மதுரை மேலூர் மற்றும் நத்தத்தில் FQL, VG செயலிகள் மூலம் பணம் இரட்டிப்பு என கூறி மோசடி செய்யப்பட்ட நிலையில் 27,000க்கும் அதிகமானோர் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் தலைமையில் FQL, VG, MAINS APP உள்ளிட்ட செயலிகள் செயல்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இதில் ‘FQL Trading Wallet’ என்ற செயலியில் ரூ.54,000 முதலீடு செய்தால் 45 நாட்களில் பணம் இரட்டிப்பாகும் என்றும், தொடர்ந்து முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என்றும், மேலும் புதிய உறுப்பினர்களைச் சேர்த்து அவர்கள் மூலம் முதலீடு செய்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் பொதுமக்களிடம் ஆசை வார்த்தைகள் கூறப்பட்டுள்ளன. இதை நம்பி, மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் முதலீடு செய்துள்ளனர்.
இந்த செயலி மூலம் கடந்த சில மாதங்களாக முதலீடு செய்தவர்களுக்கு அமெரிக்க டாலர் கணக்கில் பணம் கிடைத்ததாகவும், அதை அவர்கள் திரும்பப் பெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனால் பயனடைந்தவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களையும் முதலீடு செய்ய அழைத்துள்ளனர்.
இந்தச் சூழலில், கடந்த சில நாட்களாக இந்தச் செயலியில் பணத்தை திரும்பப் பெற முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இதுகுறித்து சமூக வலைத்தளங்களில் தகவல்களைப் பரப்பினர். இதுகுறித்து ரமேஷ், விஜய் ஆகியோர் மீது புகாரளிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்டோர் கடந்த வெள்ளியன்று, காசம்பட்டியில் உள்ள ரமேஷ், விஜய் ஆகியோரின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நத்தம் மற்றும் மேலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், துணைக் கண்காணிப்பாளர்கள் சங்கர், சுரேஷ் பாண்டியன் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, ரமேஷ், அவரது மனைவி அனிதா, விஜய் உள்ளிட்ட 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாகத் துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் தெரிவித்தார். அப்போது, கைதானவர்களை அழைத்துச் சென்ற காவலர்களின் வாகனத்தை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, ஆத்திரமடைந்த பொதுமக்கள் காவலர்களின் வாகனத்தின் மீது கற்கள் மற்றும் செருப்புகளை வீசியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆன்லைன் மோசடியின் உண்மையான நிலை குறித்தும், பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை மற்றும் மோசடித் தொகை எவ்வளவு என்பது குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் தொடர்ச்சியாக தாங்கள் ஏமாற்றப்பட்டது குறித்துக் காவல்துறையிடம் புகார் அளித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 27,000 பேர் காவல்துறை நடத்திய சிறப்பு முகாமில் புகார் அளித்துள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாக 1,200-க்கும் மேற்பட்டோர் தங்களது புகார்களைப் பதிவு செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இது குறித்து தமிழக வாழ்வுரிமைகள் கட்சி தலைவர் வேல்முருகன் தனது சமூக வலைதளத்தில் ,மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ‘FQL’ என்ற ஆன்லைன் செயலி மூலம் அதிக இலாபம், இரட்டிப்பு இலாபம் கிடைக்கும் எனக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகள் பெறப்பட்டு, தற்போது பெரும் மோசடி நடைபெற்றிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
இந்த மோசடி தொடர்பாக இதுவரை 1,500-க்கும் மேற்பட்ட புகார் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது உழைப்பால் ஈட்டிய பணத்தை இழந்திருக்கக்கூடும் என்ற நிலையில், இந்த மோசடியின் உண்மையான அளவு மற்றும் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையை முழுமையான விசாரணையின் மூலம் அரசு உடனடியாகக் கண்டறிய வேண்டும்.
இந்த மோசடியின் பின்னணியில் செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள், முகவர்கள் உள்ளிட்ட அனைவரையும் சட்டப்படி கைது செய்து, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இந்தச் சம்பவம் மேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளுடன் மட்டுமே தொடர்புடையதா? அல்லது தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலும் வெவ்வேறு செயலிகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர்களில் இதேபோன்ற மோசடிகள் நடைபெற்று வருகின்றனவா? என்பதையும் அரசு விரிவாக விசாரிக்க வேண்டும்.
தமிழ்நாடு முழுவதும் பதிவாகியுள்ள இணையவழி மற்றும் முதலீட்டு மோசடி புகார்களை ஒருங்கிணைத்து ஆய்வு செய்து, ஒரே மாதிரியான செயல்முறைகள், வங்கிக் கணக்குகள், பணப் பரிமாற்றங்கள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் முகவர் வலையமைப்புகள் ஏதேனும் தொடர்புடையவையா? என்பதை புலனாய்வு செய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் வங்கிக் கணக்குகள், சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாகக் கண்டறியப்படும் சொத்துகள் மற்றும் பணப் பரிமாற்றங்களை சட்டப்படி உடனடியாக முடக்கி, மோசடியில் பறிபோன பொதுமக்களின் பணத்தை மீட்பதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
அதேபோல், பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரிடமிருந்தும் முறையாக புகார் பெற்று, அவர்களின் பண இழப்பு குறித்த முழுமையான ஆவணங்களைச் சேகரித்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய சட்ட உதவியும் வழங்க வேண்டும்.
எளிய மக்களின் பல ஆண்டுகால உழைப்பையும் சேமிப்பையும் ஆசை வார்த்தைகளைக் கூறிச் சுரண்டும் இத்தகைய இணையவழி மற்றும் முதலீட்டு மோசடிகளை அரசு அலட்சியப்படுத்தக் கூடாது.
மேலூர் FQL மோசடி தொடர்பாக உண்மையான இழப்புத் தொகை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, மோசடியில் ஈடுபட்டவர்களின் முழு வலையமைப்பு ஆகியவற்றை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து, பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை விரைந்து மீட்டுத்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.” என தெரிவத்துள்ளார்.
