இமயமலையின் மடியில் அமைந்திருக்கும் நேபாள நாடு, இயற்கையின் எழில் கொஞ்சும் மலைகளுக்கும் கண்கவர் பள்ளத்தாக்குகளுக்கும் பெயர் பெற்றது. ஆனால், நடந்தேறும் பேரழிவுகள், மனிதகுலம் கற்பனை செய்து பார்க்க முடியாத இமயமலையின் கோர முகத்தையும் வெளிப்படுத்துகிறது. அத்தகைய ஒரு மாபெரும் இயற்கைச் சீரழிவைத்தான் இப்போது நேபாளம் சந்தித்துள்ளது.



நேபாளத்தின் வடக்கு முனையில் உள்ள ரசுவா (ராசுவா- Rasuwa) மாவட்டத்தில், திபெத் எல்லைக்கு அருகில் திடீரென ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு உலக நாடுகளையே அப்படியே அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.
இமயமலையின் சூழலியல் மாற்றங்கள், பருவநிலை மாறுபாடுகள் மற்றும் புவி அதிர்வுகள் இணைந்து உருவாக்கியுள்ளதுதான் இந்தப் பேரழிவு.
என்னதான் நடந்தது?
நேபாளத்தின் வட பகுதியில் உள்ள ராசுவா மாவட்டத்தின் திபெத் எல்லைப் பகுதிகள் வழியாகப் பாயும் நதிகள் போதே கோஷி மற்றும் திரிசுலி. இந்த இரு நதிகளும்தான் இப்போதைய கோரப் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன.

திபெத் பகுதியிலிருந்து நேபாளத்தின் ராசுவா மாவட்டத்திற்குள் பாய்ந்தோடிய ஆற்று நீர், வழக்கத்திற்கு மாறாக 8 முதல் 10 மீட்டர் உயரத்திற்குப் கடலில் எழும் சுனாமிப் பேரலைகளாக ஆக்ரோஷத்துடன் உயரே எழுந்தன.
இப்பெருவெள்ளத்தின் உக்கிர ருத்ரதாண்டவத்தில்
- டிமுரே பஜார்
- சியாப்ரு பெசி
- ராசுவகடி ஆகிய எல்லை கிராமங்கள் ஒட்டுமொத்தமாக வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இமயமலைப் பகுதியில் உருண்டு வந்த பிரம்மாண்ட பாறைகள், மணல் மற்றும் சகதி ஆகியவை ஒட்டுமொத்தக் குடியிருப்புகளையும் சில நிமிடங்களில் மண்ணோடு மண்ணாக தன்னுள் புதைத்துக் கொண்டுவிட்டது. இதனால் மண்ணுக்கடியில் பல கிராமங்கள் இருந்த இடமே தெரியாமல் புதையுண்டு கிடக்கின்றன.



