சீன அதிர்ச்சி 2.0: அறிவியல், தொழில்நுட்பம், கல்வி வேலைவாய்ப்பு… இந்தியா என்ன செய்ய வேண்டும்? – பகுதி 2

Published On:

| By Minnambalam Desk

ஆயிஷா இரா நடராசன்

முதல் பகுதியின் தொடர்ச்சி

ADVERTISEMENT

உலக சந்தையில் சீனா

இந்த இடத்தில் நாம் வேறு ஒரு விஷயத்தை பரிசீலிக்க வேண்டி இருக்கிறது. இடதுசாரி பார்வையில் சீனாவை எப்படி நாம் விளங்கிக் கொள்வது. சீனா கம்யூனிஸ்ட் நாடு என்றால் அங்கு தனியார் நிறுவனங்கள் எப்படி வந்தன. அலிபாபா, ஹுவாவை, BYD என்று அடுக்கிக் கொண்டே போகிறார்களே. இதெல்லாம் எப்படி சாத்தியம் அப்படியானால் சீனா கம்யூனிஸ்ட் நாடு இல்லையா. சீனாவில் தனியார் நிறுவனங்களே இல்லை என்பது அது ஒரு சோஷலிச தேசம் என்பதெல்லாம் தவறான புரிதல் என்பது நமக்கு விளங்குகிறது. எனவே சீனாவில் சந்தை இருக்கிறது சந்தையை நோக்கிய உற்பத்தி இருக்கிறது..

ADVERTISEMENT

ஆனால் சீனா சந்தையைப் பயன்படுத்துவது என்பது முதலாளித்துவத்தை முழுமையாக ஏற்றுக் கொள்வது அல்ல. இந்த இடத்தில்தான்  பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. சீனா தன்னை சந்தை சோஷலிச நாடு என்று அழைத்துக் கொள்கிறது. வெறும் சோஷலிச நாடு என்கிற பெயரில் இருந்து 1978 ஆண்டு நடந்த பெரும் சீர்திருத்தம் மூலம்.. டெங் ஜீயோபிங்(DENG XIAOPING) எனும் தலைவரின் காலத்தில் இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டு படிப்படியாக சீனா உலக சந்தை வித்தகராக மாறியது. சோவியத் யூனியன் அழிக்கப்பட்டதைப் போல சீனாவை அமெரிக்காவால் அழிக்க முடியாததற்கு இதுதான் காரணம்.

DENG XIAOPING
DENG XIAOPING

ஆனால் உலக நாடுகளின் முதலாளித்துவ சந்தை அணுகுமுறைக்கும் சீனாவுக்கும் இடையே மிக முக்கிய வித்தியாசம் உள்ளது. சீனாவில் தனியார்மயம் உண்டு தனியார் நிறுவனங்கள் உண்டு சந்தையும் உண்டு. ஆனால் வர்த்தகம் முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தியாவைப் போல அரசாங்கமே அதானி அம்பானி போன்ற வர்த்தகவாதிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. மாறாக கடன், சொத்து, இளைஞர்களின் வேலைவாய்ப்பு, சந்தை லாபத்தை பகிர்வதில் சமத்துவம், தனியார் துறை சட்டங்கள், தொழிலாளர்களின் உரிமைகள், இவை அனைத்தையும் அரசாங்கம் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் சீனாவின் தனித்தன்மை. அமெரிக்க டாலர்கள் கொடுத்து சீனப் பொருட்களை சந்தைக்குள் நீங்கள் வாங்கும்பொழுது மேனைய நாடுகளுக்கு கொடுத்த பணத்தில் கால்பங்கை கூட நீங்கள் கொடுப்பதில்லை.. இப்போது கடந்த ஐந்தாண்டுகளாக சீனத்திடமிருந்து எதை வாங்கினாலும் சீனாவின் பணமான ’யுவான்’ கொடுத்து நீங்கள் வாங்க வேண்டும் என்கிற அளவிற்கு சீனா உலக வர்த்தகத்தை கைப்பற்றிவிட்டது. 

