கோவை புத்தகத் திருவிழா ஜூலை 17-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்’ என்ற சுயசரிதை புத்தகம், பொள்ளாச்சியைச் சேர்ந்த ‘எதிர் வெளியீடு’ சார்பில் வெளியிடப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த புத்தகத்தின் தலைப்பில் திட்டமிட்டே “RSS” என்ற பெயரைப் பயன்படுத்தி, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர் என்று வழக்கறிஞர் சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்பெயருக்கும், கண்ணியத்திற்கும் களங்கம் விளைவிப்பதோடு, பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், எனவே இந்த புத்தகத்தை வெளியிட உடனடியாக தடை விதிக்க சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாநகர காவல் ஆணையரிடம் அவர் புகார் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து மின்னம்பலம் தரப்பில் வழக்கறிஞர் சண்முகத்திடம் பேசுகையில், “எழுத்தாளர் நலங்கிள்ளி தான் ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர் என்கிறார். அட்டைப் படத்தில் ஆர்.எஸ்.எஸ் என்ற பெயர் உள்ளது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் ஆவணங்களை பரிசீலனை செய்ததில் அவர் உறுப்பினர் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து நாங்கள் புகார் அளித்துள்ளோம். காவல்துறை தமிழகத்தில் நன்றாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்கள் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, ‘ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்’ புத்தகத்தின் எழுத்தாளர் நலங்கிள்ளியை மின்னம்பலம் சார்பில் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. ஒரு புத்தகத்தின் அட்டைப் படத்தை மட்டும் பார்த்துவிட்டு தடை செய்ய வலியுறுத்துவது எந்த வகையில் நியாயம்? நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்தது உண்மை. பாபர் மசூதியை இடிக்க வேண்டும் என்று இந்துத்துவா காரணங்களுக்காகச் செயல்பட்டதும் உண்மை. பெரியாரைப் படித்த பின்னர் படிப்படியாக மாறி வந்ததும் உண்மை. உண்மைக்குப் புறம்பாக நான் எதுவுமே எழுதவில்லை.
குறிப்பாக, பெரியாரின் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற முழக்கம்தான் நான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வெளியே வர காரணமாக இருந்தது. நான் தீவிர பாரதப் பற்றுடன் இருந்தேன்; இந்துத்துவா ஆதரவாளராக இருந்தேன். என்னைப் பெரிய அளவில் மாற்றியது தமிழ்நாடு தமிழருக்கே என்கிற பெரியாருடைய முழக்கமும் தனித்தன்மை குறித்த புரிதலும்தான்” என்றார்.
புத்தகம் திட்டமிட்டபடி வெளியாகுமா என்ற கேள்விக்கு, “இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. காவல்துறை தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் போவதாக அவர்கள் சொல்லியுள்ளனர். நீதிமன்றம் என்ன செய்யும் என்று தெரியவில்லை. ஆனால் அந்த வழக்கு எப்படியும் நிற்காது. ஏனென்றால் புத்தகத்தில் அவதூறாக எதுவும் இல்லை” என்றார்.
இது குறித்து மின்னம்பலம் தரப்பில் எதிர் வெளியீடு பதிப்பாளர் அனுஜ்-யிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,, “இதுவரை புத்தகம் வெளியாகவில்லை. புத்தகத்தின் அட்டைப் படம் மட்டுமே வெளியாகியுள்ளது. அதைப் பார்த்துதான் இவர்கள் பதற்றமடைகிறார்கள். இந்த புத்தகத்தை இதுவரை படித்தவர்கள் 4 பேர் மட்டும்தான். புத்தகத்தை எழுதிய எழுத்தாளர், பதிப்பாளர் என்ற முறையில் நான் மற்றும் பிழை திருத்தியவர்கள் இருவர் மட்டுமே புத்தகத்தைப் படித்துள்ளோம். அப்படி இருக்கும்போது, அட்டைப் படத்தை மட்டும் பார்த்துவிட்டு தடை விதிக்க வேண்டும் என்று சொல்வது நியாயம் இல்லை.
புத்தகம் வெளியான பிறகு அதைப் படித்துவிட்டு, நீங்கள் அதில் இருந்து மாறுபட்டால் அதற்குப் பதில் அளிக்கும் வகையில் புத்தகமாகத்தான் எழுத வேண்டும். இது ஜனநாயக நாடு. கருத்துரிமையைப் பாதுகாக்கும் நாட்டில் புத்தகத்தையே வெளியிடக் கூடாது என்று சொல்ல முடியாது. சர்வாதிகார நாட்டில் தான் இதுபோல நடக்கும்; அங்கேகூட புத்தகம் வெளியாகி வாசித்த பிறகுதான் நடவடிக்கை எடுப்பார்கள். தங்களது புகாரில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிராக அவதூறாக உள்ளது என்கிறீர்கள்; இந்த முன் முடிவுக்கு நீங்கள் எப்படி வந்தீர்கள்? பெரியாருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் தரப்பில் எழுதப்படும் புத்தகங்களுக்கு பெரியாரியவாதிகள் தடை விதிக்கச் சொல்ல முடியுமா? சொல்லவும் மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.
