திண்டுக்கல் அருகே கோர விபத்து.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 குழந்தைகள் பலி

Published On:

| By Pandeeswari Gurusamy

Accident

திண்டுக்கல் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெற்றோர் உடன் சாலையில் விளையாடிக் கொண்டிருந்த 4 குழந்தைகள் பால் வேன் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

​திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று (ஆகஸ்ட் 30) பிற்பகல் பழனிச்சாமி என்பவரது மனைவி அஞ்சம்மாள் (60) ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார்.

ADVERTISEMENT

அவருடன் உறவினர் குழந்தைகளும் அங்கு சென்று சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ​அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் வேன் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராதவிதமாக சாலையோரம் அமர்ந்திருந்த குழந்தைகள் மீது பயங்கரமாக மோதியது.

​இந்த கோர விபத்தில்​ நாகராஜ் என்பவரது மகள்கள் யோகவர்ஷினி மற்றும் அனன்யா இருவரும் சாலை விபத்தில் சிக்கினர். மேலும் ஜெகதீசன் என்பவரது மகள் ​தனுஸ்ரீ, சின்னத்தம்பி ​என்பவரது மகன் மோசிகரன் (6) ​ஆகிய 4 குழந்தைகளும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதை பார்த்த ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மூதாட்டி அஞ்சம்மாள் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.

ADVERTISEMENT

​விபத்தை ஏற்படுத்திய பால் வேன் நிற்காமல் சென்ற நிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடமதுரை காவல்துறையினர், உயிரிழந்த 4 குழந்தைகளின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

​மேலும், விபத்தை ஏற்படுத்திய பால் வேனை பறிமுதல் செய்த வடமதுரை போலீசார், தப்பியோட முயன்ற வேன் ஓட்டுநரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பிஞ்சுக் குழந்தைகள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நடந்த பகுதியில் திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் ஆய்வு செய்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளார்.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share