கூடங்குளம் அணு உலையின் அதிமுக்கிய வரைபடங்கள்- டார்க் வெப்பில் லீக்! ரிலையன்ஸ் ஷாக்!

Published On:

| By Mathi

Kudankulam Nuclear Plant’s Sensitive Blueprints Leaked

நாட்டின் அதிமுக்கியமான தமிழகத்தின் கூடங்குளத்தில் (Kudankulam) அமைந்துள்ள அணு உலைகளின் முதன்மையான வரைபடங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சட்டவிரோத செயல்களுக்கான டார்க் வெப் (Dark Web) இணையப் பக்கங்களில் ஹேக்கர்ஸ் பகிர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிட்டல் கொள்ளையர்களாக கருதப்படும் ரான்சம்வேர் கும்பல், நவீன கணினி தொழில்நுட்பங்கள் மூலம் பெருநிறுவனங்களின் தரவுகளை ஹேக்கிங் செய்து அந்நிறுவனங்களை மிரட்டி பணம் பறிக்கிறது. இந்த ரான்சம்வேர் கும்பல், டார்க் வெப் பக்கங்களில்தான் இத்தகைய தரவுகளை வெளியிடுகிறது.

ADVERTISEMENT

தற்போது ரிலையன்ஸ் குழுமத்தின் சர்வர்களை ஹேக் செய்து முக்கியமான ஆவணங்களை ”வேர்ல்ட் லீக்ஸ்” (World leaks) என்ற ரான்சம்வேர் கும்பல், டார்க் வெப்பில் பகிர்ந்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் 8.5 லட்சம் ஆவணங்களில் அதிமுக்கியமானவை 19,000 என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த 19,000 கோப்புகளில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் வரைபடங்கள் உள்ளிட்டவையும் உள்ளனவாம்.

ADVERTISEMENT

ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் 2018-ல் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4-வது அலகுகளுக்கான உள்கட்டமைப்பை வடிவமைக்கவும் கட்டவும் ஒப்பந்தம் பெற்றது. இந்த அலகுகள் 2027-க்குள் செயல்பாட்டுக்கு வந்து, தலா 1,000 மெகாவாட் என மொத்தம் 2,000 மெகாவாட் மின்சாரத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டார்க் வெப் இணைய தளத்தின் ஆவணங்களை பகுப்பாய்வு செய்த ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம், “இந்த ஆவணங்கள் அனைத்தும் 2016-ம் ஆண்டு முதல் 2025-ம் ஆண்டு வரையிலானவை; வரைபடங்கள், கூடங்குளம் அணு உலை கட்டுமான கூட்டங்களின் குறிப்புகள், அணு உலை கட்டுமானத்துக்கான தளவாடங்கள் உள்ளிட்டவை பற்றிய விவரங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

டார்க் வெப்பில் வெளியாகி இருக்கும் கூடங்குளம் அணு உலை தொடர்பான ஆவணங்கள்

  • கூடங்குளம் அணு உலையின் 3, 4-வது அலகுகளில் பயன்படுத்தப்படும் காற்றோட்டம் மற்றும் குளிர்விக்கும் அமைப்புகளின் வரைபடங்கள்
  • “பொதுக் கட்டுப்பாட்டு அறையின்” (common control room) முழுமையான தள அமைப்பு
  • அணுமின் கழகம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் கூட்டங்கள்
  • தளவாடங்களின் புகைப்படங்கள்
  • பயங்கரவாதச் செயல்களால் பாதிப்பு ஏற்பட்டால் $112 மில்லியன் காப்பீட்டுத் தொகை பெறுவதற்கான ஒப்பந்தம் உள்ளிட்ட ஆவணங்கள் ரிலையன்ஸ் சர்வரில் இருந்து ஹேக்கிங் செய்யப்பட்டு டார்க் வெப்பில் வெளியாகி இருக்கிறது.

நாட்டின் முன்னணி தரவு மையமான யோட்டா (Yotta), ”கடந்த மே 29-ந் தேதி ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சருக்குச் சொந்தமான கணினிகளின் சர்வரில் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கவனித்தோம்; அது உடனடியாகத் தடுக்கப்பட்டது. அதேநேரத்தில் ஜூன் மாத இறுதியில் ரிலையன்ஸ் தரப்பில் இருந்து தரவு மீறல் நடந்ததாகத் தகவல் கிடைத்தது” என தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணுமின் சக்தி கழகம் (NPCIL) தற்போது ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஆலோசனை நடத்தி வருகிறது. இந்தியாவின் முதன்மை சைபர் பாதுகாப்பு முகமையான ‘CERT-In’ (Computer Emergency Response Team – India) இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share