‘எழுத்தறிவுக்குப் பிந்தைய சமூகமா’ தமிழ்ச் சமூகம்?

Published On:

| By டி.ரவிக்குமார்

ரவிக்குமார் எம்.பி

தமிழ்நாட்டில் மக்கள் புத்தகங்களை முன்பைப் போல நீண்ட நேரம் படிப்பதில்லை என்ற கவலை பரவலாக உள்ளது. ஸ்மார்ட்போன்கள், சமூக ஊடகங்கள், ரீல்ஸ்கள் போன்றவை மக்களின் வாசிப்புப் பழக்கத்தை மாற்றிவிட்டன என்று விமர்சனங்கள் எழுகின்றன. அரசியல் தளத்திலோ இந்த நிலையைத் ‘தற்குறித்தனம்’ என்று சிலர் கேலி பேசுகின்றனர்.

ADVERTISEMENT

ஆனால், இது வெறுமனே புத்தக வாசிப்பு குறைந்து வருவதற்கான பிரச்சினையா? தற்குறித்தனமா? அல்லது மனித சமூகம் அறிவை உருவாக்கி, சேமித்து, பகிர்ந்து, புரிந்துகொள்ளும் முறையிலேயே ஒரு அடிப்படை மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறதா? The Daily Star என்ற இணைய இதழில் பேராசிரியர் ஃபரிதுல் ஆலம் (Faridul Alam) என்பவர் எழுதிய கட்டுரை இந்தக் கேள்வியை ஆராய்கிறது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள City University of New York (CUNY) பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் அவர்.

Faridul Alam

அவர் முன்வைக்கும் முக்கியமான கருத்து, நாம் ‘எழுத்தறிவுக்குப் பிந்தைய சமூகம்’ ஒன்றை நோக்கிச் செல்கிறோம் என்பதுதான். ஆனால், இதை எழுத்து மறைந்து போகும் ஒரு காலமாகப் புரிந்துகொள்ளக் கூடாது. மாறாக, எழுத்து தனது பழைய மையத்தன்மையை இழந்து, பேச்சு, படம், ஒலி, காணொளி, டிஜிட்டல் ஊடகம், இணையம் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆகியவற்றோடு இணைந்து இயங்கும் புதிய தகவல் சூழல் உருவாகிறது என்கிறார் அவர்.

ADVERTISEMENT

வெறும் வாசிப்பல்ல… அது மறுஎழுத்து

“நீண்ட நேர வாசிப்புக் குறைவது என்பது புத்தக விற்பனை அல்லது வாசிப்பு எண்ணிக்கை குறைவதைக் காட்டிலும் ஆழமான மாற்றத்தைக் குறிக்கிறது” என்கிறார் பேராசிரியர் ஆலம். இதனால் கவனம், ஒருமுகச் சிந்தனை, தொடர்ச்சியான தர்க்கம், சிக்கலான கருத்துடன் நீண்ட நேரம் இருப்பது போன்ற அறிவுசார் பழக்கங்கள் பாதிக்கப்படுகின்றன. ஒரு உரையை முழுமையாக வாசிப்பதற்குப் பதிலாக அதன் சுருக்கத்தைப் பெறுவது, உடனடியாகப் பதிலைத் தெரிந்துகொள்வது போன்றவற்றில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் .

ADVERTISEMENT

‘புதிய ஊடகம் பழைய ஊடகத்தை அழித்துவிடுகிறது’ என்ற எளிய விளக்கத்தை ஆலம் ஏற்கவில்லை. மனித தொடர்பின் வரலாறு வாய்மொழி → எழுத்து → அச்சு → டிஜிட்டல் என நேர்கோட்டில் நகர்ந்ததாகக் கருதுவது தவறானது என அவர் சுட்டிக்காட்டுகிறார். புதிய ஊடகம் தோன்றும்போது பழையது முற்றிலும் மறைந்து விடுவதில்லை. மாறாக அதன் பங்கு மாற்றப்படுகிறது. வாய்மொழி எழுத்துக்குள் தொடர்கிறது; எழுத்து மீண்டும் பேச்சு மற்றும் நிகழ்த்துகலை வடிவங்களை அடைகிறது.

வாய்மொழி கலாச்சாரத்தில் அறிவு மனிதர்களின் நினைவிலும் நிகழ்த்துதலிலும் வாழ்கிறது. கதை சொல்லுபவரின் குரல், உடல் மொழி, உச்சரிப்பு, தாளம், பார்வையாளர்களுடனான தொடர்பு ஆகியவை அதன் அர்த்தத்தின் ஒரு பகுதியாகின்றன. எழுத்து இந்த உறவை முற்றிலும் மாற்றியது. பேச்சு முடிந்தவுடன் மறைந்துவிடக்கூடியது; எழுத்து ஆசிரியர் இல்லாத காலத்திலும் தொடர முடியும். ஒரு எழுத்தை மீண்டும் மீண்டும் படிக்கலாம்; வேறு உரைகளுடன் ஒப்பிடலாம்; குறிப்பு எடுக்கலாம்; மேற்கோள் காட்டலாம்; விமர்சிக்கலாம்; மொழிபெயர்க்கலாம். இதன் மூலம் வாசிப்புக்கு ‘தாமதம்’ மற்றும் ‘ஆழம்’ கிடைத்தது. வாசகர் ஒரு கருத்தை உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை; அதிலிருந்து விலகி, மீண்டும் திரும்பி, மறுபரிசீலனை செய்ய முடியும்.

