பழனியில் ரூ.100 கோடி கோவில் நில மோசடி- சார் பதிவாளர் அதிரடி சஸ்பெண்ட்!

Published On:

| By Mathi

Sub-Registrar Suspended Over Rs. 100 Crore Land Scam in Palani

பழனியில் ரூ.100 கோடி மதிப்பிலான கோவில் நிலத்தை முறைகேடாக பதிவு செய்த புகாரில் சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

பழனி அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள சுமார் 1.40 ஏக்கர் நிலம், அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருமடத்திற்குச் சொந்தமானது. இது 1888-ம் ஆண்டு அறக்கட்டளை பத்திரத்தின்படி மடத்தின் பராமரிப்பு மற்றும் வழிபாட்டுத் தேவைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலமாகும்; இதை விற்பனை செய்யவோ அல்லது மாற்றம் செய்யவோ கூடாது எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த நிலம் பழனிக்கு வரும் பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான வாகன நிறுத்தமாக (Parking lot) பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலத்தை, தனிநபர்கள் சிலர் போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி, நீதிமன்ற உத்தரவுகளையும் மீறித் தங்கள் பெயருக்குப் பத்திரப்பதிவு செய்துள்ளனர். சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம், வெறும் 2 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது போன்ற மோசடி ஆவணங்கள் தயார் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

இந்த நிலம் மடத்திற்குச் சொந்தமானது என்பதையும், இதைத் தனியார் நிலமாகக் கருத முடியாது என்பதையும் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் மற்றும் அறநிலையத்துறை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளன.

இதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறையின் புகாரின் பேரில், பழனி அடிவாரம் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் அதிகாரிகள் மீது மோசடி, ஆவண மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் மோசடியாக பத்திரப் பதிவு செய்த சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கொடைக்கானல் பத்திரப் பதிவு அலுவலரான ஜஸ்டின் மணிகண்டன், ஒரே ஒரு நாள் மட்டும் பழனி சார்பதிவாளராக பணியாற்றி இந்த பத்திரப் பதிவு மோசடியில் ஈடுபட்டது அம்பலமாகி உள்ளது.

மோசடியின் பின்னணி

முன்னதாக பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் இணை ஆணையர்/செயல் அலுவலர் செ.மாரிமுத்து, பழனி 1-ம் எண் இணை சார் பதிவாளர் அலுவலகத்துக்கு இந்த மோசடி தொடர்பாக அனுப்பிய கடிதம்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகரம், வார்டு எண்.3, பிளாக் எண். 25 நகரப்புல எண். 998 மற்றும் 999-ல் (தற்போதைய பழனி நகர், வார்டு எண்.3, பிளாக் எண் 25 நகர நில அளவை எண். 2) உள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலம் ஆதியில் பாலசமுத்திரத்தினைச் சார்ந்த குப்புச்சாமி மணியகாரருக்குப் பாத்தியப்பட்டிருந்தது. அவர் தண்டபாணி சுவாமி என்பவருக்கு ஆவண எண். 785 நாள். 26.04.1888-ன் படி ஒரு தர்ம சாசனத்தின் மூலமாக மடம் கட்டவும், அதில் இந்து மத கோட்பாடுகளைப் பரப்பவும், அனுசரிக்கவும் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மேற்படி மடத்தினை பல்வேறு நபர்களால் மேற்கண்ட கோட்பாடுகளின்படி அபிவிருத்தி செய்யப்பட்டு கட்டிடங்கள் கட்டி பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்கும் அதிலுள்ள கோயிலில் பூஜை செய்வதற்கும் தர்ம சாசனத்தின்படி நிர்வாகம் செய்யப்பட்டுள்ளது.

மேற்படி இடத்தில் உள்ள வருமானத்தினை மேற்படி மடப்பராமரிப்பு மற்றும் பூஜை, கைங்கரிய செலவு ஆகியவைகளுக்கே செய்து வரவும், அந்த சொத்துக்களை எவருக்கும் விற்பதற்கோ, வில்லங்கப்படுத்துவதற்கோ உரிமை கொடுக்கப்படாத நிலையில் மேற்படி சொத்து அறக்கட்டளை சொத்தாகும். அறக்கட்டளை சொத்தை தனிப்பட்ட சொத்தாக கருதி எவரும் விற்பனை செய்ய இயலாது. இந்நிலையில் திரு.தண்டபாணி ஐயா என்பவரால் மேற்படி சொத்து தனிநபர்களுக்கு விற்பனை செய்யப்பட்டதால் மேற்படி கட்டளையினை பாதுகாக்கும் பொருட்டு சொத்துக்களை மீட்கும் பொருட்டு பார்வை 1-ல் காணும் உத்தரவின் படி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் இணை ஆணையர்/செயல் அலுவலர் இம்மடத்தின் தக்கராக நியமனம் செய்யப்பட்டு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து திரு.தண்டபாணி ஐயா என்பவரால் இம்மடத்தின் தக்கராக இணை ஆணையர்/செயல் அலுவலர் நியமிக்கப்பட்ட உத்தரவினை நீக்கம் செய்ய வலியுறுத்தி பார்வை 2-ல் காணும் நீதிப்பேராணை மனுவானது தாக்கல் செய்யப்பட்டு, அதில் இறுதியாக எந்த தகுதியும் மனுதாரருக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றும், தக்கரான இணை ஆணையர் / செயல் அலுவலருக்கு சாதகமாகவும், வழக்கினை தள்ளுபடி செய்தும் உத்தரவானது வழங்கப்பட்டுள்ளது. மேலும் திரு.தண்டபாணி ஐயா என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மேல்முறையீட்டு வழக்கானது விசாரணைக்கு…

