நேபாள பேரழிவு பெருவெள்ளத்தில் சிக்கி ஈஷா அறக்கட்டளையின் 80 பேர் உயிரிழந்துள்ளனர்; இந்த 80 பேருக்காக செப்டம்பர் 3-ந் தேதி “கால பைரவ கர்மா” நிகழ்வு நடைபெறும்; ஈஷா நேபாளம் சார்பாக ரூ.1 கோடி நிதி உதவி, நேபாள அரசுக்கு வழங்கப்படும் என்று ஈஷா நிறுவனர் சத்குரு அறிவித்துள்ளார்.
நேபாளத்தின் காத்மண்டுவில் நேபாள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கக் கூடிய ”நேபாளத் துயரில் துணை நிற்போம்” (In Solidarity with Nepal) நிகழ்ச்சி நேற்று ஆகஸ்ட் 30-ந் தேதி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஈஷா நிறுவனர் சத்குரு பேசியதாவது: நேபாளத்தின் துணிச்சலான, அழகான, அன்பான மக்களே, நமஸ்காரம். கடந்த 20 ஆண்டுகளில், நேபாளம் எனது இதயத்தின் புவியியலில் குறிப்பிடத்தக்க ஓர் இடமாக மாறியுள்ளது. ஆண்டுதோறும், தொடர்ந்து நான் இங்கு வந்திருக்கிறேன்.

இயற்கைப் பேரிடருக்கு மாய விளக்கம் தேட வேண்டாம்.. இதுபோன்ற தருணங்களில், இத்தகைய பேரிடர் ஏன் நிகழ்ந்தது என்பதற்கான காரணங்களைக் கண்டறியவும், இது ஏன் நடந்தது என்பது குறித்த மாயமான சாத்தியக்கூறுகளைத் தேடவும் நாம் முனைகிறோம்.
ஆனால் இயற்பியலின் இயற்கையில் நிகழும் இத்தகைய நிகழ்வுகள் அனைத்தும் இயற்பியலின் விதிகளாலேயே உருவாகின்றன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதைக் கூறுவது கடுமையானதாக இருக்கலாம். ஏனென்றால், அனைவரும் இதற்கான ஒரு தெய்வீகக் காரணத்தைக் கண்டுபிடிக்க விரும்புகிறார்கள்.
இல்லை; இதுபோன்ற விஷயங்களில் நாம் நமது நேரத்தை வீணடிக்கக் கூடாது. தெய்வீகம் என்பது மற்றோர் அம்சம். இயற்பியல் நிகழ்வு என்பது இயற்பியல் விதிகளாலானது.

கடந்த சில நாட்களில் என்ன நடந்தது என்றால்… மனிஷா கொய்ராலா கூறியதுபோல், துரதிர்ஷ்டவசமாக, கடந்த 10 ஆண்டுகளில் நேபாள மக்கள் தொடர்ச்சியான தாக்குதல்களையும் பேரிடிகளையும் சந்தித்துள்ளனர். அவர்கள் அவற்றைத் தாங்கிக்கொண்டு, பல வழிகளில் மீண்டு வந்துள்ளனர்.
ஆனால் உண்மையில் பாதிக்கப்பட்டவர்கள் ஒருவேளை இப்போது செய்திச் சேனல்களில் இல்லாமல் இருக்கலாம்; அதற்காக அவர்களுடைய துயரம் மறைந்துவிடவில்லை. வீடுகள் அழிந்துள்ளன. உங்களுக்குப் பிரியமானவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் செய்தித்தாள்களில் இடம்பெறாமல் இருக்கலாம்; ஆனால் அவர்களை நேசிப்பவர்களின் இதயங்களிலிருந்து அவர்கள் நீங்கவில்லை. அந்த வலி மறைந்துவிடவில்லை.
எனவே, தத்துவங்களையோ சித்தாந்தங்களையோ மாய விளக்கங்களையோ கூறி, “ஒருவேளை இதுவெல்லாம் கடவுளின் சித்தமாக இருக்கலாம்” என்று சொல்லி மனிதத் துயரத்தை நாம் சிறுமைப்படுத்த வேண்டாம். இல்லை; இது ஒரு இயற்பியல் நிகழ்வு.

