பழனியில் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள கோயில் நிலம் தனியார் பெயரில் பதிவு செய்யப்பட்டதை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
பழனி தண்டாயுதபாணி கோயில் மடத்திற்குச் சொந்தமான இடத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கி 2026 ஏப்ரல் மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, கோயில் செயல் அலுவலர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், “சம்பந்தப்பட்ட இடம் தொடர்பாக ஏற்கனவே உரிமையியல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தனி நீதிபதி முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கோயிலின் தக்கார் எதிர் மனுதாரராகச் சேர்க்கப்படவில்லை.
எனினும் கோயில் நிலத்தைப் பதிவு செய்யத் தனி நீதிபதி அனுமதி வழங்கியிருக்கிறார். தண்டாயுதபாணி கோயில் மடத்துக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பத்திரப்பதிவு செய்ய அனுமதி வழங்கிய உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்” என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வில் இன்று (ஜூலை 15) விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், ”கோயில் நிர்வாகத்தை எதிர் மனுதாரராகச் சேர்க்காமலும், அரசு தரப்பில் நீதிமன்றத்தில் முழு விவரங்களை தெரிவிக்காமலும் உத்தரவு பெறப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிலத்தைப் பத்திரப்பதிவு செய்ய வேண்டாம் என்று கோயில் நிர்வாகம் சார்பில் பதிவுத்துறைக்குத் தெரிவிக்கப்பட்ட போதும் நிலத்தைப் பதிவு செய்யச் சார்பதிவாளருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகச் சார்பதிவாளர் விடுப்பு எடுத்துச் சென்ற நிலையில் பொறுப்பு பதிவாளர் நியமிக்கப்பட்டு, முறைகேடாக இந்த பத்திரப்பதிவு நடந்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதிகள், “நிலத்தைப் பதிவு செய்வதற்கு முன் கோயில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பி கருத்துக் கேட்டிருக்க வேண்டும்.
சொத்து தொடர்பாக வழக்குகள் நிலுவையில் உள்ளதா என்பதைச் சார் பதிவாளர் தரப்பில் தனி நீதிபதியிடம் தெரிவித்திருக்க வேண்டும்.
இவற்றையெல்லாம் மேற்கொள்ளாமல் உண்மையை மறைத்து தனி நீதிபதியிடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளனர்.
கோயில் நிர்வாகத்திற்குத் தகவல் தெரிவிக்காமல், நோட்டீஸ் அனுப்பி கருத்துக் கேட்காமல் சார்பதிவாளர் பத்திரப்பதிவு செய்துள்ளார் என்பதால் பழனி சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரப்பதிவு செல்லாது. முழு தகவல்களையும் தெரிவிக்காமல் தனி நீதிபதி தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்பதால் தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது” என்று உத்தரவு பிறப்பித்தனர்.
