ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்க்) அமைப்பைக் குறித்து அவதூறு கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் புத்தகத்திற்குத் தடை விதிக்கக் கோரி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை புத்தகத் திருவிழா வருகின்ற 17ம் தேதியன்று துவங்க உள்ளது. இதில் மதுரையைச் சேர்ந்த எழுத்தாளர் நலங்கிள்ளி எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ் பிராமணன் பெரியாரிஸ்ட் ஆனேன்’ என்ற சுயசரிதை புத்தகம் பொள்ளாச்சியை சேர்ந்த எதிர் வெளியீடு சார்பில் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் தொடர்ந்து இயங்கி வரும் சண்முகம் என்ற வழக்கறிஞர் மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் முனைவர் ஆர். சண்முகம் என்பவர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், “RSS Brahmin Became a Periyarist” என்ற தலைப்பிலான புத்தகம் ஒன்று வரும் ஜூலை 17-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இந்த நூலின் ஆசிரியருக்கும் ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. எனவே, அந்த அமைப்பைப் பற்றி அதிகாரப்பூர்வமாகக் கருத்துத் தெரிவிக்க அவருக்கு எந்தத் தகுதியும் கிடையாது.
புத்தகத்தின் தலைப்பில் திட்டமிட்டே “RSS” என்ற பெயரைப் பயன்படுத்தி, பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இத்தகைய வெளியீடு ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நற்பெயருக்கும், கண்ணியத்திற்கும் களங்கம் விளைவிப்பதோடு, பொதுமக்களிடையே தவறான எண்ணத்தை உருவாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் அமைந்துள்ள இந்த நூலின் வெளியீடு மற்றும் விநியோகத்தை உடனடியாகத் தடுக்க சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த புகார் மனுவில் வழக்கறிஞர் ஆர். சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