பனிப்பாறைச் சரிவால் பேரழிவு
இது பொருத்தமானது என்று நீங்கள் நினைத்தால், இதைப் பற்றி நான் மேலும் விரிவாகக் கூற முயல்கிறேன். உங்களில் பெரும்பாலோருக்கு இது ஏற்கெனவே தெரிந்திருக்கலாம்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோவின்) தகவலின்படி, பனிப் பாறை உருகியதன் காரணமாகச் சுமார் 2,000 அடி அகலமுள்ள ஒரு பனிப்பாறை மலையின் உச்சியிலிருந்து பிரிந்தது. அது மலை உச்சியின் பெரும் பகுதியையும் தன்னுடன் இழுத்துச் சென்றது.
அது, சுமார் 4,000 அடி செங்குத்து வீழ்ச்சியில் கீழே விழுந்து மோதியது. அதன் தாக்கம், ரிக்டர் அளவுகோலில் சுமார் 5.2 அலகுகள் பதிவாகும் நிலநடுக்கத்தைப் போன்ற அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அளவிலான தாக்கத்தை அது உருவாக்கியது.
இது நிகழ்ந்த விதத்தைப் போன்ற ஒரு பேரிடரை உலகின் வேறு எந்தப் பகுதியிலும் நாம் கண்டிருக்க மாட்டோம்.
சரி, இது ஏன் நிகழ்ந்தது? இதற்குக் காரணங்கள் இருக்கின்றன. அந்தப் பின்னணிக் காரணங்கள் ஒருவேளை தற்போதைய நமது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கலாம்; அது உண்மைதான். இங்கு அமர்ந்திருக்கும் உங்களுக்கும் எனக்கும் இதனுடன் நேரடித் தொடர்பு இல்லாமல் இருக்கலாம்.

உலக வெப்பமயமாதலும் போர்களும்
நீங்கள் காரைப் பயன்படுத்துவதால் புவி வெப்பமயமாதலில் என்ன தாக்கம் ஏற்படுகிறது என்பதை நமது சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் செயற்பாட்டாளர்களும் கணக்கிட்டு, காரைப் பயன்படுத்த வேண்டாம் என்றோ மின்சார வாகனத்திற்கு மாறுங்கள் என்றோ சொல்லிக்கொண்டிருக்கலாம். உங்கள் டீசல் அல்லது பெட்ரோல் கார் ஒரு பிரச்சினை என்கிறார்கள்.
நானும் அதைப் பற்றிச் சிந்திக்கிறேன். எனது மோட்டார் சைக்கிளை நான் இயக்க தொடங்கும் போதெல்லாம், தேவையானதைவிட ஒரு நிமிடம்கூட அதன் என்ஜினை இயக்கக் கூடாது என்று நினைப்பேன். சிறிய துளிகளாக நாம் இதில் பங்களிக்கிறோம் என்பதை நான் மறுக்கவில்லை.
ஆனால் அதே நேரத்தில், உலகில் ஏவுகணைகள் ஏவப்படுகின்றன. ஒரே ஓர் ஏவுகணை, 10 இலட்சம் மோட்டார் சைக்கிள்கள் அல்லது கார்களின் தாக்கத்துக்குச் சமமாக இருக்கலாம். முக்கிய நாடுகள் போர்களை நடத்துகின்றன. அந்தச் செயல்களின் தாக்கத்தையோ, உருவாகும் வெப்பத்தின் அளவையோ, அதனால் ஏற்படும் வெப்பநிலை உயர்வையோ உங்களால் கணக்கிட முடியாது.
ஐரோப்பாவில் இதுவரை இல்லாத அளவுக்கு வெப்பமான ஆண்டுகளில் இதுவும் ஒன்றாக இருப்பதாகக் கூறப்படுகிறது. அங்கு வெப்பநிலை 42 டிகிரி செல்சியஸாக இருந்தது. கடந்த 100 ஆண்டுகளில், 2027-ஆம் ஆண்டுதான் இதுவரை இருந்ததிலேயே மிக வெப்பமான ஆண்டாக இருக்கக்கூடும் என்று இப்போது கணிக்கிறார்கள்.

இத்தகைய சூழ்நிலையில் பனி உருகுவது ஓர் இயற்கை நிகழ்வு. அது நம்மை நோக்கி வருகிறது; அதுதான் நமக்குப் பேரிடராக மாறியுள்ளது. ஆனால் உண்மையான பேரழிவு என்னவென்றால், நாம் இந்தப் பூமியில் விழிப்புணர்வின்றி வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.

