முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சியைக் கவிழ்க்க நடந்ததாக கூறப்படும் சதி மற்றும் மாநிலத்தில் நடந்து வரும் அனைத்து குதிரை பேரங்கள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜூலை 16-ந் தேதி விசாரிக்கிறது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா, கடந்த ஜூன் 29-ந் தேதி, சென்னை காவல் ஆணையரிடம் ஒரு புகார் அளித்தார். அதில், சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகருக்கு எதிராகக் கொண்டுவரப்படவிருந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க, தன்னிடம் ரூ. 35 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாகக் குறிப்பிட்டிருந்தார்.
‘இந்தியன் பொலிட்டிக்கல் டெமாக்ரடிக் ஸ்ட்ராட்டஜிஸ்’ (IPDS) என்ற அமைப்பின் சார்பில் பேசுவதாகக் கூறி, திருநாவுக்கரசு என்பவர் தன்னைத் தொடர்புகொண்டு இந்த பேரம் பேசியதாகவும், அதற்கு மறுப்பு தெரிவித்தபோது தன்னையும் தனது குடும்பத்தினரையும் மிரட்டியதாகவும் அவர் புகாரில் தெரிவித்திருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஜூன் 30-ந் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை திருநாவுக்கரசு, நரேஷ், தியாகராஜன், கிருஷ்ணன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் குமார் ஆகியோரின் தூண்டுதலின் பேரிலேயே இந்த லஞ்ச பேரம் நடந்ததாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் ஆகியோருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் முன்ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் திருப்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜே.பாலசுப்பிரமணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், “ ஊத்தங்கரை தொகுதி எம்எல்ஏ இளையராஜாவின் புகாரின் பேரில் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் திருவல்லிக்கேணி போலீசார் ஏன் தலையிட வேண்டும்? காவல்துறையின் விசாரணையில் அரசியல் தலையீடு இருக்கலாம். திட்டமிட்டே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மாநிலத்தில் நடைபெறுவதாகக் கூறப்படும் பிற குதிரை பேர விவகாரங்களையும் சேர்த்து முழுமையாக சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் அடங்கிய முதல் அமர்வு இன்று ஜூலை 16-ந் தேதி விசாரிக்கிறது.
