நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் போதிகோஷி நதியில் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 26) ஏற்பட்ட திடீர் பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கி 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் கதி என்ன என்பது தெரியவில்லை. அப்பகுதியில் பாலங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் முழுமையாக அழிந்துள்ளன.
ரசுவா, அதைச் சுற்றியுள்ள நவாபூர், தாடிங், சித்வான், தனாஹன், கோர்க்கா, நவலபராசி கிழக்கு உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளத்தில் அடித்து வரப்படும் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இந்த திடீர் பேரழிவு பெருவெள்ளத்தின் பின்னணி குறித்து காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகின்றனர்.
பேரழிவு பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது?
- நேபாள-சீனா எல்லையில் லாங்டாங் லிருங்கின் வடக்கு பகுதியில் ஏற்பட்ட மிகப் பெரிய பனி மற்றும் பாறைச் சரிவு (பனிச் சரிவு) லெண்டே நதியைத் தடுத்ததால் இந்த வெள்ளம் உருவாகியுள்ளது என செயற்கைக்கோள் பட ஆய்வுகளை ஆதாரமாகக் காட்டி காலநிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
- பனி ஏரி வெடிப்பு வெள்ளம் (glacial lake outburst flood) என முதலில் சொல்லப்பட்டது. ஆனால் பனிப் பாறை சரிவு என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.
- திபெத்தில் ஆகஸ்ட் 26-ந் தேதி 4.4 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்தான் பனி பாறை சரிவுக்கு காரணம் என்கிற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
- இந்து குஷ் இமயமலை நாடுகளின் சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) மற்றும் நேபாள அதிகாரிகளின் முதற்கட்ட ஆய்வுகளும் பனிச்சரிவு காரணமாகவே இந்த திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
- செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்யும் ஆராய்ச்சியாளர்கள், மிகப் பெரிய பனி மற்றும் பாறைச் சரிவு, நதியைத் தடுத்து ஒரு தற்காலிக அணையை உருவாக்கியது; அது பின்னர் உடைந்து பெருவெள்ளத்தை வெளியேற்றியிருக்கிறது என்கின்றனர்.
2015 நிலநடுக்கத்தின் போதும் இதே மலையில் பனிச்சரிவு ஏற்பட்டு சுமார் 300 பேர் கொல்லப்பட்டனர்.
காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான ரிஜன் பக்த காயஸ்தா, நேபாளப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவு லெண்டே நதியைத் தடுத்ததாக நாங்கள் சந்தேகிக்கிறோம். அதே நேரத்தில் ஒரு நிலநடுக்கமும் ஏற்பட்டது, ஆனால் அது பனிச்சரிவை ஏற்படுத்தியதா? என்பது எங்களுக்கு இன்னும் தெரியவில்லை” என்கிறார்.
பனி மற்றும் பாறைச் சரிவுதான் இதற்குக் காரணம் என்று நேபாளத்தின் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் மேலாண்மை அமைப்பும் தெரிவித்துள்ளது.
பிளானட் லேப்ஸ் (Planet Labs) செயற்கைக்கோள் படங்களின் பகுப்பாய்வு, ரசுவாகாதி எல்லைக் கடக்கும் பகுதிக்கு வடகிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில், நேபாள-சீனா எல்லைக்கு அருகில் ஒரு பெரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது. இந்தச் சரிவின் குப்பைகள் லெண்டே நதிக்குள் நுழைந்து வண்டல் மண் கலந்த வெள்ளத்தை உருவாக்கிவிட்டது.
நதியின் குறுகலான பகுதியில் குப்பைகள் தேங்கி, அதன் ஓட்டத்தை தற்காலிகமாகத் தடுத்து, நிலச்சரிவு அணை (landslide dam) போன்ற ஒன்றை உருவாக்கியதா என்பது குறித்து ICIMOD ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து பெறப்பட்ட வீடியோ காட்சிகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில், பெரும் அளவிலான பனி மற்றும் பாறைகள் போதிகோஷியின் துணை நதியான லெண்டே நதியில் விழுந்திருக்கலாம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.
இதன் விளைவாக ஏற்பட்ட வெள்ளம் வழக்கத்திற்கு மாறாக வேகமாகவும் சக்திவாய்ந்ததாகவும் இருந்தது. ICIMOD இன் தொலை உணர்வு மற்றும் புவிசார் தகவல் இணை ஆய்வாளரான சார்த்தக் ஷெரேஸ்தா, நேபாளப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுதான் முக்கியக் காரணம் என்பதை இதுவரை கிடைத்த சான்றுகள் சுட்டிக்காட்டுகின்றன என்றார்.
சீன அறிவியல் அகாடமியின் கீழ் உள்ள செங்டு உயிரியல் நிறுவனம் உள்ளிட்ட சீன நிறுவனங்களுடன் இணைந்து என்ன நடந்தது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய ICIMOD பணியாற்றி வருகிறது.

சீனாவின் எச்சரிக்கை
இதனிடையே திபெத்தில் உள்ள சோட்சென் நதி மற்றும் புருபே சங்போ நதி கலக்கும் இடம் அருகில் ஒரு பெரிய பனிநீர் ஏரி உருவாகி இருப்பதாக சீனா எச்சரித்துள்ளது.
இந்த ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து இயற்கையாக அமைந்துள்ள அணை உடையும் அபாயம் உள்ளது என்கிறது சீனா.
சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையம் (ICIMOD) மற்றும் ஐநா வளர்ச்சித் திட்டம் இணைந்து நடத்திய ஆய்வில், நேபாளம், இந்தியா மற்றும் திபெத் முழுவதும் 3,624 பனி ஏரிகள் அடையாளம் காணப்பட்டன. அவற்றில் 47 ஏரிகள் ஆபத்தானவை என்றும் வெடிக்கும் அபாயம் உள்ளவை என்றும் வகைப்படுத்தப்பட்டன, இதில் 21 ஏரிகள் நேபாளத்தில் உள்ளன.
சோட்சென் மற்றும் புருபே நதிகள் திபெத்தில் உருவாகி, நேபாளத்திற்குள் நுழைவதற்கு முன்பு இணைகின்றன, அங்கு இந்த நதி போதிகோஷி என்று அழைக்கப்படுகிறது. போதிகோஷி என்பது திரிசூலி நதியின் முதன்மையான மேல் துணை நதியாகும். இந்த நதிகள்தான் இப்போது நேபாளத்தில் பேரழிவை ஏற்படுத்தியவை என்பது குறிப்பிடத்தக்கது.