ஆனால் எழுத்தும் நிலையான அர்த்தத்தை உறுதி செய்வதில்லை. ஆசிரியர் ஒரு குறிப்பிட்ட பொருளை உருவாக்கினாலும், அந்த எழுத்து வாசகர்களிடம் சென்றவுடன் புதிய சூழல்களிலும் புதிய விளக்கங்களிலும் நுழைகிறது. எனவே வாசிப்பு என்பது வெறுமனே ஆசிரியர் கூறிய பொருளை மீட்டெடுப்பது அல்ல; வாசகரும் அர்த்த உருவாக்கத்தில் பங்கேற்கிறார். எழுத்து → வாசிப்பு → விளக்கம் → மறுஎழுத்து என்ற ஒரு சுற்று உருவாகிறது. மேற்கோள், விமர்சனம், மொழிபெயர்ப்பு, தழுவல், மறுவிளக்கம் ஆகியவை இந்த மறுஎழுத்தின் பல வடிவங்களாகின்றன.

டிஜிட்டல் உலகம் இந்தச் சுற்றை மேலும் வேகப்படுத்தியுள்ளது. இப்போது ஒரு உரை வெறும் உரையாக மட்டும் இல்லை. அது படம், ஒலி, காணொளி, இணைப்பு, கருத்துரை, பதிவேற்றம், பாட்காஸ்ட், டிரான்ஸ்கிரிப்ட், சுருக்கம் போன்ற பல வடிவங்களில் உடனடியாக மாறுகிறது. வாசகர் ஒரே நேரத்தில் வாசகராகவும், விமர்சகராகவும், பகிர்பவராகவும், மறுஉருவாக்குபவராகவும், எழுத்தாளராகவும் மாறுகிறார்.

‘எழுத்தறிவுக்குப் பிந்தைய சமூகம்’ என்பது எழுத்தில்லாத சமூகம் என்று பொருளல்ல. மாறாக, அது அளவற்ற எழுத்து நிறைந்த சமூகம். செய்திகள், பதிவுகள், கருத்துரைகள், வசனங்கள், தலைப்புகள், விமர்சனங்கள், சுருக்கங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு உருவாக்கும் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் பெருகியுள்ளன. இங்கு பற்றாக்குறை எழுத்தில் இல்லை; அதன்மீதான கவனத்தில்தான் உள்ளது.

முன்பு முக்கியமான பிரச்சினை ‘எதைப் பெறுவது?’ என்பதாக இருந்தது. இப்போது ‘எதைப் படிக்க வேண்டும்?’ என்பதே பிரச்சினையாகிறது. எது நம்பகமானது? எதைப் புறக்கணிக்கலாம்? எதைச் சுருக்கிக் கொள்ளலாம்? எந்த விளக்கத்தை நம்புவது? அல்காரிதம் நமக்காகத் தேர்ந்தெடுத்ததா அல்லது நமது சொந்தத் தீர்மானமா? எனவே புதிய காலத்தில் எழுத்தறிவு என்பது படிக்கவும் எழுதவும் தெரிந்திருப்பது மட்டுமல்ல; தேர்ந்தெடுக்கவும், மதிப்பிடவும், விளக்கவும், பல்வேறு தகவல் வடிவங்களுக்கு இடையே செல்லவும் தெரிந்திருப்பதாகும்.

யார் எழுதுகிறார்கள்?

டிஜிட்டல் ஊடகம் வாய்மொழியின் சில பண்புகளை மீண்டும் கொண்டுவந்துள்ளது. பாட்காஸ்ட் உரையாடல் போல இருக்கிறது; லைவ்ஸ்ட்ரீம் நேரடி நிகழ்வு போலத் தோன்றுகிறது; சமூக ஊடகப் பதிவு உடனடி உரையாடல் போல் செயல்படுகிறது. ஆனால் இவை பழைய வாய்மொழி உலகுக்குத் திரும்புவது அல்ல. இவை தொழில்நுட்பத்தால் பதிவு செய்யப்பட்டு, சேமிக்கப்பட்டு, தேடப்பட்டு, மீண்டும் பகிரப்படக்கூடிய ‘தொழில்நுட்பமயமாக்கப்பட்ட வாய்மொழி’. நேற்று மறைந்துபோகும் பேச்சு இன்று நிரந்தர டிஜிட்டல் பதிவாக மாறுகிறது.

AI வாசிப்பை அழித்துவிடும் என்று ஆலம் கூறவில்லை. அது ஒரு புத்தகத்தைப் படிப்பதற்குப் பதிலாக சுருக்கத்தை மட்டும் வழங்கி ஆழமான வாசிப்பைத் தடுக்கிறது என்பது உண்மைதான். ஆனால் அதே நேரத்தில், ஒருவர் அறிந்திராத ஒரு புத்தகத்தை அதன்மூலம் அறிமுகப்படுத்தி, அதை வாசிக்கத் தூண்டவும் முடியும்.

