களுக்கு இடம்பெயர்ந்திருக்கின்ற கிராமப்புற மனிதர்கள் அதிகம். இளம் தலைமுறையினர் பெரும்பாலும் விவசாயத்தில் இருக்க விரும்பவில்லை. இது எல்லா நாடுகளிலும் இருக்கின்ற பிரச்சனை தான் விவசாயத்தில் மனிதர்கள் குறைந்தால் விவசாயத்தை யார் செய்வார்கள் என்கிற சிக்கலை சீனாவும் எதிர்கொண்டது. இளம் வயதிலேயே பள்ளி பாட புத்தகத்தில் விவசாயத்தின் அறிவியல் மயம் தொழில்நுட்பமயம் குறித்த சிறப்புப் பாடங்கள் சேர்க்கப்பட்டு, தகவல்தொழில்நுட்பத் துறை வல்லுநர்களுக்கு இணையான வருமானத்திற்கு வழி ஏற்படும் வகையில் விவசாயம் அங்கு படிப்படியாக மாற்றப்பட்டுள்ளது.

விவசாயம் என்பது உணவு உற்பத்தி என்கிற இடத்தில் இருந்து உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள், புதிய விதைகளை உருவாக்குகின்ற உயிரி தொழில்நுட்ப ஆய்வகங்கள், விவசாய டூரிசம் என்று விரிவுபடுத்தி இளைஞர்களை கவர்ந்து இழுப்பதற்கான அம்சங்களை உள்ளே கொண்டு வந்திருக்கிறார்கள். கரப்பான்பூச்சிகள் என்று இளைஞர்களை கேலி செய்து கொண்டிருக்கும் நம்முடைய சூழலில் இருந்து பார்த்தால் அந்த கரப்பான்களின் பால் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் எதிர்கால விவசாயம் அங்கே சுடர்விட்டு பிரகாசித்து கொண்டிருக்கிறது.

சீனாவின் பெய்ஃடௌ தொழில்நுட்ப ஆதிக்கம்

உலக அரசியலில் சீன தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வேலை செய்கிறது என்பதற்கு சமீபத்திய ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் ஒரு முக்கிய உதாரணம். நமக்கெல்லாம் நன்றாகத் தெரியும் அமெரிக்கா GPS என்று அழைக்கப்படுகின்ற மேப்பிங் பயன்படுத்துகிறது. இதற்காக அவர்கள் செயற்கைகோள் அமைப்பு ஒன்றை வைத்திருக்கிறார்கள். அது உலக அளவில் பிரசித்தி பெற்றது. அதேபோல சீனா BEIDOU நாவிகேஷன் என்கிற ஒரு ஜிபிஎஸ் அமைப்பைக் கொண்டிருக்கிறது. இதை சுருக்கமாக பிடிஎஸ் என்று அழைக்கிறார்கள். 2011 ஆம் ஆண்டிலேயே ஈரானுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்ட ஒரு ஒப்பந்தத்தின் மூலம் இதை ஈரான் தன்னுடைய ராணுவ அமைப்புகளில் இணைத்திருக்கிறது.

ஹர்மூஸ் நீரணையில் கப்பல்கள் கடந்து செல்லாமல் தடுப்பதற்கு ஈரான் அதைத்தான் பயன்படுத்தி அங்கே தற்போதும் தன்னுடைய மேலதிக்கத்தை நிரூபித்துக் கொண்டு இருக்கிறது. இது அமெரிக்காவுக்கு மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தி உள்ளது என்பதே எதார்த்த நிலை. சீனாவிடம் இதேபோல BEIDOU அமைப்பை பெற்ற பிற நாடுகள் எவை என்பது குறித்து கவலை கொண்டிருக்கிற நாடுகளின் பட்டியல் அதிகம்.. சீனா அதிர்ச்சி 2.0 வில் இதுவும் ஒரு அங்கம்.

இப்போது நாம் ஆரம்பக் கேள்விக்கு வருவோம் எப்படி இந்த இடத்தை சீனா அடைய முடிந்தது.. இந்தியா தவறியது எங்கே.

இந்திய இளைஞர்களை பெரும்பாலும் சும்மா இருப்பவர்களாக நாம் வைத்திருக்கிறோம் என்கிற கொடூரமான சமீபத்திய உண்மையின் அடிப்படையில் நான் சீனாவின் வளர்ச்சி வரலாற்றை சற்றே அருகில் சென்று ஆய்வு செய்தேன்.

