நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாக தகவல்கள் வருகின்றன.
நேபால் நாட்டில் திபெத் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ரசுவா மாவட்டத்தில் பனி சூழ்ந்த ஏரி உருகி, மொத்தமாக நீர் வெளியேறியதால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் வணிக கட்டிடங்கள், வீடுகள், வாகனங்கள் எல்லாம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த வெள்ளத்தில், சுமார் 19 பாலங்கள், 40 கிலோ மீட்டர் சாலைகள், 200 வாகனங்கள் நீரில் அடித்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது
இந்தநிலையில், நேபாளத்துக்கு புனிதப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 57 பேர் ரசுவா மாவட்டத்தின் திமுர் பகுதியில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள சூப்பர் யாத்ரா ஏஜென்சி மூலம் கும்பகோணம், மயிலாடுதுறை, ஓசூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 57 பேர் விமானம் மூலம் நேபாளம் உள்ளிட்ட வட மாநிலத்திற்கு 13 நாட்கள் சுற்றுலா சென்றுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு புறப்பட்ட அவர்கள் மூன்று பேருந்துகளில் இரண்டு நாள் நேபாளத்தில் சுற்றிவிட்டு இன்று காலை தான் எல்லை விட்டு திபெத் சென்றனர் என்று அந்த ஏஜென்சியின் உரிமையாளர் சாதிக் தெரிவித்துள்ளார்,
“ஒரு பேருந்தில் உள்ள 20 பேர் மட்டுமே பாதுகாப்பாக இருப்பதாக தன்னை தொடர்பு கொண்டு கூறினர்.
மேலும் இரண்டு பேருந்துகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. அதில் 37 பேர் இருக்கின்றனர்” என்றும் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உட்பட பல இந்தியர்கள் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.
நேபாளம் வெள்ளம் தொடர்பான உதவிக்கு 1800 309 3793 என்ற கட்டணமில்லாத எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்ட தகவலின்படி, மொத்தம் 384 பயணிகள் காணாமல் போய் உள்ளதாகவும், இதில் 291 பேர் வெளிநாட்டினர், 93 பேர் நேபாள நாட்டினர் எனவும் நேபாள சுற்றுலா வாரியம் கூறியுள்ளது.
வெள்ளப்பெருக்கு அதிகமாக இருப்பதால் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
