ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்குவது மற்றும் ஆட்சேபகரமான நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்கான சிறப்பு வரன்முறை திட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசித்து வரும் தகுதியான பயனாளிகளுக்கு பட்டா வழங்கும் சிறப்பு வரன்முறை திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.
இதன் கால அவகாசம் 31ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், “நீர்நிலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தர வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், இத்தகைய நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து உரிய செயல்பாட்டுக்கு உட்படுத்துவதற்காகவும், சம்பந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையின் மூலமாக தனியார் நிலங்களை கையகப்படுத்தி, ஏழை குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் ஒரு சிறப்பு திட்டத்தைச் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.
அரசு புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகளுக்கும் மேலான குடியிருப்பு ஆக்ரமணங்களைச் சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு, வரன்முறைப்படுத்தி, தகுதியான பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டாவை இலவசமாக வழங்கும் ஒரு சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தைச் செயல்படுத்த ஆணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில், சிறப்பு வரன்முறைப்படுத்தும் இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்து, இத்திட்டங்களை சீரமைத்து, செயல்பாட்டை தீவிரப்படுத்த மேலும் கால அவகாசம் வழங்க அரசு முடிவு செய்து, அதன்படி, சில நெறிமுறைகளுக்கு உட்பட்டு இத்திட்டங்களை செயல்படுத்த அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது. சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டமானது, ஒவ்வொரு வருடமும் கால நீட்டிப்பு செய்யப்பட்டு, கடைசியாக மேலே ஒன்பதாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையின்படி 30.8.2026 வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நில நிருவாக ஆணையரின் கடிதத்தில், மேற்படி சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ், தகுதியான பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்கு குறிப்பாக திருச்சிராப்பள்ளி, தருமபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவாரூர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து முன்மொழிவுகள் வரப்பெற்று பரிசீலனையில் உள்ளது என்றும், சில முன்மொழிவுகள் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு, அரசாணைகளை எதிர்நோக்கி நிலுவையில் உள்ளது என்றும், எனவே, ஆட்சேபகரமற்ற புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக உள்ள குடியிருப்பு ஆக்கிரமணங்களை வரன்முறைப்படுத்தி வீட்டுமனைப் பட்டா வழங்கவும், ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு புலங்களில் குடியிருப்புகளாக உள்ள ஆக்ரமணங்களை அகற்றி தகுதியான பயனாளிகளுக்கு மாற்று இடம் கண்டறிந்து வீட்டுமனைப் பட்டா வழங்கவும், இச்சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தினை மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து, மேற்படி சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தினை 31.8.2026 முதல் மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிப்பு செய்து உரிய ஆணை பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
