VIDEO EXPLAINER: தமிழர்களின் 50,000 ஆண்டு மரபணு.. ‘ரகசியம்’ உடைத்த அறிவியல்!

Published On:

| By Minnambalam Desk

The Science That Cracked the 50,000-Year Genetic 'Secret' of Tamils!

மிழர்கள் அல்லது உங்கள் குடும்பத்தில் யாருடைய ரத்தத்திலாவது தமிழர்களின் ரத்தம் கலந்திருந்தால், உங்களைப் பற்றிய புரிதலை இந்த அறிவியல் ஆய்வு முற்றிலும் மாற்றப்போகிறது. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் இந்தியாவிலும், இலங்கையிலும், தென்கிழக்காசியாவிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்களின் மரபணுக்களை (DNA) எடுத்து ஆய்வு செய்துள்ளனர். அதில் கிடைத்த முடிவுகள் மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியுள்ளன.

தமிழர்களின் மரபணுவில் உள்ள ஒரு சிறப்பான அம்சம், பூமியில் உள்ள வேறு எந்த இனத்திற்கும் இல்லாத அளவுக்கு மிகவும் பழமையானது. இதன் மூலம் நவீன மரபணுவியலில் தமிழ்நாடு மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தமிழர்கள் வெறும் பழமையான இனம் மட்டுமல்ல; உலகின் மிக நீண்ட காலமாக இடைவிடாமல் தொடர்ந்து வாழ்ந்து வரும் தொன்மையான குடிகளில் இவர்களும் ஒருவர்.

ADVERTISEMENT

முதல் மனிதர்களின் நேரடி வாரிசுகள்

தமிழர்களின் ரத்தம் வழியாக ஓடும் மரபணு, கலாச்சார ரீதியாகவோ அல்லது பண்பாட்டு ரீதியாகவோ மட்டும் இணைந்தது அல்ல; அது உயிரியல் ரீதியானது. அதாவது, சுமார் 50,000 முதல் 65,000 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறி, தெற்கு ஆசியாவுக்கு வந்த மனிதர்களின் நேரடி வழித்தோன்றல்கள் தமிழர்கள்.

ஆரியர்களின் வருகைக்கு முன்பு

ADVERTISEMENT

சிந்துவெளி நாகரிகத்திற்கு முன்பு

ஏன் எல்லாவற்றுக்கும் முன்பாகவே தமிழர்கள் இந்த மண்ணில் இருந்தார்கள் என்பதை மரபணு அறிவியல் இப்போது அடித்துச் சொல்கிறது.

ADVERTISEMENT

‘AASI’ எனப்படும் மூதாதையர் மரபணு

விஞ்ஞானிகள் தெற்காசிய மக்களின் மரபணுக்களை ஆராய்ந்தபோது, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஒரு வியப்பான மாற்றம் இருப்பது தெரியவந்தது.

வட இந்தியாவில், மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்களின் மரபணு அதிகமாக உள்ளது.

மத்திய இந்தியாவில் சிந்துவெளி நாகரிகத்தோடு தொடர்புடைய ‘ஈரானிய விவசாயிகள்’ என்ற தொல்குடியின் மரபணு அதிகமாக உள்ளது.

ஆனால் தென்னிந்தியாவில் (குறிப்பாக தமிழ்நாட்டில்) ‘AASI’ (Ancient Ancestral South Indian) எனப்படும் பழமையான தென்னிந்திய மூதாதையர்களின் மரபணு மிக அதிகமாக ஆதிக்கம் செலுத்துகிறது.

இந்தியாவில் உள்ள மற்ற சாதாரண (பழங்குடி அல்லாத) மக்களை விட, தமிழர்களின் ரத்தத்தில் இந்த ஏ.ஏ.எஸ்.ஐ (AASI) மரபணு 55% முதல் 75% வரை மிக அதிகமாகக் காணப்படுகிறது.

  • பஞ்சாபி மக்களிடம் இது 15 முதல் 25 சதவீதமாகவும்
  • குஜராத்தி மக்களிடம் 30 முதல் 45 சதவீதமாகவும் இருக்கும்போது,
  • தமிழர்களிடம் இது 55 முதல் 75 சதவீதமாக இருக்கிறது.

அதாவது, தமிழர்களின் அடிப்படை உடலமைப்பே இந்த ஆதி குடிகளின் மரபணுவால் ஆனதுதான்.

யார் இந்த ஏ.ஏ.எஸ்.ஐ (AASI) மக்கள்?

இந்த ஏ.ஏ.எஸ்.ஐ என்பது விவசாயம் கண்டுபிடிக்கப்படுவதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, ஆப்பிரிக்காவிலிருந்து வந்த முதல் மனிதர்களின் மரபணு ஆகும். இவர்களிடம் கலப்பைகள் இல்லை, எழுதுவதற்கு எழுத்துக்கள் இல்லை, நகரங்கள் இல்லை.