முன்பு எழுத்தாளர் என்பவர் ஒரு நபர்; எழுத்து அவரது சிந்தனையின் வெளிப்பாடு. ஆனால் AI காலத்தில் ஒருவர் ஒரு கட்டளையை வழங்குகிறார், இயந்திரம் உரையை உருவாக்குகிறது, அவர் அதைத் திருத்துகிறார், பின்னர் அல்காரிதம் அந்த உரையை யாரிடம் கொண்டு சேர்ப்பது என்பதைத் தீர்மானிக்கிறது. இந்நிலையில் ‘யார் எழுதுகிறார்?’ என்ற கேள்வியே சிக்கலாகிறது. மனித எழுத்தாளருக்கும் இயந்திர உருவாக்கத்திற்கும் இடையிலான எல்லை மங்குகிறது.

ரீல்ஸ் கலாச்சாரமும்… சிந்தனை ஆழமும்

இப்போது நாம் கவலைப்பட வேண்டியது AI அல்லது டிஜிட்டல் ஊடகம் குறித்து அல்ல” என்று கூறும் ஆலம் “ மாறாக, ‘ஆழமான கவனத்தின்’ எதிர்காலம் குறித்தே நாம் அதிகம் கவலைகொள்ள வேண்டும்” என்கிறார். ஆழமான வாசிப்பு என்பது ஒரு உரையிலிருந்து தகவலை மட்டும் எடுத்துக்கொள்வது அல்ல. அதன் சிக்கல், முரண்பாடு, தெளிவின்மை ஆகியவற்றை நீண்ட நேரம் சிந்திப்பது.

ஒரு உரை என்ன சொல்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்கும் அது எவ்வாறு அந்தப் பொருளை உருவாக்குகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும் உள்ள வேறுபாடு இன்றைய ரீல்ஸ் கலாச்சாரத்தால் மறைந்து கொண்டிருக்கிறது.

‘எழுத்துக்குப் பிந்தைய சமூகத்தின்’ உண்மையான ஆபத்து அறியாமை அல்ல; அறிவுசார் ஆர்வம் குறைவது.

‘வாய்மொழி அல்லது எழுத்து’, ‘புத்தகம் அல்லது டிஜிட்டல் ஊடகம்’, ‘மனிதன் அல்லது AI’ என்ற இருமைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதாக எதிர்காலம் இருக்காது. மாறாக, பேச்சு, எழுத்து, படம், ஒலி, காணொளி, அச்சு, இணையம், தரவுத்தளம், அல்காரிதம் மற்றும் இயந்திரம் உருவாக்கும் மொழி ஆகியவை ஒன்றோடொன்று கலக்கும் ஒரு புதிய தகவல் சூழல் உருவாகும் எனக் கூறும் பேராசிரியர் ஆலம், ‘ எழுத்தறிவுக்குப் பிந்தைய சமூகம்’ என்பது, எழுத்தறிவு மட்டுமே அறிவை உருவாக்கும் மையமாக இல்லாத சமூகம்’ என்கிறார்.

பேராசிரியர் ஃபரிதுல் ஆலம் விவரிக்கும் சூழல் முழுவதும் தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது எனினும் பெரும்பாலான அம்சங்கள் தமிழ்நாட்டுக்குப் பொருந்துகின்றன. இந்தியாவில் நிலவுடைமைச் சமூகத்தின் அடித்தளம் ஆட்டம் காண்பதற்கு முன்பே அரசமைப்புச் சட்டத்தின்மூலம் ஒரு நவீன சமூகம் இங்கே கட்டமைக்கப்பட்டது. அதைப்போலவே, இந்தச் சமூகம் எழுத்தறிவுப் பெற்ற சமூகமாக மாறுவதற்கு முன்பே தொழில்நுட்ப வசதிகள் எழுத்தறிவுக்குப் பிந்தைய சமூகமாக இதை மாற்றிக்கொண்டுள்ளன.

பேராசிரியர் ஃபரிதுல் ஆலம் சுட்டிக்காட்டுவதுபோல இப்போதைய தமிழ்ச் சமூகத்தின் சிக்கல் ‘அறியாமை’ அல்ல; அறிவுசார் ஆர்வம் குறைவது. அதனால் கேள்விகளின் இடத்தை உடனடிப் பதில்கள் நிரப்புகின்றன. யதார்த்தத்தின் இடத்தை புனைவுகள் ஆக்கிரமிக்கின்றன. மக்கள் உரிமைகளை வீசியெறிந்துவிட்டு பிம்பங்களைத் தின்று பேருவகை கொள்கிறார்கள்.

இந்தச் சூழலில் அறிவுசார் ஆர்வத்தைத் தூண்டுவது கடினமான பணிதான் என்றாலும் அதை மக்கள்மீது அக்கறை கொண்டவர்கள் செய்துதான் ஆகவேண்டும்.

Photo of author
டி.ரவிக்குமார்

முனைவர் டி.ரவிக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் (விழுப்புரம் மக்களவைத் தொகுதி), எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share