எவரெஸ்ட் மற்றும் எல்ஜி நிறுவனங்களின் பெருங்காயத்தூளை விற்க இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
நமது வீட்டின் சமையலறைகளில் முக்கியமாக இருக்கும் உணவுப் பொருட்களில் ஒன்று எல்ஜி மற்றும் எவரெஸ்ட் பெருங்காயத்தூள்.
இந்த நிலையில் இரு நிறுவனங்களின் பெருங்காய தூளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெருங்காயத்தின் தரம் குறித்த புகார்கள் தொடர்ந்து வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள எவரெஸ்ட் மற்றும் எல்ஜி பிராண்ட் யூனிட்டின் மத்திய உரிமம் பெற்ற ஆலைகளில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
குஜராத்தின் உம்பர்கானில் உள்ள எவரெஸ்டின் மாநில உரிமம் பெற்ற ஆலையிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வில் பெருங்காயத்தின் மாதிரிகள் அனைத்தும் தரம் குறைந்தவையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையம் கூறியுள்ளது.
சோதனையில் கண்டறியப்பட்டது என்ன?
2011 ஆம் ஆண்டின் உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் விதிகளின் கீழ் கூட்டு பெருங்காயம் என்பது அனுமதிக்கப்பட்ட ஒரு உணவுப் பிரிவாகும். இது பிசின், மாவு சத்துக்கள் மற்றும் பிற தானிய மாவு பொருட்களுடன் கலந்து தயாரிக்கப்படுகிறது.
விதிகளின்படி கூட்டுப் பெருங்காயத்தில், குறைந்தது 5% ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருப்பதை உறுதி செய்யும் அளவுக்கு போதுமான மூலப் பெருங்காயம் இருக்க வேண்டும்.
இருப்பினும் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் 0-3 சதவிகிதம் மட்டுமே ஆல்கஹாலில் கரையக்கூடிய சாறு இருந்தது. இது நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட மிகக் குறைந்ததாகும்.
பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில் தேவையான அளவை விட 30 முதல் 40% குறைவான மூலப் பெருங்காயத்தை மட்டும் உற்பத்தியாளர்கள் சேர்த்ததை ஆய்வு முடிவுகள் காட்டியதாக இந்த ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.
மும்பையில் உள்ள எல்ஜி பிராண்ட் யூனிட்டில் ஆறு வகையான மூலப் பெருங்காயத்தையும் ஆய்வுக்கு உட்படுத்தியது.
இதில் மூலப் பெருங்காயத்தில் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச மாவுச்சத்து அளவு ஒரு சதவிகிதமாக இருக்க வேண்டும் என்ற நிலையில் பரிசோதிக்கப்பட்ட ஆறு வகைகளிலும் மாவுச்சத்து (ஸ்டார்ச் அளவு) 15 சதவிகிதம் முதல் 32 சதவிகிதம் வரை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சூழலில் தான் எஃப்எஸ்எஸ்ஏஐ, எல்ஜி மற்றும் எவரெஸ்ட் கூட்டு பெருங்காயம் விற்பனைக்கு தடை விதித்துள்ளது