ADVERTISEMENT

சீனா அதிர்ச்சி 2.0 வின் மிக முக்கியமான ஒரு விஷயத்தை புரிந்து கொள்வதற்கு முன் சீனா வெற்றிக்கு பின்னால் இருக்கும் மிக முக்கியமான சில நபர்களை நாம் சந்திக்க வேண்டும். இவர்களை அவர்கள் கொண்டாடுவதெல்லாம் இல்லை.. சொல்லப்போனால் பல சீனர்களுக்கே அவர்களுடைய பெயர்கள் தெரியாது.

1978 சீன அறிவியல் தொழில்நுட்ப புரட்சி தொடங்கியது.. அறிவியல் + தொழில்நுட்பம் + கல்வி + சந்தை மற்றும் உற்பத்தி சாலைகள் ஒரே நேர்கோட்டில் இணைக்கப்பட்டன. அதற்கு முன்னர் சீனாவின் அறிவியல் என்றாலே அது அரசு திட்டங்களாக இருந்தன. மறுமலர்ச்சி மற்றும் சந்தை திறப்பிற்கு பிறகு உலகத் தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வது என்று சீனா முடிவு செய்தது வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது உற்பத்தியைப் பெருக்குவது பின்னர் சொந்த தொழில்நுட்பத்தை உருவாக்குவது போன்ற நீண்ட பயணத்தை அப்போது அது தொடங்கியது.

சீனத் தொழில்நுட்பத்தின் நாயகர்கள்

சீனாவின் தொழில்நுட்ப புரட்சி என்பது ஒரே ஒரு கண்டுபிடிப்பால் தொடங்கவில்லை அறிவியல், தொழில், கல்வி, சந்தை ஆகியவற்றை இணைத்த ஒரு அரசியல் முடிவால் தொடங்கியது. இந்தியாவில் அரசியல் லாபத்திற்காக கொண்டு வரப்பட்ட அவசரநிலை காலங்களில், வலது பிஜேபியா காங்கிரசா என்கிற மிகப்பெரிய ஒரு அரசியல்.. இலங்கை பிரச்சனை… பஞ்சாப் சிக்கல் என்றெல்லாம் நாடு விவாதித்துக் கொண்டிருந்த காலத்தில் சந்தைகளை கைப்பற்றியது சீனா. காரணம் அது கல்வியில் பெரிய மாற்றங்களை அப்போதே கொண்டு வந்துவிட்டது.

வாங் ஜுவான்ஃபு

இன்றைக்கு சீனாவின் இந்த பிரம்மாண்ட பாய்ச்சலுக்குக் காரணமான தற்போதைய மாமனிதர்களில் மின்சார கார்களை உற்பத்தி செய்யும் BYD நிறுவனர் வாங் ஜுவான்ஃபு(WANG CHUANFU) குறிப்பிடத்தக்கவர். அவரது பின்னணி பேக்டரி டெக்னாலஜி..BYD தொடக்க காலத்தில் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனம் அல்ல பேட்டரி உருவாக்கும் வலிமை பெற்ற நிறுவனம் மட்டுமே பின்னர் அந்த பேட்டரிகளை எதற்கெல்லாம் பயன்படுத்த முடியும் என்கிற தொழிற்சாலைகளை மெல்ல மெல்ல வளர்த்தெடுத்து இன்று ஒரு பிரம்மாண்டமாக உலகின் முன்னால் அது நிற்கிறது.

பெட்ரோல் டீசல் பற்றி உலகம் இன்று விவாதித்துக் கொண்டிருக்கும் நிலையில் மின்சாரக் கார்களை வாகனங்களை சைக்கிள்களை இருசக்கர வாகனங்களை உற்பத்தி செய்து கொண்டு வந்து உலகில் கொட்டிக்கொண்டிருக்கிறது சீனா. உலகின் எதிர்காலம் அதை நோக்கித்தான் வரப்புகிறது என்பதை பத்தாண்டுகளுக்கு முன் அறிந்து உலக சந்தையை அது ஒரு ஜாம்பவானாக கைப்பற்றிவிட்டது.

