நேபாளம் வெள்ளத்தில் காணாமல் போனவர்களில் 168 பேர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
நேபாளம் நாட்டில் ரசுவா மாவட்டத்தில் திடீரென நேற்று கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் பல கிராமங்கள், பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
நேபாளம் நாட்டு மக்கள் மட்டுமின்றி கைலாய யாத்திரை மேற்கொண்ட சுற்றுலாப் பயணிகள் பலரும் வெள்ளத்தில் சிக்கினர்.
இதில் இந்தியாவில் இருந்து மட்டும் சுமார் 300 பேர் தற்போது வரை காணாமல் போயிருப்பது தெரியவந்துள்ளதாக நேபாளம் வெளியுறவுத் துறை அமைச்சர் சிசர் கானல் தெரிவித்துள்ளார்.
இந்த 300 பேரில் 168 பேர் தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 103 பேர்.
கேரளாவில் இருந்து சுமார் 53 பேரும், பெங்களூருவைச் சேர்ந்த 5 பேரும், ஆந்திர பிரதேசத்தில் இருந்து ஏழு பேரும் காணாமல் போய் உள்ளதாக தெரியவந்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த, சூப்பர் யாத்ரா என்ற சுற்றுலா நிறுவனம் நேபாளத்தைச் சேர்ந்த சாம்ராட் டூர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு பயணத்தை ஏற்பாடு செய்திருந்தது.
இந்த குழுவில் கடலூரில் இருந்து 11 பேர், கிருஷ்ணகிரியில் இருந்து 5 பேர், தஞ்சாவூரில் இருந்து 16 பேர், தர்மபுரியில் இருந்து ஒருவர், திருச்சியில் இருந்து 4 பேர், திருவண்ணாமலையிலிருந்து ஒருவர், திருவாரூரில் இருந்து இரண்டு பேர், நாமக்கல்லில் இருந்து ஒருவர், மயிலாடுதுறையில் இருந்து ஏழு பேர் பயணித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த மகாதேவ் கைலாஷ் யாத்ரா என்ற மற்றொரு நிறுவனம் மூலம் 49 பேர் புனித யாத்திரை சென்றுள்ளனர்.

இந்நிலையில் நேபாளத்தில் சிக்கியவர்களில் 21 பேர் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் அறிவித்துள்ளார்.
அவர்களின் விவரம்,
சிவரஞ்சனி முத்துநாதன்
கற்பகம் ராஜமோகன்
மாறன் கோவிந்தசாமி
சாந்தி மாறன்
முத்துக்குமாரேசன் ராமலிங்கம்
நவு கபீர்தாஸ்
விஜயபுவனேஸ்வரி விஸ்வநாதன்
மைதிலி முத்துக்குமரேசன்
தியாகராஜன் ரத்தினம்
கிருபாகரி பாலசுப்பிரமணியம்
வள்ளிநாயகி சிவகுமார்
சத்யா ஜெயராமன்
திருமாவளவன் கோவிந்தராசு
கனகசபை நடேசபிள்ளை
ராதை கனகசபை
ரத்னகுமார் குஞ்சிதபாதம்
பூங்குழலி பொன்னம்பலம்

இதற்கிடையே தமிழ்நாட்டில் இருக்கும் உறவினர்களும் குடும்பத்தினரும், ”நேபாளத்தில் சிக்கியிருப்பவர்களை விரைந்து மீட்டுத் தர வேண்டும். அரசு அறிவித்த கட்டணமில்லா தொலைபேசி நம்பரை தொடர்புகொண்டாலும் எந்த பதிலும் இல்லை. நேற்று பிற்பகல் முதல் உண்ணாமல், தூங்காமல் நியூஸ் சேனலையே பார்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று கண்ணீர் மல்க பேட்டி அளித்து வருகின்றனர்.