எனவே மேற்கண்ட உத்தரவின் அடிப்படையில் அருள்மிகு தண்டபாணி சுவாமிகள் மடத்தின் சொத்துக்களை தனி நபர்களுக்கு விற்பனை செய்தது தவறானது என நீதிமன்றத்தில் உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து மேற்படி பதிவிற்கு ஆட்சேபனை பதிவு செய்து பார்வை குறிப்பு 10, 13 மற்றும் 15-இல் காணும் கடிதங்கள் தங்கள் அலுவலகத்திற்கு ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பழனி நகரம், வார்டு எண்.3, பிளாக் எண். 25 நகரப்புல எண். 998 மற்றும் 999-ல் (தற்போதைய பழனி நகர், வார்டு எண்.3, பிளாக் எண் 25 நகர நில அளவை எண். 2) உள்ள 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தினை தனி நபர்கள் யாரும் பத்திர பதிவுகளை மேற்கொள்ளக்கூடாது என பரிகார வேண்டி மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பார்வை குறிப்பு 16-இல் காணும் நீதிப்பேராணை மனு எண்.36248/2025 அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி மடத்தின் தக்கராக தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கில் எதிர்மனுதாரராக 1-எண், இணை சார்-பதிவாளர் அவர்களையும் மற்றும் பதிவினை சட்டவிரோதமாக மேற்கொள்ள முயன்ற தனி நபர்கள் மீதும் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடம் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமலும் தகவல் தெரிவிக்காமலும் தனி நபர்களால் மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பார்வை குறிப்பு 17-இல் காணும் நீதிப்பேராணை மனு தாக்கல் செய்யப்பட்டு அவ்வழக்கில் எதிர்மனுதாரராக 1-எண், இணை சார்-பதிவாளர் அவர்களையும் மற்றும் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடம் தொடர்பில்லாத தனி நபர் ஆகியோர் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டு, 10.04.2026-இல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவில் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1. In view of the above, this Writ Petition is allowed. The impugned refusal slip dated 01.04.2026 issued by the first respondent is hereby quashed. The first respondent is directed to register the sale deed dated 27.03.2026, subject to the document being otherwise in order. The said exercise shall be completed within a period of one (1) week from the date of receipt of a copy of this order.

இந்நிலையில் பார்வை குறிப்பு 18 வாயிலாக சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிப்பேராணை மனு எண். 10239/2026 உத்தரவுக்கு எதிராக அருள்மிகு தண்டபாணி சுவாமி மடம் நிர்வாகத்தின் மூலம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டதன் அடிப்படையில் மடத்தின் தக்கராக மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிப்பேராணை மேல்முறையீட்டு மனு (W.A (MD) SR.No. 53144/2026 நாள். 30.06.2026) தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேற்படி நீதிப்பேராணை மேல்முறையீட்டு வழக்கினை விரைந்து விசாரணைக்கு கொண்டு வரவும் நீதிப்பேராணை மனுவில் வழங்கப்பட்ட உத்தரவிற்கு தடையாணை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே மேலே தெரிவிக்கப்பட்டுள்ள மாண்பமை நீதிமன்றம், மாண்பமை உயர்நீதிமன்றம் மற்றும் மாண்பமை உச்ச நீதிமன்றம் மற்றும் தர்மசாசன ஆவண எண்.785/1888 ஆகியவற்றை கருத்தில் கொண்டு திருமடத்திற்கு தொடர்பில்லாத மற்றும் உரிமை இல்லாத தனிநபர்கள் மூலம் எந்தவித பத்திரப்பதிவும் மேற்கொள்ள வேண்டாம் எனவும் மேற்படி பத்திர பதிவு விண்ணப்பங்களை தள்ளுபடி செய்து நீதிமன்ற உத்தரவுகளை நிலை நிறுத்தி திருமடத்தின் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் உத்தரவுகள் வழங்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share