இவர்கள் காடுகளிலும், நதிக்கரைகளிலும், கடற்கரையோரங்களிலும் வேட்டையாடியும், மீன் பிடித்தும், காடுகளில் கிடைக்கும் காய்கறிகளைப் பறித்தும் வாழ்ந்த மிகத் திறமையான மனிதர்கள்.

அந்த காலத்தில் தென்னிந்தியாவும் இலங்கையும் கடலால் இணைந்திருந்தன. அந்தப் பகுதிகள் முழுவதும் இவர்கள் வாழ்ந்து, காலப்போக்கில் இந்த நிலத்தின் பூர்வகுடிகளாக மாறினர்.

இன்றும் அந்தமான் தீவுகளில் தனித்து வாழும் ‘ஒங்கே’ (Onge) போன்ற பழங்குடி மக்களின் மரபணுவும், தமிழர்களின் மரபணுவும் ஒன்றுக்கொன்று மிக நெருக்கமாக ஒத்துப்போகின்றன. இது தமிழர்களின் வேர்களைப் பறைசாற்றும் உயிரியல் சான்றாகும். ஆம் அந்தமான் தீவு ஆதி குடிகளுக்கும் தமிழர்களுக்கும் இடையே “உயிரியல் பந்தம்” இருக்கிறது.. அவர்கள் ‘நம் ரத்தம்’..

தந்தையிடமிருந்து தொடரும் மரபணு (Y-Chromosome – H-M69)

தந்தை வழியாக மகனுக்கு மட்டும் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகக் கடத்தப்படும் ‘ஒய்-டிஎன்ஏ’ (Y-DNA) ஆய்வுகள் தமிழர்களின் ஆண்களிடம் ஒரு வியப்பான உண்மையைச் சொல்கின்றன.

தமிழ்நாட்டு ஆண்களிடம் அதிகமாகக் காணப்படும் H-M69 என்ற மரபணுப் பிரிவு, உலகின் மிகத் தொமையான மரபணுக்களில் ஒன்றாகும். இது சுமார் 30,000 முதல் 48,000 ஆண்டுகளுக்கு முன்பு தெற்கு ஆசியாவில் உருவானது. அதாவது விவசாயமோ, சிந்துவெளி நாகரிகமோ, ஆரியர்களின் வருகையோ நடப்பதற்குப் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தமிழ்நாட்டில் இந்த மரபணு இருந்தது.

இது தமிழர்களின் ஆண்களுக்குள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மாறாமல் தொடரும் ஒரு உயிரியல் அம்சம்.

சாதி அமைப்பும் மரபணு உண்மைகளும்

தமிழ்நாட்டில் சாதி வாரியாக மரபணுவை ஆய்வு செய்தபோது ஒரு சுவாரசியமான உண்மை வெளிப்பட்டது:

தமிழ்நாட்டில் உள்ள விளிம்பு நிலை மக்களிடமும், பட்டியல் சமூக மக்களிடமும் (பள்ளர், பறையர் போன்றோர்) மற்றும் பழங்குடி மக்களிடமும்தான் இந்த ஏ.ஏ.எஸ்.ஐ (AASI) ஆதி மரபணு மிக அதிகமாக (70 சதவீதத்திற்கும் மேலாக) உள்ளது.

நீலகிரியில் வாழும் ‘இருளர்’ (Irula) போன்ற பழங்குடி மக்களிடம் இது 80 சதவீதம் வரை உள்ளது.

அதாவது, சாதி அமைப்பில் சமூகத்தின் கீழ்த்தட்டில் வைக்கப்பட்ட ஆதி தமிழனிடம்தான், உலகின் மிகத் தொன்மையான, விலைமதிப்பற்ற ஆதி மனிதர்களின் மரபணு மிகப் பாதுகாப்பாக இன்றுவரை தொடர்கிறது.

இலங்கைத் தமிழர்களும் வெளிநாட்டுத் தமிழர்களும்

இலங்கையில் பல நூற்றாண்டுகளாக அரசியல் மோதல்கள் இருந்தபோதிலும், சிங்கள மக்களும் இலங்கைத் தமிழர்களும் ஒரே மாதிரியான தெற்காசிய ஆதி மரபணுவைக் கொண்டவர்களே என்று அறிவியல் கூறுகிறது. இருவரின் வேர்களும் ஒன்றுதானாம்.

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ரப்பர் தோட்ட வேலைகளுக்காக மலேசியா, தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், ஃபிஜி போன்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்கள், பெரும்பாலும் தமிழ்நாட்டின் விவசாய மற்றும் உழைக்கும் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். எனவே, அந்த நாடுகளிலும் வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடமும் இந்த ஆதி ஏ.ஏ.எஸ்.ஐ மரபணு மிக பொக்கிஷமாகவே பாதுகாக்கப்பட்டு வருகிறது.

