பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நில பத்திரப் பதிவு மோசடியில் என்ன நடந்தது? என்பதை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் ரமேஷ் இன்று ஜூலை 14-ந் தேதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: பழனி கோவில் நிலத்தைப் பொறுத்தவரைக்கும் ஏற்கனவே பலமுறை அந்த இடத்தை யாருக்கும் ரிஜிஸ்டர் செய்யக் கூடாது என்று பழனி முருகன் கோவில் இணை ஆணையர் மூலமாக சார் பதிவாளர் அலுவலகம், மாவட்ட பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன. 15.9.2025; 16.11. 2025 தேதிகளில் இத்தகைய கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதை மீறி கடந்த மார்ச் 27-ந் தேதி அதே நிலத்தை மீண்டும் பத்திரப் பதிவு செய்ய முயற்சி மேற்கொண்டனர். மோசடியான பத்திரம் மூலம் இந்த பத்திர பதிவு முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் அப்போதைய சார் பதிவாளர் பத்திரப் பதிவு செய்ய மறுத்து ”ரெஃப்யூசல் ஸ்லிப்” வழங்கினார். இந்த ஸ்லிப் ஏப்ரல் 1-ந் தேதி கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து மோசடியாக பத்திரப் பதிவு மேற்கொள்ள முயற்சித்த நபர்கள் நீதிமன்றத்துக்கு சென்று ஏப்ரல் 10-ந் தேதி, நீதிமன்ற உத்தரவு ஒன்றை பெற்று வந்தனர். அந்த உத்தரவில், “ஆவணங்களை சரி பார்த்து சரியாக இருக்கும் நிலையில் பத்திரப் பதிவு செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதாவது Can be considered என்பதுதான் உத்தரவு. இதனையும் 1 வாராத்தில் செயல்படுத்த வேண்டும் என்கிறது நீதிமன்ற உத்தரவு.
இந்த நீதிமன்ற உத்தரவை வைத்துக் கொண்டு ஜூலை 3-ந் தேதி பழனி சார் பதிவாளர் அலுவலரிடம் சென்றனர்.

ஆனால், ஜூலை 2-ந் தேதியே, பழனி கோவில் இணை ஆணையர், மேற்படி நிலத்தை பதிவு செய்யக் கூடாது என மீண்டும், சார் பதிவாளரிடம் கடிதம் கொடுத்தார். அதனால் ஜூலை 3-ந் தேதியும் பத்திரப் பதிவு நடைபெறவில்லை.
தமிழக அரசு, சார் பதிவாளர்களை ஜூலை 1-ந் தேதி பணியிடம் மாற்றம் செய்திருந்தது. அதனடிப்படையில் புதிய சார் பதிவாளர், பணியில் சேர வேண்டும். ஆனால் அப்புதிய சார் பதிவாளர் பணியில் சேராமல் இருந்தார்.
அதற்காக வேறொருவர் சார் பதிவாளராக பொறுப்பேற்றார். அவர்தான் ஜூலை 3-ந் தேதி இந்த பத்திரப் பதிவை செய்ய மறுத்துவிட்டார்.
அந்த பொறுப்பு பத்திரப் பதிவாளர் விடுப்பில் சென்ற நிலையில் மற்றொரு சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், ஜூலை 6-ந் தேதி சார் பதிவாளராக பழனியில் பணியாற்றினார். அவரிடமும் இதே போல பத்திரப் பதிவு செய்ய மேற்படி நபர்கள் முயற்சித்தனர். அவர் இந்த பத்திரப் பதிவின் பின்னணி குறித்து தெரியாமல், பத்திரப் பதிவு செய்துவிடுகிறார்.
இந்த பத்திரப் பதிவு விவரம் தெரிந்த உடன் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள், இது சட்டவிரோதமானது என தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பினர்.
தற்போது அந்த பத்திரப் பதிவை ரத்து செய்ய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இன்றைய விசாரணையில் இந்து சமய அறநிலையத்துறையும் ஒரு தரப்பாக வழக்கில் இணைந்திருக்கிறது. இவ்வழக்கில் நாளையும் விசாரணை நடைபெற உள்ளது.
மோசடியாக பத்திரப் பதிவு செய்யப்பட்ட நிலத்தை நாம் மீட்க இருக்கிறோம். இதில் யாருக்கும் சந்தேகமே தேவை இல்லை.
அத்துடன் பத்திரவுப் பதிவு துறை அமைச்சரும் துறை சார்ந்து அந்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை உடனடியாக பணியிடை நீக்கம் செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இத்தகைய அரசின் சட்டப்படியான நடவடிக்கைகள் தெரியாமலேயே என் மீதும் அரசு மீதும் அவதூறு பரப்புகின்றனர். இந்த அரசு மீது எப்படியாவது ஊழல் கறையை படிய வைக்க முயற்சிக்கின்றனர்.
அத்துடன் மோசடியாக பத்திரப் பதிவு செய்தவர்கள் என்னுடைய உறவினர்கள் எனவும் பொய்த் தகவலை பரப்புகின்றனர். அப்படியான உறவினர் ஒருவர் எனக்கு இருந்தால் நிரூபித்து காட்ட வேண்டும்.
என் மீது அவதூறு பரப்பியவர்கள் குறித்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோசடியாக பத்திரப் பதிவு செய்த நபர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எங்களுக்கு மடியில கனம் இல்லை, வழியில பயம் இல்லை. கோயில் நிலங்களை பொறுத்தவரைக்கும், ஒரு அடி நிலம் கூட யாருக்கும் கொடுப்பதற்கு நாங்க தயாராக இல்லை. கோயில் நிலங்களை பொறுத்தவரைக்கும், இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மீது நேர்மையாக, துரிதமாக, சட்டப்படி அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