செங் யூகும்

 இன்றைக்கு CATL என்கிற ஒரு நிறுவனம் சீனாவில் மின்சார கார்களின் உற்பத்தியை அதனுடைய பேட்டரி தொடர்பான நவீனமயமாக்கத்தை நோக்கி எடுத்துச் சென்றுவிட்டது இதன் பின்னணியில் இருப்பவர்தான் செங் யூகும்(ZENG YUQUN). இவர் ராபின் சென் என்றும் அழைக்கப்படுகிறார். உலகத்தின் அனைத்து வகையான, மின் பேட்டரிகள் தயாரிக்கும் ஏறக்குறைய 800 ஆலைகளை இவர் வைத்திருக்கிறார். அனைத்தும் சீனத்திலிருந்துதான் இயங்குகின்றன.

LIANG MONG SONG

லியாங் மாங் சாங்(LIANG MONG SONG) குறை கடத்திகள் என்றழைக்கப்படும் செமிகண்டக்டர்.. உற்பத்தியில் இந்த தாய்வான்காரர் ஒரு பிரம்மாண்ட உற்பத்தி நிறுவனராக இருக்கிறார் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய நாடுகளில் சிப்ஸ் எனும் வில்லைகள் கிடைக்காவிட்டாலும் சீனா தன்னுடைய செமிகண்டக்டர் உற்பத்தி செய்யும் தொழில் கட்டமைப்பை ஒருபோதும் நிறுத்தவில்லை. இதன் காரணமாக சீனாவுக்கு உற்பத்தி சந்தை விற்பனை சந்தை இரண்டிலும் முன்னுரிமை கிடைத்தது.

KAI-FU-LEE

காய்-ஃபு-லீ (KAI-FU-LEE) இந்த ஒரு மனிதரின் பெயரைக் கேட்டால் செயற்கை நுண்ணறிவு உலகமே அதிருகிறது.. இவர் சீனாவின் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் ஒரு பாலமாக கருதப்படுகிறார். இவர் ஒரு விஞ்ஞானி ஆய்வாளர் மட்டுமல்ல ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்முனைவோர் மற்றும் முதலீட்டாளர். அமெரிக்க சந்தைகளை பிடித்த அனுபவத்தின் மூலம் உலகெங்கும் புகழப்படுபவர். இன்று உலகத்தில் பயன்படுத்தப்படுகின்ற செயற்கை நுண்ணறிவு சம்பந்தமான அனைத்து வகை மென்பொருள் விஷயங்களின் பின்னணியிலும் சீனா இருப்பதற்கு இவர்தான் முக்கிய காரணம்.

லியாங் வென்ஃபாங்(LIANG WENFENG) இன்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் DEEPSEEK நிறுவனர். இந்த நிறுவனம் 2023 ஆண்டுதான் தொடங்கப்பட்டது ஆனால்2025 ஆம் ஆண்டு DEEPSEEK R1 வெளியான பொழுது உலக செயற்கை நுண்ணறிவுப் போட்டியில் மிகப்பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதிக கம்ப்யூட்டிங் ஆற்றல் மட்டுமே செயற்கை நுண்ணறிவு முன்னேற்றத்திற்கான வழி அல்ல அல்காரித திறன் மற்றும் மாடல் கட்டமைப்பு மற்றும் திறமையான பொறியியல் அம்சங்கள் மூலமாக அடிப்படை பொருட்கள் விஷயத்திலேயே சீனாவில் கிடைக்கும் சிலர் அபூர்வ தாதுகளை பயன்படுத்தி உற்பத்தி நிலையிலேயே உலகை அசர வைத்தது DEEPSEEK.

டங் ஜீ மற்றும் யாங் ஷில்லிங் (TANG JIE & YANG ZHILIN)… ட்ஷிங்ஹூவா பல்கலைக்கழகம் .. உருவாக்கிய மாமேதைகள் இவர்கள்.. இவர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கும்,Z-AI மற்றும் MOON SHOT AI அடுத்த தலைமுறைக்கான செயற்கை நுண்ணறிவாக இன்று மாறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு புரட்சி என்று இதனை உலகமே அழைக்கிறது. ஷாங்காய் பல்கலைக்கழகத்திற்கும் ட்ஷிங்ஹூவா பல்கலைக் கழகத்திற்கும் இடையில்தான் செயற்கை நுண்ணறிவு குறித்த சந்தைப் போட்டி நிலவுகிறது. இந்த இரண்டு பல்கலைக்கழகங்களுமே சீனாவில்தான் உள்ளன. இவை கொடுக்கும் தரவுகளின் அடிப்படையை மையமாக வைத்துத்தான் சாட் ஜீ பி டி கூட இயங்குகிறது என்பதை நினைத்துப் பாருங்கள்.

