செப்டம்பர் 1ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
வழக்கமாக டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படும். ஆனால் போதிய மழை பெய்யாததாலும், கர்நாடகா உரிய நீரை திறந்துவிடாததாலும் இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி தமிழக அரசு தண்ணீர் திறந்துவிடவில்லை.
இதனால் டெல்டா விவசாயிகள் வேதனை அடைந்தனர்.
இந்தச்சூழலில் இரண்டரை மாதங்கள் கழித்து வரும் செப்டம்பர் 1ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று (ஆகஸ்ட் 26) வெளியிட்ட அறிவிப்பில், ”
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் 01.09.2026 அன்று, மேட்டூர் அணையிலிருந்து, டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்து வைக்க உள்ளார்.
2026-2027 பாசன ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் பயன்பாட்டிற்குரிய நீர் இருப்பு 41.223 டி.எம்.சி. மட்டுமே இருந்தது. கர்நாடக அணைகளிலிருந்து கிடைக்க வேண்டிய நீர் போதிய அளவில் கிடைக்காததாலும், அணையின் குறைந்தபட்ச இருப்பான 10 டி.எம்.சி.யை பராமரிக்க வேண்டியிருந்ததாலும், டெல்டா பாசனத்திற்குத் தொடர்ச்சியாக நீர் வழங்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது.
இருப்பினும், பொதுமக்களின் அத்தியாவசிய குடிநீர்த் தேவைகளுக்காக மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவு நீர் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்காக, தமிழ்நாடு அரசு சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் முன்பு தமிழ்நாட்டின் உரிமைகள் மற்றும் நீர்த் தேவைகள் வலியுறுத்தப்பட்டதுடன், உச்ச நீதிமன்றத்திலும் தமிழ்நாட்டின் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இத்தொடர் முயற்சிகளின் விளைவாக, வெவ்வேறு காலகட்டங்களில் தமிழ்நாட்டின் எல்லையான பில்லிகுண்டுலுவில் வினாடிக்கு 3,500 கனஅடி, 9,000 கனஅடி மற்றும் 12,000 கனஅடி நீர் கிடைப்பதை உறுதி செய்யுமாறு கர்நாடக அரசுக்கு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு உத்தரவிட்டு, காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அதனை உறுதி செய்து உத்தரவிட்டது.
இதன் மூலம் தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரைப் பெறுவதற்கான உரிமை தொடர்ந்து நிலைநாட்டப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை அணுகி, விகிதாசார அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய நீரைப் பெறுவதற்காக இந்த அரசு தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழ்நாட்டின் உரிமைகளைப் பாதுகாப்போம் என்பதில் இந்த அரசு அசைக்க முடியாத உறுதியுடன் உள்ளது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு படிப்படியாக உயர்ந்து வருவதையும், எதிர்பார்க்கப்படும் நீர்வரத்து மற்றும் வடகிழக்குப் பருவமழையையும் கருத்தில் கொண்டும், குடிநீர் மற்றும் டெல்டா பாசனத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் தற்போது நீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது.
இதனையொட்டி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, காவிரி டெல்டா மாவட்டங்களில் பாசனப் பணிகளை உடனடியாகத் தொடங்குவதற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.
விவசாயிகளுக்கு உரிய தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி, நிலங்களை உழுது தயார் செய்தல், நாற்றங்கால் அமைத்தல், விதைப்பு மேற்கொள்ளுதல், தரமான விதைகள், உரங்கள் மற்றும் பிற வேளாண் இடுபொருட்களை போதிய அளவில் இருப்பில் வைத்தல் ஆகியவற்றை உறுதி செய்ய வேண்டும்.
குறுகிய கால மற்றும் நடுத்தர கால நெல் ரகங்கள் உள்ளிட்ட பொருத்தமான பயிர் ரகங்களைத் தேர்வு செய்வதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட வேண்டும்.
விவசாயிகள், கிடைக்கும் நீரை சிக்கனமாகவும் திட்டமிட்டும் பயன்படுத்தி, வேளாண்மைத் துறையின் ஆலோசனையுடன் சாகுபடிப் பணிகளை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், நீர்வளத்துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, முறைப்பாசனத்தின் மூலம் கடைமடை வரை நீர் சென்றடைவதையும். கிடைக்கும் ஒவ்வொரு துளி நீரும் அதிகபட்ச பாசனப் பயனை அளிப்பதையும் “ஒவ்வொரு துளி நீரிலும் அதிக மகசூல்” கிடைப்பதையும் உறுதி செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
