நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள்: டெல்லியில் முகாமிட்டு மீட்புப் பணிகளை ஒருங்கிணைக்கும் தமிழக அமைச்சர்கள்!

Published On:

| By Pandeeswari Gurusamy

நேபாளத்தில் சிக்கி உள்ள தமிழர்களை மீட்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் தமிழக அமைச்சர்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

நேபாளம்-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவினால் போதேகோசி நதியில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த அதிபயங்கர வெள்ளப்பெருக்கில் கரையோரக் கட்டிடங்கள், பாலங்கள், ஏராளமான வணிக வளாகங்கள் மற்றும் வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. இத்துயரச் சம்பவத்தில் 450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோரைக் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்தப் பெருவெள்ளத்தில் சிக்கிய இந்தியாவைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை என்று நேபாள அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள வெள்ளத்தில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதை அடுத்து, அவர்களை மீட்கும் பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்குத் தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஆஷிஷ் குமார், ஐஏஎஸ் தலைமையிலான சிறப்புக் குழுவைக் காட்மாண்டுவுக்கு அனுப்பவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

முதல்வரின் உத்தரவின்பேரில், நேபாளத்தில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்கும் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் டெல்லிக்குச் சென்றுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை அமைச்சர்கள் ராஜ்மோகன், வினோத் மற்றும் தென்னரசு ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள், உதவி மையத்தின் செயல்பாடுகள், பெறப்படும் தொலைபேசி அழைப்புகள், தகவல் சேகரிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பு குறித்து அலுவலர்களிடம் அவர்கள் கேட்டறிந்து ஆய்வு செய்தனர்.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share