கயிலாய யாத்திரைக் குழுக்களின் கட்டுப்பாடு
இப்போது சுற்றுச்சூழல் குறித்தும் நமது விழிப்புணர்வு குறித்தும், அதை எப்படிச் சரிசெய்வது என்பது குறித்தும் நாம் பேசப்போவதில்லை. ஏனென்றால், இதுபோன்ற தருணத்தில் நான் உங்களுக்கு வேறொன்றைச் சொல்ல வேண்டும்.
கயிலாய யாத்திரைக்குச் செல்லும் நமது குழுக்களைப் பற்றியது இது. நான் முதன்முதலாக 2006-ஆம் ஆண்டு இங்கு வந்தபோது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 168 பேருடன் வந்தேன். அப்போது திபெத்தில் எங்களது பணிகளை மேற்கொண்டிருந்த உள்ளூர் ஷெர்பா குழுவினருக்கு அங்குள்ள சூழ்நிலைகள் மிகவும் கடினமாக இருந்தன.
அந்தப் பாதை முழுவதும் நாங்கள் சிறிய கூடாரங்களில்தான் வசித்தோம். எங்கும் ஒரு கழிப்பறைகூட கிடையாது; சாலைகளும் இல்லை. பாலைவனப் பகுதியில் நிலவிய கடுமையான சூழ்நிலைகளைக் கடந்து எங்களது வழியைக் கண்டுபிடித்துச் சென்றோம்.
வழக்கமாக எந்தக் குழுவிலும் 40 அல்லது 45 பேருக்கு மேல் இருக்க மாட்டார்கள். அத்தகைய குழுக்களில்கூட குறைந்தபட்சம் ஒன்று அல்லது இரண்டு ”உடல் பைகள்” (Body Bag) திரும்பி வரும் என்பது அங்கிருந்தவர்களிடையே ஒரு பெரிய நகைச்சுவையாக இருந்தது. “இந்தக் குழு எத்தனை உடல் பைகளுடன் திரும்பி வரும்?” என்று அவர்கள் தங்களுக்குள் நகைச்சுவையாகப் பேசிக்கொள்வார்கள்.
ஆனால், “என்ன நடந்தாலும் சரி, நாம் யாரையும் ஓர் உடலை கூட பையில் திருப்பி அழைத்துவரப் போவதில்லை.” என்கிற அந்த உறுதிமொழியை நான் எடுத்தேன்.
எங்களது குழுக்களில் அதீதமான கட்டுப்பாடுகளையும் கவனத்தையும் பயிற்சியையும் கொண்டு வந்தோம். எங்களது மருத்துவக் குழுக்கள், சமையல் குழுக்கள், தன்னார்வலர் குழுக்கள் ஆகிய அனைத்தும் ராணுவத்தைப் போல கட்டுப்பாட்டுடன் திட்டமிட்டு செயல்பட்டன.
இத்தனை ஆண்டுகளில் நாங்கள் ஒருவரைக்கூட அங்கே விட்டுவிட்டுத் திரும்பியதில்லை என்பதில் பெருமிதம் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நான் சொல்ல வேண்டியிருக்கிறது.. நாங்கள் 80 பேரை அங்கே விட்டுவிட்டுத் திரும்பி இருக்கிறோம்..

அந்த நாளில் காலை 9.05 முதல் 9.14 வரை…
20 ஆண்டுகளுக்கும் மேலாக எங்களுடன் இருக்கும் எங்கள் குழுத் தலைவர் பிரவீனிடமிருந்து செய்தியோ தொலைபேசி அழைப்போ வந்தது. அனைவரும் காலை 9.05 மணிக்குக் குடியேற்ற மையத்தில் ஆஜராகிவிட்டதாக அவர் கூறினார்.
அங்கு முதல் குழுவாக இருக்க வேண்டும் என்பது எங்களுடைய ஒருவித முட்டாள்தனமான ஒழுக்கம். திபெத்–நேபாள எல்லைக்கு இடையிலுள்ள குடியேற்ற மையத்தில் பெரும் குழப்பமும் நெரிசலும் இருக்கும். நீங்கள் சிறிது தாமதமாக வந்தாலும், எல்லையைக் கடந்து செல்ல மணிநேரங்கள் ஆகும். எனவே நாங்கள் முதல் குழுவாக இருக்க விரும்பினோம்.
அனைவரும் 9.05 மணிக்கு ஆஜராகிவிட்டதாக அவர் கூறியபோது, நான் “நல்லது” என்றேன்.
இப்போது, எங்களிடம் இவ்வளவு ஒழுக்கம் இல்லாமல் இருந்திருக்கக் கூடாதா என்று மட்டுமே நினைக்கிறேன். நாங்கள் அரை மணி நேரம் தாமதமாக அங்கு சென்றிருக்கக் கூடாதா என்று விரும்புகிறேன். ஆனால் நாங்கள் சரியான நேரத்திற்கு அங்கு சென்றோம். காலை 9.14 மணிக்கு அது தாக்கியது.
முதலில் வந்த படங்களைப் பார்த்தேன். அந்த வெள்ளம் சுமார் 35 முதல் 40 அடி உயரத்தில் இருந்தது.
நான், “இது பரவாயில்லை. நமது மக்கள் அனைவரும் குடியேற்ற மையத்தில்தான் இருக்கிறார்கள். ஒருவேளை வெள்ளம் அந்த மையத்தை மூழ்கடிக்கலாம். அவர்கள் தங்களது சாமான்கள், கடவுச்சீட்டுகள், ஆடைகள் ஆகியவற்றை இழக்கலாம். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை; ஆனால் அவர்கள் உயிருடன் இருப்பார்கள்” என்று நினைத்தேன்.

