2027 மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் (Census 2027) பொதுமக்கள் தாங்களாகவே மொபைல், கணினியில் பதிவு செய்யும் (Self-Enumeration) வசதி, தமிழ்நாடு, திரிபுரா ஆகிய மாநிலங்களில் நேற்று ஜூலை 17-ந் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் (CM Vijay) தமது சுய விவரங்களை பதிவு செய்து இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவை தொடங்கி வைத்தார்.

இந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பு, சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள் தொகைக் கணக்கெடுப்பு. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்புக்குப் பிறகு 15 ஆண்டுகள் கழித்து இந்தக் கணக்கெடுப்பு நடைபெறுகிறது. இந்தக் கணக்கெடுப்பு மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-ன் கீழ் விரிவான டிஜிட்டல் கட்டமைப்புகளுடன் நடத்தப்படவுள்ளது.
மக்களின் தனிப்பட்ட தரவுகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய மொபைல் சாதனங்கள், சர்வர் நெட்வொர்க்குகளில் மூன்றடுக்கு பாதுகாப்பு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மோசடிகளைத் தவிர்க்க பொதுமக்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தமிழ்நாடு, திரிபுரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், அதிகாரப்பூர்வ சுய கணக்கெடுப்பு இணையதளமான se.census.gov.in மூலம் சுய கணக்கெடுப்பில் விவரங்களை பதிவு செய்யலாம்.
Census 2027: கேட்கப்படும் 33 கேள்விகள்:
- கட்டிட எண்: (நகராட்சி அல்லது உள்ளாட்சி நிர்வாகம் வழங்கிய எண் அல்லது கணக்கெடுப்பு எண்)
- கணக்கெடுப்பு வீட்டு எண்
- கணக்கெடுப்பு வீட்டின் தரைப்பகுதிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியப் பொருள்
- கணக்கெடுப்பு வீட்டின் சுவருக்கு பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியப் பொருள்
- கணக்கெடுப்பு வீட்டின் கூரைக்கு பயன்படுத்தப்பட்டுள்ள முக்கியப் பொருள்
- கணக்கெடுப்பு வீட்டின் பயன்பாட்டை உறுதி செய்தல்
- கணக்கெடுப்பு வீட்டின் நிலை
- குடும்ப எண்
- குடும்பத்தில் வழக்கமாக வசிக்கும் நபர்களின் மொத்த எண்ணிக்கை
- குடும்பத் தலைவரின் பெயர்
- குடும்பத் தலைவரின் பாலினம்
- குடும்பத் தலைவர் பட்டியல் சாதி/பழங்குடியினர் அல்லது பிற பிரிவைச் சேர்ந்தவரா?
- வீட்டின் உரிமை நிலை
- குடும்பத்தின் வசம் உள்ள குடியிருப்பு அறைகளின் எண்ணிக்கை
- குடும்பத்தில் வசிக்கும் திருமணமான தம்பதிகளின் எண்ணிக்கை
- குடிநீரின் முக்கிய ஆதாரம்
- குடிநீர் ஆதாரம் கிடைக்குமிடம்
- மின்சாரத்தின் முக்கிய ஆதாரம்
- கழிப்பறை வசதி உள்ளதா?
- கழிப்பறையின் வகை
- கழிவுநீர் வெளியேறும் வழி
- குளியல் வசதி உள்ளதா?
- சமையலறை மற்றும் எல்பிஜி/பிஎன்ஜி (LPG/PNG) இணைப்பு வசதி உள்ளதா?
- சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எரிபொருள்
- வானொலி/டிரான்சிஸ்டர் வசதி
- தொலைக்காட்சி வசதி
- இணையதள வசதி
- மடிக்கணினி/கணினி வசதி
- தொலைபேசி/கைபேசி/ஸ்மார்ட்போன் வசதி
- மிதிவண்டி/ஸ்கூட்டர்/மோட்டார் சைக்கிள்/மொபெட் வசதி
- கார்/ஜீப்/வேன் வசதி
- குடும்பத்தில் உண்ணப்படும் முக்கிய தானியம்
- கைபேசி எண் (மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்பான தகவல்தொடர்புகளுக்கு மட்டும்)
இப்பதிவைத் தொடர்ந்து உங்கள் மொபைல் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் வரும் சுய கணக்கெடுப்பு அடையாள எண்ணை தயாராக வைத்திருக்க வேண்டும். அடுத்தகட்ட களப்பயணத்தின்போது அதனை கணக்கெடுப்பாளரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
சந்தேகங்களும் பதில்களும்
மக்கள் தொகை கணக்கெடுப்பில் பங்கேற்பது கட்டாயமா?
ஆம், 1948-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ், கணக்கெடுப்பில் பங்கேற்பது கட்டாயமாகும். ஒவ்வொரு குடும்பமும் துல்லியமான தகவல்களை வழங்க வேண்டும்.
கேள்விகளுக்குப் பதிலளிப்பது கட்டாயமா?
ஆம், 1948-ஆம் ஆண்டின் சட்டப்பிரிவு 8-ன் படி, தனிநபர்கள் தங்களுக்குத் தெரிந்தவரை உண்மையான தகவல்களை வழங்க வேண்டும்.
கணக்கெடுப்பாளரிடம் ஏதேனும் ஆவணங்களைக் காட்ட வேண்டுமா?
