நேபாள பேரழிவு வெள்ளம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு; 133 இந்தியர்கள் உள்பட 400-க்கும் மேற்பட்டோர் கதி என்ன?

Published On:

| By Mathi

95 Dead, Over 400 Missing including 133 Indians in Nepal Floods

நேபாள நாட்டின் பெருவெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. இந்த பேரழிவு வெள்ளத்தின் கோரப் பிடியில் சிக்கிய 133 இந்தியர்கள் உட்பட 400-க்கும் மேற்பட்டோர் கதி என்ன என்பது தெரியவில்லை.

நேபாளத்தின் வட பகுதியில் ரசுவா (Rasuwa) மாவட்டத்தில் திபெத் எல்லைக்கு அருகில் ஏற்பட்ட திடீர் பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. போதே கோஷி (Bhote Koshi) மற்றும் திரிசுலி நதிகளில் ஏற்பட்ட இந்த கோரப் பெருவெள்ளத்தால் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கதி என்ன என்பது தெரியவில்லை.

ADVERTISEMENT

தற்போதைய நிலவரப்படி,இந்த பேரழிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட மற்றும் மாயமான 400-க்கும் மேற்பட்டோரில் 133 இந்தியர்களும் அடங்குவர்.

ADVERTISEMENT

காணாமல் போனவர்களில் பெரும்பாலோர் திபெத்தில் உள்ள கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்குச் சென்ற யாத்ரீகர்களும், சுற்றுலாப் பயணிகளும். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சிக்கி உள்ளனர்.

நேபாளத்தில் பேரழிவு ஏன்?

திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பனிப் பாறை வெடிப்பு Ice-rock avalanche காரணமாக போதே கோஷி நதியில் திடீரென பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ADVERTISEMENT

மலைப்பகுதிகளில் இருந்து உருண்டு வந்த பாறைகள், சேறு மற்றும் வெள்ளம் பல கிராமங்களை அடித்துச் சென்றதுடன், திபெத்தையும் நேபாளத்தையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மிதேரி பாலத்தையும் வாரி சுருட்டிக் கொண்டு போனது. நேபாளத்தின் முக்கிய நீர்மின் மற்றும் மின் கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

ரசுவா மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களில் சாலைகள், தொலைத்தொடர்பு மற்றும் மொபைல் நெட்வொர்க் இணைப்புகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

வெள்ளப் பெருக்கு இன்னும் முழுமையாக குறையாததால், பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் ஹெலிகாப்டர்கள் தரையிறங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. ஆயினும், நேபாள ராணுவம், ஆயுதப் படை மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவின் விமான படையும் உதவிக்கு களமிறங்க தயார் நிலையில் உள்ளது.

இந்திய எல்லை மாநிலங்களில் உஷார் நிலை

நேபாளத்தில் இருந்து பாய்ந்தோடும் வெள்ள நீர் கோஷி மற்றும் கண்டக் நதிகள் வழியாக இந்தியாவுக்குள் நுழையும் அபாயம் உள்ளதால், பீகார் மற்றும் உத்தரப் பிரதேச மாநில எல்லைப் பகுதிகளில் அதிஉச்ச எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பீகாரில் உள்ள வால்கீகார் நகர் கண்டக் அணையின் அனைத்து 36 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

மோடி ஆறுதல்

இந்தப் பேரழிவு குறித்து நேபாள பிரதமர் பலேந்திர ஷாவை தொடர்பு கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழப்புகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், இந்த இக்கட்டான சூழலில் நேபாள நாட்டுக்குத் தேவையான அனைத்து வகையான மனிதாபிமான உதவிகளையும், நிவாரணப் பொருட்களையும் வழங்க இந்தியா முழுமையாகத் தயாராக இருப்பதாக உறுதியளித்துள்ளார்.

காணாமல் போன இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளதுடன், நேபாள அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு நடவடிக்கைகளைக் கண்காணித்து வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share