பழனியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி விவகாரத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்பவரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர்.
பழனி கோவில் நில பத்திரப் பதிவு மோசடியில் தமது உறவினர்களுக்கு தொடர்பிருப்பதாக சமூக வலைதளங்களில் பதிவிடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ரமேஷ் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமைச்சர் ரமேஷ் குறித்து அவதூறு பரப்பியதாக வினோத் சூர்யகுமார் என்பவரை சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்திராணி சுடலைமுத்து, பூர்ணிமா சந்திரசேகர் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