பேரிடர் நிகழ்ந்தது எப்படி?
இந்த திடீர் மற்றும் கோரப் பெருவெள்ளத்திற்குப் பின்னால் பல புவியியல் காரணங்கள் இருப்பதாக அறிவியலாளர்கள் மற்றும் பேரிடர் மேலாண்மை வல்லுநர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
பனிப்பாறை சரிவு/ பனி ஏரிகள் வெடிப்பு
சர்வதேச ஒருங்கிணைந்த இமயமலை மேம்பாட்டு மையம் The International Centre for Integrated Mountain Development – ICIMOD என்பது இந்துகுஷ் இமயமலை (Hindu Kush Himalaya) பகுதியில் அமைந்துள்ள நாடுகளான நேபாளம், இந்தியா, சீனா, பாகிஸ்தான், பூடான், வங்கதேசம், மியான்மர் மற்றும் ஆப்கானிஸ்தானை உள்ளடக்கிய ஒரு சர்வதேச அமைப்பு.
இமயமலைப் பிராந்தியத்தில் ஏற்படும் பனிப்பாறை உருகுதல், வெள்ளப்பெருக்கு மற்றும் சுற்றுச்சூழல் மாற்றங்களை ஆய்வு செய்து, பேரிடர் மேலாண்மைக்கு இது உதவி வருகிறது.
நேபாள பேரழிவுக்கு ICIMOD வல்லுநர்கள் முன்வைக்கும் காரணிகள்
- நேபாள-திபெத் எல்லைப் பகுதியில் உள்ள Lhende Khola- ‘லெண்டே கோலா’ நதியின் மேல் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிப்பாறை மற்றும் பாறைச் சரிவு (Ice-rock avalanche) இந்த அழிவுக்கு முக்கிய காரணம்.
- பனிப்பாறைகள் திடீரெனச் சரிந்து நதியின் நீரோட்டத்தைத் முதலில் தடுத்தன; பின்பு அந்த தடை மிகப் பெரும் வெடிப்பு போல உடைந்து வெள்ளமே பெருமலை போல கீழிறங்கி வந்தது என்கின்றனர்.
இந்த ICIMOD-ன் வல்லுநர் மனிஷ் சிரேஸ்தா கூறுகையில், ”உயரும் வெப்பநிலை காரணமாக பனிப்பாறைகள் மற்றும் பனி உருகும் வேகம் அதிகரிக்கிறது. இதனால், குறைந்த கால அளவில் பெய்யும் கனமழை கூட பனிப்பாறை உருகும் நீருடன் இணைந்து ஆற்றுப் படுகைகளில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கை உருவாக்க வழிவகுக்கிறது” என்கிறார்.
ICIMOD-ன் மற்றொரு வல்லுநர் கியாங்கொங் ஜாங், “இமயமலைப் பிராந்தியத்தில் பனிப்பாறை ஏரி வெடிப்புப் பெருவெள்ளங்கள் (Glacial Lake Outburst Flood) மற்றும் தொடர் பேரிடர்கள் அதிகரித்து வருவதால், நதிக்கரைகளில் வசிக்கும் மக்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு எச்சரிக்கை அமைப்புகளை ஒருங்கிணைத்து செயல்படுத்துவது அவசியமாகும்” என்கிறார்.
நிலநடுக்கமும் பெரு வெள்ளமும்
GFZ Helmholtz Centre for Geosciences என்கிற ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் வல்லுநர்களின் கருத்துகள்:
- இப்பேரழிவு நிகழ்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் திபெத் எல்லைப் பகுதியில் 4.4 ரிக்டர் அளவுகோலில் சிறிய நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது.
- இந்த நிலநடுக்கத்தின் காரணமாகவே இமயமலைச் சரிவுகளில் பெரிய பனிப்பாறைகளும் மலைப் பாறைகளும் பெயர்ந்து விழுந்து ஆற்று நீரைத் தடுத்து, பின்னர் பேரழிவை ஏற்படுத்தி இருக்கின்றன.
இதே கருத்தை நேபாள நாடாளுமன்றத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கான்வால், ”திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாகவே மிகப் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, அது ஆற்றுநீரைத் தடுத்து இந்த கோர வெள்ளப்பெருக்கை உருவாக்கியுள்ளது” என்றார்.
காத்மாண்டு பல்கலைக்கழகத்தின் காலநிலை ஆராய்ச்சியாளர் ரிஜன் பக்த காயஸ்தா கூறுகையில், “ திபெத் எல்லைப் பகுதியில் ஏற்பட்ட பனிப்பாறை மற்றும் மலைப் பாறைச் சரிவு காரணமாக ‘லெண்டே கோலா’ நதியின் நீரோட்டம் தற்காலிகமாகத் தடையாகி, ஒரு செயற்கை ஏரி போல நீர் தேங்கியுள்ளது. பின்பு அந்தத் தடை திடீரென உடைந்து பெருவெள்ளமாகி போதே கோஷி நதியில் பாய்ந்திருக்கக்கூடும்” என்கிறார்.
இதற்கு அப்பால் பொதுவாக
இமயமலைப் பகுதியில் புவி வெப்பமயமாதல்காரணமாக பனிப்பாறைகள் அதிவேகமாக உருகி வருகின்றன. இதனால் மலை உச்சிகளில் உருவாகும் ‘பனி ஏரிகள்’ எப்போது வேண்டுமானாலும் உடையும் அபாயம் உள்ளது. ஏற்கனவே இதே கோஷி நதியில் இது போன்ற பனி ஏரி உடைப்பு காரணமாக பேரழிவுகள் ஏற்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பொதுவாக, “இமயமலையின் திபெத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலைப்பகுதிகள் உறுதித் தன்மையை இழந்தன; இதனால் பனிப்பாறைகள் சரிந்தன. இந்த பனிப்பாறைகள், பனி ஏரிகள் பெருவெடிப்பாய் வெடித்து நதிகளில் பாய்ந்தோடியதுதான் பேரழிவுக்கு முதன்மை காரணங்கள் என்கின்றனர்.
பேராபத்தை எதிர்கொள்ளும் இந்தியா
நேபாளத்திலிருந்து பெருக்கெடுத்து வரும் வெள்ள நீர் தாழ்வான இந்தியப் பகுதிகளை நோக்கி நகர்வதால், இந்தியாவின் பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில எல்லைகளில் அதிஉச்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பீகாரின் கண்டக் நதிக்கரையை ஒட்டியுள்ள ஆறு மாவட்டங்கள் சிறப்புக் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பீகாரில் உள்ள கண்டக் அணையின் அனைத்து மதகுகளும் திறந்துவிடப்பட்டு, அதிகப்படியான நீர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