165 அடி உயரத்தில் வந்த பேரழிவு
அடுத்து வந்த படம், அது 165 அடி உயரம் என்பதை வெளிப்படுத்தியது. அப்போது, நேபாளப் பக்கத்தில் தண்ணீர் இருந்ததால் அங்கு உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக எனக்குத் தெரிந்தது.
ஆனால் திபெத் பக்கத்தில் இடிபாடுகள் இருந்தன. நன்கு கட்டப்பட்ட கான்கிரீட் கட்டிடம் இருந்த இடமே தெரியாமல் மறைந்துபோகும் அளவுக்கு, பல இலட்சம் டன் எடையுள்ள இடிபாடுகள் வந்து விழுந்தன.
சீன அரசாங்கமோ சீன ராணுவமோ அவர்களது பொறியாளர்களோகூட இதை முன்கூட்டியே கணித்திருக்க முடியாது. ஏனென்றால், கடந்த ஆண்டு பாலத்தை அடித்துச் சென்ற வெள்ளத்திற்குப் பிறகு புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடம் அது.
ராணுவப் பொறியாளர்கள் எதையாவது கட்டமைக்கும்போது, அனைத்து சாத்தியக் கூறுகளையும் ஆராய்ந்துதான் அதைச் செய்கிறார்கள். எனவே அந்த விஷயங்கள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.
ஆனால் இப்போது நிகழ்ந்திருப்பது அந்த அனைத்து வியூகங்களையும் மீறியது. பனிப்பாறைப் பனிக்கட்டியின் முக்கால்வாசிப் பகுதி, மலையின் உச்சியிலிருந்து 4,000 அடி கீழே விழும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை; இதற்கு யாரும் கணக்குப் போடவில்லை.

இது நேபாளத்தின் பிரச்சினை மட்டுமல்ல
ஆனால் அது இப்போது நடந்துவிட்டது. நாம் இதை எதிர்கொள்ள வேண்டும். ஏனென்றால், நேபாளம் போன்ற ஒரு சிறிய நாடு தானாகவே தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினை இது அல்ல.
அவர்கள் அடியை வாங்குவார்கள்; ஆனால் இந்தப் பிரச்சினைக்கான காரணம் வேறு எங்கோ இருக்கிறது. உலகம் முழுவதும் தொழில்மயமாக்கல் காலம் தொடங்கியதிலிருந்து வெப்பமயமாதல் அதிகரித்து வருகிறது.
இதன் பொருள் என்ன என்பதை ஓர் எளிய சமன்பாட்டின் மூலம் கூறுகிறேன்.

பூமியின் 3 நீர்த்தேக்கங்கள்
இந்தப் பூமியில் மூன்று வெவ்வேறு இடங்களில் நீர் சேமிக்கப்படுகிறது.
- முதலாவது பெருங்கடல். அனைவரும் பார்க்கக்கூடிய மிகப்பெரிய நீர்நிலை அது.
- 2-வது உலகம் முழுவதுமுள்ள மண்ணில் இருக்கும் மிகப்பெரிய நீர்த்தேக்கம். பூமியில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றாகச் சேர்த்தால்கூட, அவற்றில் இருப்பதைவிடக் குறைந்தது 800 மடங்கு அதிகமான தண்ணீரை மண் தன்வசம் வைத்துள்ளது.
- 3வது மலைகளில் பனியாக அல்லது உறைபனியாகச் சேமிக்கப்பட்டிருக்கும் நீர்.
பூமி நாளுக்கு நாள் அல்லது ஆண்டுக்கு ஆண்டு வெப்பமடையும்போது, மலைகளில் இருக்கும் அந்த நீர் பெருங்கடலைச் சென்றடைய முயல்கிறது.
அந்தப் பாதையில் யார் இருக்கிறார்களோ அவர்களை அது தாக்குகிறது. இப்போது அந்தப் பாதையில் இருப்பது நேபாளம்.
மற்றொரு விளைவாக, பெருங்கடல்களின் நீர்மட்டம் உயரும்; தீவு நாடுகளும் கடலோரப் பகுதிகளும் மூழ்கும். அடுத்த 25 ஆண்டுகளில் பூமியிலுள்ள 600-க்கும் மேற்பட்ட முக்கிய நகரங்கள் தண்ணீருக்குள் மூழ்கக்கூடும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
பனி உருகிச் செல்லும்போது நீரின் சமன்பாடு மாறுகிறது. மலையில் இருக்கும் நீர் பெருங்கடலுக்குச் செல்கிறது. வெப்பநிலை அதிகரிக்கும்போது, மண்ணில் இருக்கும் நீரும் நீராவியாகிப் பெருங்கடலுக்குச் செல்கிறது.
மலைகள், மண், பெருங்கடல் ஆகிய மூன்று வெவ்வேறு நீர்ச் சேமிப்புப் பகுதிகளிலுள்ள நீரும், வெப்பநிலை அதிகரிக்கும்போது இறுதியில் பெருங்கடலிலேயே வந்து சேர்கிறது. எனவே இந்த நிகழ்வு தொடரப்போகிறது.
நாம் தீக்குச்சியை உரசும்போது ஏற்படும் தாக்கத்தைக்கூட எண்ணலாம். ஆனால் உலகின் எல்லாப் பகுதிகளிலும் யாரோ ஒருவர் அணுகுண்டுகளை உருவாக்கிக்கொண்டே இருக்கிறார்.
இது யாரையும் சுட்டிக்காட்டிக் குற்றம்சாட்ட வேண்டிய நேரம் அல்ல. ஆனால் இவை அனைத்தும் மனிதச் செயல்பாடுகளின் காரணமாக நிகழ்கின்றன என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம். மனிதகுலமாக நாம் இதற்குத் தீர்வு காண வேண்டும்.