சீனா ஒரு சர்வாதிகார தேசம்.. அங்கே சுதந்திரம் இல்லை.. ஜனநாயகம் இல்லை.. யாரும் கோவிலுக்குக் கூடப் போவதில்லை என்றெல்லாம் புழுதிவாரி தூற்றிக் கொண்டிருக்கும் நம்முடைய தேசாபிமானிகள்.. நாம் சீனாவை பற்றி பேசினாலே நம்மை தேசத்துரோகிகள் என்றும் சிந்திக்கும் நக்சல்கள் என்றும் சொல்லிவிடுவார்கள்.. ஆனால் கீழ்கண்ட விஷயங்களை நினைத்துப் பாருங்கள்.

சீனாவின் தொழில்நுட்ப மற்றும் அறிவியல் புரட்சிக்குப் பின்னணியில் இருப்பது கல்வி புரட்சி ஆகும்..1980களின் தொடக்கத்தில் தொடங்கிய புரட்சி அது. உலகமே சோவியத் யூனியனின் வீழ்ச்சியை விவாதித்துக் கொண்டிருந்த அந்த காலகட்டத்தில் எப்படியாவது பாபர் மசூதியை இடித்து விட்டு ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று இந்தியா மூளை சலவை செய்யப்பட்ட அந்த ஆண்டுகளில் தொடங்கிய புரட்சி.

சத்தம் இல்லாமல் சீனா ஒரு அற்புதத்தை நடத்தியது.. உலகம் முழுவதும் சென்று 1,00,000 உற்பத்தி சார்ந்த திட்டங்களை அவுட்சோர்ஸிங் முறையில் சீனாவுக்கு தூதர்கள் எடுத்து வந்தார்கள்..(உலகம் முழுதும் பயணித்து அனைத்து நாடுகளிலும் உயரிய விருதுகளை வாங்கி வரும் ஒருவரை உங்களுக்கு நினைவிற்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல).

ஒரு நாட்டின் தூதுவராக சீனாவிலிருந்து நீங்கள் நியமிக்கப்பட்டால் நீங்கள் ஒரு அறிவியல்வாதி, தொழில்நுட்பவாதி அடிப்படைகளின் அடிப்படைகளை அறிந்த சிறந்த வர்த்தகவாதியாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.. நீங்கள் தூதுவராக இருக்கும் நாட்டை உற்று கவனித்து உற்பத்தித் திட்டங்களை அவுட்சோர்சிங் முறையில் நீங்கள் சீனாவிற்கு எடுத்து வந்துவிடுவீர்கள். எத்தனை படி நிலைகள் தேவையோ இறங்கி சென்று அடிமாட்டு விலைக்கு பேசி சாதிப்பீர்கள்.

இப்போது இரண்டாவது படிநிலை.. அதற்கான உற்பத்தி சாலைகளை உருவாக்குவது. தொழில்நுட்பத்தை உருவாக்குவது அந்த தொழில்நுட்பத்தை இயக்குகின்ற மனிதர்களை உருவாக்குவதில்.. அந்த நாடு அதில் கவனம் செலுத்தியது அவர்களுடைய சித்தாந்தம் மிக எளிமையானது

‘உலகத்திடமிருந்து கற்றுக்கொள், பின்னர் உலகத்துடன் போட்டியிடு’

இதுதான் சீன கல்வி குறித்த அவர்களது நிலைப்பாடு.. ஜப்பான் கனடா என்று எந்த நாட்டையும் விட்டு விடாமல் அங்கு சென்று அரசின் செலவில் பயிற்சி எடுத்தவர்களை தன் சொந்த நாட்டிற்கு வரவழைத்து கல்வி சாலைகளுக்குள் அவர்கள் புகுத்தினார்கள். இது முதல்டர்னிங் பாயிண்ட்.. சீன கல்வியாளர்களான டாவோ சிங்க்ஷிTAOXINGZHI போன்றவர்கள் ஜான் டூவி போன்றவர்களின் முற்போக்கு கல்வி சிந்தனைகளால் கவரப்பட்டிருந்தாலும் அதை அப்படியே நகல் எடுக்கவில்லை சீனாவின் கிராமப்புற மற்றும் ஏழை மக்களின் சூழலுக்கு ஏற்ப அதை அவர்கள் மாற்றினார்கள்.