இல்லை, எந்தவிதமான ஆவணச் சான்றுகளும் தேவையில்லை. நீங்கள் அளிக்கும் தகவல்களே பதிவு செய்யப்படும், ஆனால் அவை உண்மையானவையாக இருக்க வேண்டும்.
இந்த இணையதளம் எப்போது செயல்படும்?
இந்த இணையதளம் தினமும் காலை 6:00 மணி முதல் நள்ளிரவு 12:00 மணி வரை செயல்படும்.
சுய-கணக்கெடுப்பு செய்வதற்கு எத்தனை கேள்விகள் உள்ளன?
முதல் கட்டமான வீடுகள் கணக்கெடுப்பில் மொத்தம் 33 கேள்விகள் கேட்கப்படும்.
பதிவு செய்யும் முறை (Step-by-Step Guide) என்ன?
- முதலில், மக்கள் தொகை கணக்கெடுப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை (https://se.census.gov.in) உங்கள் மொபைல் பிரவுசரில் திறக்கவும்.
- இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள ‘Sign Up’ அல்லது ‘Registration’ பகுதிக்குச் செல்லவும். அங்கு உங்கள் மொபைல் எண்ணை உள்ளிடவும்.
- உங்கள் மொபைல் எண்ணிற்கு வரும் OTP-ஐ உள்ளிட்டு சரிபார்க்கவும். ஒரு குடும்பத்திற்கு ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.
- பதிவு செய்த பிறகு, கேட்கப்படும் 33 கேள்விகளுக்கான பதில்களை ஒவ்வொன்றாக உள்ளிடவும். (கேள்விகள் வீடு மற்றும் குடும்பத்தின் சமூக-பொருளாதார நிலை குறித்ததாக இருக்கும்).
- அனைத்து தகவல்களையும் உள்ளிட்ட பிறகு, அவை சரியாக உள்ளனவா என்று ஒருமுறை சரிபார்க்கவும். இறுதி சமர்ப்பிப்புக்கு (Final Submit) முன் மட்டுமே மாற்றங்களைச் செய்ய முடியும்.
- தகவல்களைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு தனித்துவமான ‘சுய-கணக்கெடுப்பு அடையாள எண்’ (SE ID) வழங்கப்படும். இதை குறித்து வைத்துக்கொள்ளவும்.
பதிவு செய்யும்போது எதை கவனத்தில் கொள்ள வேண்டும்?
- ஒரு குடும்பத்திற்கு ஒரே ஒரு மொபைல் எண் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
- குடும்பத் தலைவர் அல்லது குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் தகவல்களைப் பதிவு செய்யலாம்.
- பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை வேறு குடும்பத்தினர் பயன்படுத்த முடியாது.
தகவல்களைச் சமர்ப்பித்த பிறகு என்ன நடக்கும்?
படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு ஒரு தனித்துவமான சுய-கணக்கெடுப்பு அடையாள எண் (SE ID) வழங்கப்படும். கணக்கெடுப்பு அலுவலர் உங்கள் வீட்டிற்கு வரும்போது, இந்த அடையாள எண்ணைக் காட்டினால் போதும்; அவர்கள் தகவல்களைச் சரிபார்த்து உறுதி செய்வார்கள்.
தகவல்களைத் திருத்த முடியுமா?
இறுதி சமர்ப்பிப்புக்கு (Final Submit) முன் நீங்கள் தகவல்களைச் சரிபார்த்துத் திருத்தலாம். ஆனால், ‘ஃபைனல் சப்மிட்’ செய்த பிறகு, ஆன்லைனில் மாற்றங்கள் செய்ய முடியாது. அத்தகைய நேரங்களில் கணக்கெடுப்பு அலுவலர் நேரடியாக வீட்டிற்கு வரும்போது மாற்றங்களைக் கோரலாம்.
உதவிக்கு யாரைத் தொடர்பு கொள்வது?
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 குறித்த சந்தேகங்களுக்கு 1855 என்ற தேசியக் கட்டணமில்லா உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம்.
இதர மாநிலங்களில்?
கேரளத்திலும் நாகாலாந்திலும் வீட்டுப் பட்டியல், வீட்டுவசதி கணக்கெடுப்பின் களப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இவை 2026 ஜூலை 30-ம் தேதி வரை தொடரும்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டம் 29 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் நிறைவடைந்துள்ளது.

முதல்வர் விஜய் வேண்டுகோள்
தமிழ்நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை தொடங்கி வைத்த முதல்வர் விஜய் விடுத்த வேண்டுகோள்: அன்பார்ந்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கம்!
நம் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முக்கியமான மக்கள்தொகை கணக்கெடுப்பு இன்று தொடங்குகிறது. இது வெறும் எண்ணிக்கை இல்லை, நீங்கள் வழங்கும் தகவல்கள்தான் எல்லா திட்டங்களுக்குமான அடிப்படையாகும். எனவே, ஒவ்வொரு குடும்பமும் உண்மையான தகவல்களைக் கொடுங்கள்.
இணையவழியில் சுய கணக்கெடுப்பு (Self Enumeration) செய்யலாம் – நான் பதிவு செய்துள்ளேன்! உங்கள் தகவல்கள் ரகசியமாகப் பாதுகாக்கப்படும். வாங்க, எல்லோரும் சேர்ந்து இதை வெற்றிகரமாகச் செய்து முடிப்போம். மக்கள் நலனுக்காக மக்கள்தொகை கணக்கெடுப்பு! வணக்கம்!. இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