மரணத்தின் கனத்த மௌனம்
தற்போது நேபாளத்தில், நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்; என்ன வேண்டுமானாலும் பேசலாம்; நாம் எந்தத் தத்துவங்களை நம்புகிறோம் அல்லது என்ன அர்த்தமற்ற விஷயங்களை நினைக்கிறோம் என்பது எதுவாக இருந்தாலும்..மரணத்தின் கனத்த மௌனம் அங்கு நிலவுகிறது. அதை உங்களால் மாற்ற முடியாது. பறிபோன உயிர்களை உங்களால் மீட்டுக்கொள்ள முடியாது. அது நமது கைகளில் இல்லை. மரணம் என்பது கனத்த மௌனம்.
தற்போது எஞ்சியிருப்பது மீட்பு, நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு மட்டுமே என்பதை நாம் புரிந்துகொள்வது முக்கியம். மீட்புக்கான காலக்கெடு கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாக நான் நினைக்கிறேன். இப்போது நிவாரணமும் மறுசீரமைப்பும் மட்டுமே எஞ்சியுள்ளன.
எனவே நாம் உடனடியாக மீண்டும் கட்டியெழுப்ப வேண்டுமா? இன்னும் சற்றுச் சிந்திக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
நிவாரணம் உடனடியாக நடைபெற வேண்டும்; அது முக்கியம். மேலும், இத்தகைய தன்மையும் அளவும் கொண்ட பேரிடரை நேபாள அரசாங்கத்திடம் மட்டும் விட்டுவிடக் கூடாது. சர்வதேச அமைப்புகள் இதில் பங்கேற்பது முக்கியம். ஏனென்றால், இத்தகைய சூழ்நிலையை எந்த ஒரு தனி அரசாங்கத்தாலும் கையாள முடியாது.
அங்கு என்ன நடந்துள்ளது என்பதை நேரில் பார்த்தால், அது புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு இருக்கிறது.