கல்வி என்பது தேர்வில் வெற்றி பெறுவதற்கான கருவி அல்ல கல்வி என்பது பயிற்சி பெற்று தொழிற்சாலைகளில் உலகிலிருந்து கொண்டுவரப்பட்டிருக்கும் பொருள் உற்பத்தி சார்ந்த திட்டமிட்ட தொழில் சார்ந்த உற்பத்தி துறை மனிதர்களை உருவாக்கிக் கொள்வதற்குத்தான்..

நம்முடைய கல்வி பொத்தாம் பொதுவானது.. சமஸ்கிருதமா தமிழா   இந்தி மொழியா.. என்றெல்லாம் சீனா விவாதித்துக் கொண்டிருக்கவில்லை. ஏனென்றால் அதையும் கடந்த ஒரு பொதுநல அம்சம் சீன பொது புத்தியில் நாட்டின் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. சாதிய குலத்தொழில், வன்மங்களைத் திரும்ப எடுத்துக் கொண்டுவரும் பழமைவாத வலதுசாரி கல்வி அரசியலுக்கு எதிரான போராட்டத்திற்கு நம் நாட்டில் நேரம் சரியாக போய்க் கொண்டிருக்கும் ஒரு சூழலில் சீனா கல்வியை தொழிற்சாலைகளை நோக்கிய மனிதர்களை உருவாக்கும் பயிற்சி நிலையங்களாக மாற்றி முப்பதாண்டுகள் ஆகிவிட்டன..

சீனாவின் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் தொழில் நிலையங்களால் தத்தெடுத்துக் கொள்ளப்பட்டவை ஆகும். நம்முடைய நாட்டில் ஆறாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவர்.. அவரைக் கற்பனை செய்யுங்கள்.. அங்கிருந்தே பயிற்சி தொடங்கி விடுகிறது.. திறன் வளர்ச்சி என்பது கல்வியின் ஒரு அங்கம். மாறிவரும் தொழில்நுட்ப சூழலுக்கு ஏற்ப மறு திறனாக்கம் என்கிற ஒரு கல்வி அங்கே அறிமுகம் செய்யப்பட்டு மூன்று பத்தாண்டுகள் ஆகிவிட்டன.

கல்வி சாலைகள் தொழிற்சாலைகளுடன் இணைக்கப்பட்டிருப்பதால் அடிப்படை தொழில்நுட்பம் சார்ந்த தொழிற்சாலை பணியாளர்கள், பொறியாளர்கள் அந்த தொழில் நிலையங்களுக்கான புதிய வகை தொழில்நுட்பத்தை கண்டறிந்து கொடுக்கின்ற ஆய்வு மாணவர்கள் என்று அடுத்தடுத்த படிநிலைகள் உள்ளன.

அவ்வப்போது மாணவர்களின் திறன்கள் பரிசோதிக்கப்பட்டு எதிர்காலத்தில் உடனடியாக அவர்கள் சென்றடைய வேண்டிய இலக்குகள் தீர்மானிக்கப்படுகின்றன. கல்வி முடிந்தவுடன் ஏதாவது ஒரு தொழிற்சாலையில் உங்களை கொண்டு போய் அரசு இணைத்தாலும் நீங்கள் அங்கிருந்து மறு திறனாக்கம்(RE-SKILLING) முறையில் புதிய பயிற்சிகளில் உங்கள் ஓய்வு நேரத்தில் ஈடுபட்டு எப்படி வேண்டுமானாலும் உங்கள் தொழிலிடத்தை மாற்றிக்கொண்டு முன்னேறலாம்.

போராடும் இளைஞர்களும் அரசின் அடக்குமுறையும்

இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய கல்வி சார்பான, உற்பத்தி சார்பானபல விஷயங்கள் உள்ளன. 8 கோடி இளைஞர்கள் இந்தியாவில் வேலை பார்க்கும் தகுதி இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற சமீபத்திய புள்ளிவிபரத்தின் அடிப்படையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் முதலில் நாம் கைவைக்கவேண்டியது கல்வியைதான். திறன்கள் என்கிற பெயரில் ஒன்றிய அரசின் சனாதனம் சார்ந்த அணுகுமுறையை நாம் என்னவென்று சொல்வது. முன்னோக்கி செல்லும் சீனாவுக்கு எதிர் திசையில், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் அரசியல் சூழல் கல்வியை தீர்மானிக்கும் நிலையிலிருந்து எப்போது மீளப் போகிறோம். 

