இன்றைய காலகட்டத்தில் சிறிய பெட்டிக் கடைகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை, அனைத்துத் தரப்பு மக்களாலும் யுபிஐ (UPI) பணப் பரிவர்த்தனை முறை பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், கொரோனா பேரிடர் காலத்தில்தான் இது பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியது. இந்நிலையில் ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் யுபிஐ வணிகக் கட்டணத்தை மத்திய அரசு ரத்து செய்தது.இதன் மூலம் 24 மணி நேரமும் ஒரு வங்கிக் கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிற்கு நேரடியாகவும் மிக எளிதாகவும் பணத்தை அனுப்ப முடிகிறது.
இந்நிலையில், இந்தியாவில் கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ செயலிகள் மூலமாக மேற்கொள்ளப்படும் பணப் பரிவர்த்தனைகளுக்கு 5 முதல் 7 அடிப்படை புள்ளிகள் வரை புதிய கட்டணம் வசூலிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி மற்றும் தேசிய கொடுப்பனவு கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த புதிய வணிகர் கட்டணம் 0.05 சதவீதம் முதல் 0.07 சதவீதம் வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. உதாரணமாக, ஒரு கடையில் 10,000 ரூபாய் மதிப்பிலான வர்த்தகம் நடைபெறும் போது, அதற்கு அதிகபட்சமாக 5 ரூபாய் முதல் 7 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட வாய்ப்புள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம், இப்புதிய கட்டண முறை சாதாரண பொதுமக்களுக்கோ அல்லது ஒரு தனிநபர் மற்றொரு தனிநபருக்கு அனுப்பும் பணப் பரிவர்த்தனைகளுக்கோ முற்றிலும் பொருந்தாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. க்யூ.ஆர் கோடு மூலம் வணிக ரீதியாக மேற்கொள்ளப்படும் பெரிய அளவிலான பணப் பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே இந்தக் கட்டணத்தை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