இமயமலைக்கான பொதுவான நிர்வாக அமைப்பு
2015 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சராக இருந்த ஸ்ரீ அனில் தவே அவர்களுடன் இணைந்து, இந்தியாவின் தெற்கில் 5 மாநிலங்கள் வழியாகச் செல்லும் மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்காக ஒரு பொதுவான அமைப்பை உருவாக்க நான் பணியாற்றினேன்.
அங்கு வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு அரசாங்கங்கள் உள்ளன. ஒவ்வொருவரும் தங்கள் சொந்த வழிகளில் செயல்படுகிறார்கள். அப்போது நான், “நமக்கு ஒரு பொதுவான அமைப்பு தேவை” என்று கூறினேன்.
மலைகளுக்கு உங்களது அரசியல் ஈடுபாடுகள் தெரியாது. நீங்கள் பேசும் அர்த்தமற்ற விஷயங்களோ மொழிகளோகூட மலைகளுக்குத் தெரியாது.
இந்தியாவின் சுற்றுச்சூழல் அமைப்பு மேற்குத் தொடர்ச்சி மலைகளால்தான் நிலைத்து நிற்கிறது. நீங்கள் மேற்குத் தொடர்ச்சி மலைகளை வறண்டுபோகச் செய்தால், 20 ஆண்டுகளுக்குள் இந்தியா ஒரு பாலைவனமாக மாறிவிடும்.
இதன் அடிப்படையில், மேற்குத் தொடர்ச்சி மலை அமைப்புகளுக்குப் பொதுவான மேலாண்மை ஏற்படும் வகையில் ஓர் அமைப்பை அல்லது வாரியத்தை உருவாக்க வேண்டும் என்று கூறினோம்.
அதே நேரத்தில், இந்தியா, சீனா, பாகிஸ்தான், நேபாளம், பூடான் ஆகிய ஐந்து நாடுகளும் இணைந்து ஓர் இமயமலை வாரியத்தை உருவாக்க வேண்டும் என்றும் முன்மொழிந்தோம்.
உங்களால் இதை ஒரே அமைப்பாக நிர்வகிக்க முடியாவிட்டாலும்கூட, குறைந்தபட்சம் ஓர் அமைப்பாக ஒன்றிணைந்து கலந்தாலோசிக்க வேண்டும். நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் குறைந்தபட்ச ஒருங்கிணைப்பாவது இருக்க வேண்டும்.
ஏனென்றால், இமயமலை இந்தப் பூமியின் மிகவும் அற்புதமான, பிரம்மாண்டமான இயற்கை அம்சம். அதே நேரத்தில், அது மிக எளிதில் சேதமடையக்கூடிய, மிகவும் மென்மையான அமைப்பு.
இமயமலைத் தொடர் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஓர் அமைப்பு இப்போது உருவாக்கப்பட வேண்டும்.
நாம் செயல்படுவதற்கு இன்னும் என்ன நடக்க வேண்டும்? எவரெஸ்ட் சிகரம் முழுவதுமாக நமது தலைகள்மீது இடிந்து விழ வேண்டுமா?
ஓர் அமைப்பை உருவாக்க வேண்டிய நேரம் இது. அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும்கூட, எதிர்காலச் சந்ததியினருக்காகப் பாதுகாக்கப்பட வேண்டிய இயற்கை அம்சமாக மலைத்தொடர்களை நாம் பார்க்க வேண்டும். இதை இப்போதே செய்வது மிகவும் முக்கியம்.
இதைச் செய்யாமல், “அது நேபாளத்தின் பிரச்சினை; அவர்கள் தங்களுடைய பிரச்சினையைப் பார்த்துக்கொள்ளட்டும்” என்று நினைத்தால், ஒருபோதும் தீர்வு கிடைக்காது.
அரசாங்கத்திலும் சமூகத்திலும் தேவையான செல்வாக்கு உள்ள நீங்கள் அனைவரும் இதற்காக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்தியத் தரப்பிலிருந்தும் நாங்கள் இதற்காக அழுத்தம் கொடுப்போம்.
இந்தியா, நேபாளம், பூடான் ஆகியவற்றை ஒன்றிணைப்பது சற்றே எளிதானது. பொதுவான நிர்வாகம் இல்லாவிட்டாலும்கூட, குறைந்தபட்சம் ஒரு பொதுவான கலந்தாலோசனை முறை இருக்க வேண்டும் என்று இமயமலைப் பிராந்தியத்திடம் நாம் கூறினால், அதன்மூலம் சில தீர்வுகளைக் கண்டறிய முடியும்.

