ஆன்லைன் மூலம் “வீட்டிலிருந்தே வேலை” (Work From Home) உள்ளிட்டவைகளின் பெயரில் பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்த விவகாரத்தில், நாடு முழுவதும் 19 இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிரடி சோதனை நடத்தியுள்ளது.

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ், தமிழ்நாடு, கேரளா மற்றும் ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் என மொத்தம் 19 இடங்களில் அமலாக்கத்துறை சென்னை மண்டல அலுவலக அதிகாரிகள் கடந்த ஜூலை 10 மற்றும் 11-ம் தேதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். தமிழ்நாடு காவல்துறை (FIR எண். 25/2025) மற்றும் தெலுங்கானா காவல்துறையின் வழக்குகள் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்பாவி மக்களைத் தொடர்பு கொண்ட மோசடியாளர்கள், ஆன்லைன் முதலீட்டுத் தளங்கள் மூலம் அதிக லாபமும், கமிஷனும் தருவதாகக் கூறி ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பி, பாதிக்கப்பட்டவர்கள் சுமார் ரூ. 14.95 கோடியைப் பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பியுள்ளனர். இந்தப் பணம் உடனடியாகப் பல போலி வங்கி கணக்குகளுக்கு (mule accounts) மாற்றப்பட்டு, பின்னர் கிரிப்டோகரன்சியாக மாற்றப்பட்டது.
இந்த மோசடியின் முக்கிய நபராக ரோஷன் ஃபியாஸ் (Roshan Fiaz) அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் தனது குடும்பத்தினர் மற்றும் M/s Wingsonwings Technology Pvt. Ltd, M/s Trading Wheels Pvt. Ltd போன்ற போலி நிறுவனங்கள் வழியாகப் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டுள்ளார்.
அமலாக்கத்துறை சோதனையின் போது
- ரூ. 3.35 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
- ரூ. 14.50 லட்சம் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது.
இதுதவிர, ஏராளமான டிஜிட்டல் சாதனங்கள், மடிக்கணினிகள் மற்றும் முக்கியமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகத் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
குற்றவாளிகளுடன் தொடர்புடைய வங்கி கணக்குகளில் இருந்த ரூ. 40 லட்சத்திற்கும் அதிகமான பணம் முடக்கப்பட்டுள்ளது.