சங்க கால வணிகமும் அயல்நாட்டுத் தொடர்புகளும்

சங்க காலத்தில் (கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை) சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் காலத்தில் தமிழ்நாடு உலக வர்த்தகத்தின் மையமாக இருந்தது. ரோமானிய நாணயங்கள் தமிழ்நாட்டில் குவிந்தன; ரோம், அரேபியா, தென்கிழக்காசியாவுடன் வணிகம் நடந்தது. இதனால் வெளிநாட்டவர்கள் வந்து சென்றாலும், அவர்களின் சிறிய அளவிலான மரபணு கலப்புகள் நிகழ்ந்தனவே தவிர, தமிழர்களின் ஆதி மரபணு அடிவேர் எந்தவிதத்திலும் உருமாறவில்லை.

தமிழ் மொழியின் தொன்மை

மரபணு அறிவியலும் மொழியியலும் கைகோர்க்கும் இடம் இதுதான். தமிழ் என்பது உலகின் மிகத் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாகும். குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளுக்கு மேல் இடைவிடாமல் பேசப்பட்டு வரும் ஒரே செம்மொழி தமிழாகும். திராவிட மொழிகள் சிந்துவெளி நாகரிகத்திலிருந்து வந்ததா அல்லது தென்னிந்தியாவின் ஏ.ஏ.எஸ்.ஐ ஆதி குடிகளிடமிருந்து தனித்து உருவானதா என்ற விவாதம் நடந்தாலும், தமிழ் மக்கள் இந்த மண்ணில் 50,000 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

அறிவியல் தரும் இந்தத் தரவுகள் உணர்த்துவது ஒன்றுதான்: எகிப்தின் பிரமிடுகள் கட்டுவதற்கு முன்பே, வரலாறு பேசும் மெசபடோமியா நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே, உலகத்தில் எங்குமே எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே தமிழர்களின் மரபணு இந்த மண்ணில் வேரூன்றிவிட்டது.

தமிழ் மொழி குறைந்தபட்சம் 2,000 ஆண்டுகளாகப் பேசப்படுகிறது; ஆனால் தமிழ் மக்கள் இந்த தென்னிந்திய மண்ணில் 50,000 ஆண்டுகளாகத் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார்கள். இந்த மரபணு, கலாச்சார மற்றும் மொழித் தொடர்ச்சி மனித வரலாற்றிலேயே மிகவும் வியக்கத்தக்க ஒன்றாகும்.

விளக்க வீடியோ

குறிப்பு:

இந்தக் காணொளியை வெளியிட்டுள்ள யூடியூப் சேனலின் பெயர் Ancient Genetics Archive ஆகும். இது உலகெங்கிலும் உள்ள பல்வேறு மனித இனங்களின் மரபியல் ஆய்வுகள், டி.என்.ஏ (DNA) தரவுகள் மற்றும் பண்டைய மனித இடம்பெயர்வுகள் குறித்த அறிவியல் தகவல்களைத் தொகுத்து வழங்கி வரும் ஒரு டிஜிட்டல் ஆவணக் குழுமமாகும்.

வழிகாட்டும் ஆய்வு (2019): வாகீஸ் நரசிம்மன் (Vagheesh Narasimhan), நிக் பாட்டர்சன் (Nick Patterson), பிரியா மூர்ஜனி (Priya Moorjani), ஜோசிப் லாசாரிடிஸ் (Iosif Lazaridis), டேவிட் ரீச் (David Reich) மற்றும் குழுவினரின் ‘The Formation of Human Populations in South and Central Asia’ (Science இதழ்).

வரலாற்று ஆய்வு (2009): டேவிட் ரீச், குமாரசாமி தங்கராஜ், நிக் பாட்டர்சன், அல்கெஸ் பிரைஸ் மற்றும் லால்ஜி சிங் ஆகியோரின் ‘Reconstructing Indian Population History’ (Nature இதழ்).

மரபணு மற்றும் விவசாயப் பரவல் ஆய்வு (2012): முத்துக்கிருஷ்ணன் ஈஸ்வரகாந்த் மற்றும் குழுவினரின் ‘Population Differentiation of Southern Indian Male Lineages Correlates with Agricultural Expansions Predating the Caste System’ (PLOS ONE இதழ்).

பரிணாம வரலாறு மற்றும் மரபணு மாறுபாடு ஆய்வு (2025): கெர்டோன்கஃப் (Kerdoncuff), ஸ்கோவ் (Skov), பாட்டர்சன் மற்றும் குழுவினரின் ‘50,000 Years of Evolutionary History of India: Impact on Health and Disease Variation’ (Cell இதழ்).

இலங்கை – தென்னிந்திய மரபணுப் பகிர்வு ஆய்வு (2025): அராகன் (Aragon) மற்றும் குழுவினரின் இலங்கை மற்றும் தென்னிந்திய மக்களுக்கிடையேயான பகிரப்பட்ட மரபணு மூதாதையர் குறித்த ஆய்வு (Current Biology இதழ்).

இந்தத் தகவல்கள் அனைத்தும் உலகப் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியான மரபியல் ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளன.

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share