தமிழக சூழலிலும் கல்விசார்ந்து பலபடி நிலைகள் நாம் எடுத்த முயற்சிகளையும் கடந்து தற்போது ரீல்ஸ் மயக்கத்திடமிருந்தும் மாணவர்களை மீட்க வேண்டிய துரதிர்ஷ்டவசமான சூழலில் நம் கல்வி. பழங்காலத்து பிளம்பர் வேலை.. மற்றும் செருப்பு தைப்பதும் வேலை இல்லையா என்று கேட்கும் அமைச்சர்கள்.

இந்தியா முழுவதும் கல்வியின் மறுமலர்ச்சிக்காக போராடுகின்ற லட்சக்கணக்கான இளைஞர்கள், எதற்காகப் போராடுகிறார்கள் என்பதன் நியாயத்தைப் பரிசீலிக்காமல் போராடுகிறார்களே என்று அனைத்து தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி அவர்கள்மீது பாய்வது என்ன அரசியல்? வேலைவாய்ப்பு பற்றிய சுற்றறிக்கைகளை விட போராட்டத்தில் , கலந்து கொண்டவர்களின் விவரங்களை கேட்கும் சுற்றறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் எப்போது திருந்தப் போகின்றன..

பசுமாட்டின் சிறுநீரை ஆய்வு செய்து கொண்டிருக்கும் ஐஐடி இயக்குநர்கள்.. அனுமார் தான் விண்வெளிக்கு முதலில் பறந்தார் என்று அறிவித்துக் கொண்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பரத்வாஜ முனிவர் தான் விமானத்தை கண்டுபிடித்தார் என்று வேத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் கவர்னர்கள் என்று மேலும் மேலும் நினைக்க நமக்கு வியர்க்கிறது.  

மேக் இன் இந்தியா.. ஆத்மா நிர்பார் பாரத்.. என்ற வெறும் கோஷங்களைக் கடந்து( இவை வெறும் கோஷங்கள் அல்ல என்று வாதிடுபவரா நீங்கள். அப்படியானால் இவை ஏற்படுத்திய வேலைவாய்ப்பு என்பது இந்திய இளைஞர்களை இந்நேரம் காப்பாற்றியிருக்க வேண்டாமா?).

உற்பத்தி சாலைகளை பெருக்குவதற்காக உலகெங்கிலும் இருந்து நாம் உற்பத்தி குறித்த சந்தை அடிப்படைகளை தொழிற்சாலை சார்ந்த திட்டங்களை நம் நாட்டிற்கு எடுத்து வர வேண்டும் என்றால்… அது சார்ந்து நம் கல்வியை உலக தரம் வாய்ந்த வேலைவாய்ப்பு போட்டியில் சிறக்கும் மாணவர்களையும் உருவாக்க வேண்டுமென்றால்… முதலில் நாம் ஒரே நாடு ஒரே மதம் ஒரே மொழி நாடே சைவம்..ஒரே கட்சி ஒரே ஆட்சி என்பதையெல்லாம் கடந்து புதிய அரசியல் பொருளாதார வளர்ச்சி சிந்தனை நோக்கி நாட்டை திருப்ப வேண்டும்.

அறிவியல் தொழில்நுட்பம் குறித்த புதிய பாதைகளை நோக்கி.. இலக்குகளை நோக்கி  நமது ஜென்சி ஜென் ஆல்பா சந்ததியை வெற்றிநடை போட வைக்க வேண்டும். அதற்கு அவர்கள் தயாராகிவிட்டார்கள் என்பதுதான் சமீபத்திய ஜந்தர்மந்தர் போராட்டத்தின் மூலம் நாம் பெற்றிருக்கும் நம்பிக்கை.        

கட்டுரையாளர் – ஆயிஷா இரா நடராசன்

மின்னஞ்சல் : eranatarasan@yahoo.com

*****

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share