கோயம்புத்தூர் மாவட்டம், ஆலாந்துறை பகுதியில் உள்ள வெள்ளிமலைப்பட்டிணம் தெற்கு வீதியில் பெண் தொடர்பான தகராறில் திமுக கிளை பிரதிநிதி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிமலைப்பட்டிணத்தைச் சேர்ந்த திமுக கிளை பிரதிநிதியான நாகராஜ் (62) என்பவர் இன்று (28.08.2026) காலை 6 மணியளவில், வசந்தா (55) என்பவரது வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் டீ வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவரும், முன்னாள் திமுக கிளை அவைத்தலைவருமான கந்தசாமி (61) என்பவர் நாகராஜை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதில் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் பலத்த காயமடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாக்குதலின்போது ஏற்பட்ட தகராறில் கந்தசாமிக்கும் கையில் காயம் ஏற்பட்டதாகவும், அவர் தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் காவல்துறை பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆலாந்துறை காவல் ஆய்வாளர் ஆகியோர், நாகராஜின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகராஜ் தனது மனைவி பாக்யாவுடன் தவறான தொடர்பில் இருந்ததாக சந்தேகித்து கந்தசாமி கொலை செய்ததாகக் கூறப்படும் நிலையில், பாக்யாவுக்கு அத்தகைய தொடர்பு எதுவும் இல்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கோவையில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் பீளமேடு நவீன், கிணத்துக்கடவு அஸ்வின், அமுதன், சாந்தி, சிங்கை முதியவர், சுல்தான்பேட்டை செந்தில், சோமனூர் – தேவதாஸ், நீலம்பூர் விக்னேஷ் , ஆலாந்துறை நாகராஜ் என 9 பேர் கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை சம்பவங்கள் கோவை சுற்று வட்டாரப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