குடிமக்களின் பொறுப்பு
உங்கள் நாட்டின் குடிமக்களாக, ஆட்சியில் இருப்பவர்கள் இதை நினைவில் வைத்திருப்பதை நீங்கள் உறுதிசெய்ய வேண்டும். நீங்கள் ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அரசை நடத்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், எல்லாவற்றையும் அறிந்தவர்களாகச் சொர்க்கத்திலிருந்து குதித்து வந்தவர்கள் அல்ல. அவர்கள் உங்களைப் போன்றவர்கள்தான். எதையாவது செய்ய வேண்டும் என்ற பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்; அவ்வளவுதான். அதற்காக அவர்களுக்கு எல்லாமே தெரியும் என்று அர்த்தமல்ல.
மக்கள் ஒருவரையொருவர் சுட்டிக்காட்டிக் குற்றம்சாட்டாமல் முன்வந்து, “இது நிச்சயமாக நடக்க வேண்டும்” என்று கூற வேண்டும்.
இயற்கைக்கு எல்லைகள் இல்லை
எல்லைகளைப் பற்றிய நமது அரசியலும் கருத்துகளும், தேசியத்தைப் பற்றிய நமது எண்ணங்களும் மனிதர்கள் உருவாக்கிய பிரச்சினைகளே.
இமயமலையில் வாழும் மலை ஆடு உங்களுடைய எல்லைகளை மதிப்பதில்லை; அது எல்லா இடங்களிலும் தாவித் திரிகிறது. பறவைகளும் காற்றும் உங்களது தேசியத்தையோ நாட்டின் புனித எல்லைகளையோ பற்றிக் கவலைப்படுவதில்லை.
நாம் குடியேற்ற வரிசைகளில் நிற்கும்போது, பறவைகள் இந்த நாட்டிலிருந்து அந்த நாட்டிற்கும், அங்கிருந்து மீண்டும் இந்த நாட்டிற்கும் பறந்து செல்வதைப் பார்க்கிறேன். மனிதர்களாகிய நாம் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்கிறோம் என்பதை அவை நமக்குக் காட்டி கேலி செய்கின்றன.
நிர்வாக நோக்கங்களுக்காக அல்லது நாம் கையாள வேண்டிய சில நடைமுறை உண்மைகளுக்காக எல்லைகளை உருவாக்குவது சரியாக இருக்கலாம். ஆனால் அவை முழுமையானவை அல்ல.
“இது எனது பகுதி; அது உங்களுடைய இமயமலைப் பகுதி” என்று பூமியில் கோடுகளை வரைந்து பிரிக்கும் இந்த முட்டாள்தனம் ஒழிய வேண்டும். அப்போதுதான் நம்மால் ஒரு விரிவான தீர்வை நோக்கிச் செல்ல முடியும்.
இதனால் நாம் அனைத்தையும் தீர்த்துவிடுவோம் என்று அர்த்தமல்ல. குறைந்தபட்சம் நிலைமையைச் சற்று மேம்படுத்த முடியும். முழுமையான தீர்வு நமது கைகளில் இல்லை.
இந்த ஐந்து நாடுகளும் விழிப்புணர்வு பெற்று ஓர் அமைப்பை உருவாக்கி, தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்டு இமயமலையை ஒரே இயற்கை அலகாக நிர்வகித்தாலும்கூட தீர்வு முழுமையானதாக இருக்காது; ஆனால் நிலைமை சற்றுச் சிறப்பாக மாறலாம்.
மனிதர்களாக நம்மால் செய்யக்கூடியது இதுதான். நாம் நம்மைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டாலும், எத்தகைய மகாபுருஷர்கள் என்று கருதிக்கொண்டாலும், ஒரே கணத்தில் ஒரு டன் மண் நம்மை முடித்துவிட முடியும்.
நாம் இந்தக் கண்ணோட்டத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். உயிர்களாகிய நாம் இந்தப் பூமியில் மிகச் சிறிய உயிரினங்கள்தான். ஆனால் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால், இப்போது இருப்பதைவிடச் சற்றுச் சிறந்த முறையில் எதையாவது செய்ய முடியும்.
எனவே இமயமலையைத் தனித்தனி நாடுகளின் பகுதிகளாகப் பிரிக்காமல், ஒரே அலகாக நிர்வகிக்கும் சாத்தியக்கூறு மிகவும் முக்கியமானது.

மறுசீரமைப்பு எப்படி இருக்க வேண்டும்?
மக்கள் பெரும் துன்பங்களைச் சந்தித்திருப்பதால், புனரமைப்புப் பணிகள் நடைபெற வேண்டும். ஆனால் அவை முறையான சர்வதேசக் கலந்தாலோசனையுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உடனடியாக எதையாவது கட்டியெழுப்ப வேண்டும் என்ற உள்ளூர் நிர்ப்பந்தங்கள் இருக்கலாம். அந்தத் துடிப்பை நான் புரிந்துகொள்கிறேன்; மதிக்கிறேன். ஆனால் மறுசீரமைப்பு முறையான சர்வதேசக் கலந்தாலோசனையுடன் செய்யப்படுவது மிகவும் முக்கியம்.
மக்கள்தொகைப் பெருக்கமும் உயிர் வாழ்தலுக்கான அழுத்தமும் மக்களை எப்போதும் விளிம்புநிலைக்குத் தள்ளுகின்றன. ஒருவர் இங்கு வீடு கட்டுகிறார்; அடுத்தவர் அதற்கு அருகில் கட்டுகிறார்; மற்றொருவர் விளிம்பிலேயே கட்டுகிறார். இறுதியில் அது அடித்துச் செல்லப்படுகிறது.
நமக்கு எவ்வளவு மக்கள்தொகை மற்றும் பொருளாதார அழுத்தங்கள் இருந்தாலும், முறையான கலந்தாலோசனையுடன் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதைச் செய்வதற்கு முற்றிலும் சரியான வழி என்று எதுவும் இல்லை. ஆனால் நம்மால் இதைச் சற்றுச் சிறப்பாகச் செய்ய முடியும்; நிச்சயமாகச் சிறப்பாகச் செய்ய முடியும்.
எதிர்காலத்தில் பேரிடர்களையும் துன்பங்களையும் நம்மால் முழுமையாகத் தவிர்க்க முடியாவிட்டாலும், துயரத்தின் அளவைக் குறைக்க முடியும். அதை நிச்சயமாகச் செய்ய முடியும்.

