தமிழகத்தில் அதிக செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் கலர் அப்பள விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
தமிழகத்தில் கடைகள், சந்தைகள் மற்றும் பொருட்காட்சிகளில் குழந்தைகளைக் கவரும் வகையில் விற்கப்படும் வண்ண அப்பளங்களில் ஆபத்தான ரசாயன நிறமூட்டிகள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இனி கலர் அப்பளங்களை விற்பனை செய்ய உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
இந்த வகை அப்பளங்களை குழந்தைகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அலர்ஜி முதல் சிறுநீரக பாதிப்பு மற்றும் புற்றுநோய் போன்ற கொடிய நோய்கள் வர வாய்ப்புள்ளது. ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்படும் இந்த அப்பளங்கள் மக்களின் உயிருக்கே ஆபத்தானது. குழந்தைகளிடையே கவனச்சிதறலை ஏற்படுத்த கூடும் என்பதால், இவற்றின் விற்பனைக்கு உணவு பாதுகாப்புத்துறை தடை விதித்துள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களின் குழந்தைகளுக்குக் கண்ணைக் கவரும் கலர் அப்பளங்களை வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும், அதற்குப் பதிலாகப் பாரம்பரிய முறையில் உளுந்து மற்றும் அரிசியைக் கொண்டு தயாரிக்கப்படும் தரமான அப்பளங்களை மட்டுமே வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்றும் உணவு பாதுகாப்புத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