 யூனிட்ரீ UNITREE என்கிற ஒரு நிறுவனம் இதனை வான் சிங்சிங்( WANG XINGXING) எனும் தொழில்நுட்பவாதி நடத்தி வருகிறார். 2026ஆம் ஆண்டில் ரோபோட்டிக்ஸ் ஒரு சாட் ஜீபிடி போன்றதொரு சூழலை-மோமெண்ட் நோக்கி செல்கிறது அதாவது ரோபோட்கள் உண்மையான உலகை புரிந்து கொண்டு தானாகவே சிந்திக்கும் அறிவை பெற முடியும் என்று கணித்து அதற்கேற்றாற் போல மனித இயந்திரங்களை படைக்கும் உலகத்தின் முற்போக்கு நாடாக ரோபோட் தொழில்நுட்பத்தை அந்த நாட்டை மாற்றிய பெருமை இவருக்கு உண்டு. இன்றைக்கு உலக அளவில் ரோபோட்டுகளின் ஒட்டுமொத்த வர்த்தகத்தில் 97 சதவீதத்தை தன் கையில் வைத்திருக்கிறது சீனா.

பான் ஜான்வி… குவாண்டம் அறிவியலில் க்வாண்டம் கணினி மயம் நோக்கி நாட்டை எடுத்துச் செல்வதில் பல்வேறு அறிஞர்கள் ஈடுபட்டிருந்தாலும் பான் ஜான்வி(PAN JIANWEI) முன்னணியில் வைத்து உலக அளவில் பேசப்படுகிறார்.

எதிர்காலத்தில் தற்போதைய சிப் அடிப்படையிலான கணினிகள் கைவிடப்பட்டு க்வாண்டம் கணினிகள் உருவாக்கப்படும் என்பதை நன்கு அறிந்து கொண்டு 2001 ஆண்டு தொடங்கப்பட்ட சீனத்தின் வரலாறு காணாத கணினியாக்க ஆய்வுகள் உலகத்தோடு தற்பொழுது போட்டியிட்டு முதல் குவாண்டம் சென்சிங் கணினிகளை உற்பத்தி செய்து உலகைத் திரும்பிப் பார்க்க வைத்தவர் இவர். அதேபோல வான் நோக்கிய விண்வெளி இயலுக்கு கியான் சூசன்( QIAN XUESEN) 5G கிளவுட் தொழில்நுட்பம் சார்ந்து HUAWEI தொழிற்சாலைகளும் உலக அளவில் இன்று சந்தைகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

உயிரி மருத்துவம் இன்றைக்கு மிக முக்கியமான ஒரு திசையை நோக்கி சென்றுவிட்டது காரணம் சீனாவின் தலையீடு. எந்த மருந்துகளை உலகம் உற்பத்தி செய்தாலும் அதை அரை விலைக்கு கொடுத்து அந்த சந்தையை கைப்பற்றுகிறது சீனா.

கட்டுரையாளர் – ஆயிஷா இரா நடராசன்

மின்னஞ்சல் : eranatarasan@yahoo.com

(அடுத்த பகுதியில், சீனா போன்ற நாடுகளின் வளர்ச்சி மாதிரியிலிருந்து பாடம் கற்று, நமது நாட்டின் இளைஞர் சக்தியை ஒரு உலகளாவிய தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பப் புரட்சியாக மாற்றுவதற்கான தொலைநோக்குத் திட்டங்களை விரிவாகக் காண்போம்.)

அடுத்த பகுதி – நாளை -ஆகஸ்ட், 29

Photo of author
Minnambalam Desk
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share