நேபாளத்தைப் பேரிடர்களின் நாடாகச் சித்தரிக்க வேண்டாம்
இந்த அற்புதமான நாட்டின் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இன்று உங்களுடன் இங்கு இருக்கிறேன்.
மனிஷா கொய்ராலா ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல், “இது பேரிடர்களின் பூமி” என்ற ஒரு சித்திரத்தை நாம் வெளியில் உருவாக்கக் கூடாது. இது மிகவும் முக்கியமானது.
நேபாளத்தில் எத்தனை பேரிடர்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறித்து சர்வதேச ஊடகங்கள் தற்போது பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறேன். அடுத்த கட்டமாக, ஏதேனும் ஒரு நாடு “இது பயணம் செய்வதற்குப் பாதுகாப்பான இடமல்ல” என்று பயண எச்சரிக்கை வெளியிட்டுவிடலாம். அது நடக்கக் கூடாது.
அவர் குறிப்பிட்டதுபோல், பேரிடரால் நமது கால்கள் நசுக்கப்பட்டாலும், நமது தலையில் நாமே சுட்டுக்கொள்ளக் கூடாது. இது மிகவும் முக்கியமானது.
நேபாளம் பயணம் செய்வதற்கு ஏற்ற நல்ல இடம் என்பதையும், அது பேரிடர்கள் நிறைந்த நாடோ ஆபத்தான இடமோ அல்ல என்பதையும் நேபாள மக்கள் உலகிற்குக் காட்ட வேண்டும். நேபாளத்திற்கு வருவதாலேயே உங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடாது.

2027-லும் மீண்டும் வருவேன்
நான் உங்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். இந்த முறை எங்கள் குழுவிலிருந்த யாரிடமும் இதை நான் கூறவில்லை.
கயிலாயம் சென்றுவிட்டுத் திரும்பும்போது, “போதும். நான் 21 முறை கயிலாயத்திற்கு வந்துவிட்டேன். அடுத்த ஆண்டு வேறு ஏதாவது செய்வேன்” என்று மனதில் முடிவு செய்திருந்தேன்.
ஆனால் இப்போது, இந்த 80 பேரின் காரணமாக 2027-ஆம் ஆண்டிலும் நான் திரும்பி வர வேண்டியிருக்கிறது. நான் வருவேன்.
கயிலாய யாத்திரை, நேபாளத்தின் சுற்றுலாப் பொருளாதாரத்தில் மிக முக்கியமான ஒரு பகுதி. நாம் அதைத் தொடர வேண்டும்.
அதை மரணத்தைத் தேடிச் செல்லும் பயணமாக மாற்றிவிடக் கூடாது. அது அப்படிப்பட்ட பயணம் அல்ல. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பேரழிவு நிகழ்ந்துவிட்டது.
குடும்பத்தினரை இழந்தவர்களின் உணர்வுகள் அனைத்து விளக்கங்களையும் கடந்து நிற்கின்றன என்பதை நான் அறிவேன். அவர்களிடம் எதையும் விளக்கிச் சொல்லிப் புரியவைக்க முடியாது.
ஆனால் நம்மில் ஒவ்வொருவரும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்: கயிலாயம் செல்வது மரணத்தைத் தேடிச் செல்வதல்ல. அந்த யாத்திரை தொடர்ந்து நடைபெற வேண்டியது அவசியம்.
அது நமது கலாச்சாரத்திற்கும் நாகரிகத்திற்கும் முக்கியமானது. நேபாளத்தின் பொருளாதாரத்திற்கும் மிகவும் முக்கியமானது.

80 பேர் மாயம்.. செப்.3-ல் கால கர்மா நிகழ்வும், ரூ.1 கோடி நிவாரண நிதி
இதன் ஒரு பகுதியாக, செப்டம்பர் 3-ஆம் தேதி இந்த 80 பேருக்காக நாங்கள் கால பைரவ கர்மா அனுசரிக்க இருக்கிறோம்.
இந்தத் துயரத்தில் உயிரிழந்த வேறு நபர்களைப் பற்றிய விவரங்கள் உங்களுக்குத் தெரிந்தால், அவர்களுடைய பெயர்கள், புகைப்படங்கள், முடிந்தால் அவர்களது வாழ்க்கையுடன் தொடர்புடைய ஒரு தனிப்பட்ட பொருள் ஆகியவற்றை எங்களிடம் வழங்குங்கள். அந்த மக்களையும் கால கர்மா சடங்கில் இணைத்துக்கொள்ள இது உதவும்.
இந்த நிகழ்வு இந்தியாவிலுள்ள ஈஷா யோகா மையத்தில் நடைபெறும். நான் தனிப்பட்ட முறையில் அதில் கலந்துகொள்வேன்.
ஈஷா ஃபவுண்டேஷன் இந்தியாவுக்கு சில சட்டப்பூர்வ வரம்புகள் இருப்பதால், அங்கிருந்து நேரடியாக எங்களால் உதவ முடியாது. எனவே இன்று, ஈஷா நேபாளம் சார்பாகப் பிரதமர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக உறுதியளிக்கிறோம். அதன்பிறகு வேறு என்ன செய்ய முடியும் என்பதையும் பார்ப்போம். மிக்க நன்றி. இவ்வாறு சத்குரு பேசினார்.
